அத்தியாயம் - 4

“எலேய் மாறா… டேய்.. டேய்… நில்லுடா”

-மூச்சிரைக்கத் தன் முன்னே வந்து நின்ற கார்மேகத்தின் முகத்தை ஏறெடுத்தும் பார்க்காமல் கைகளைப் பின்னேக் கட்டிக் கொண்டு “என்ன?” என்றான் மாறன்.

“என்னடா?, இன்னும் உனக்குக் கோவம் தீரலையா?”

இரண்டு கைகளையும் தூசி தட்டிக் கொண்டுப் பின்னங்கழுத்தைத் தடவியவன் அப்போதும் அவர் முகம் பாராமல் “எனக்கென்ன கோவம் இருக்கப் போகுது” என்றான்.

“ஏன் டா ஒரு பெரிய மனுஷன் உன் பின்னாடியே ஓடி,ஓடி வந்து பேசுறானே!, அவனுக்குக் கொஞ்சமாச்சும் மரியாதை கொடுத்து முகத்தைப் பார்த்துப் பேசத் தோணுதாடா உனக்கு?, காட்டுப்பயலே!”

“நீ பின்னாடியே ஓடி ஓடி வந்து பேசுறதுக்கு நான் என்ன உன் முறைப்பொண்ணா?, நானா கேட்டேன் வந்து பேசுன்னு?, என்னத்துக்குத் தொல்ல பண்ற?” – சிடுசிடுத்தான் அவன்.

“நக்கலப் பாரு!, டேய் மாறா.. சித்தப்பன் மேல என்னடா கோவம் உனக்கு?, புள்ளையக் காணோம்ன்ற பதட்டத்துல தான் டா அன்னைக்கு உன் மேல கையை வைச்சிட்டேன்!, கௌரி வந்து நடந்ததைச் சொன்னதும் ரொம்ப வருத்தப்பட்டேன் டா!, அந்த மழை,வெள்ளத்த பொருட்படுத்தாம நீ அவளை பத்திரமா வீடு சேர்த்ததே பெரிய விசயம்!, தெரியாம திட்டிட்டேன் டா! அதுக்காக பேசாமலே இருப்பியா?” – கிட்டத்தட்டக் கெஞ்சியவரிடம்..

“ஹ்ம், அப்பன்-ஆத்தா இல்லாத எனக்கு ஒரு நல்ல அப்பனா இருந்து வழி நடத்துன ஆளு நீயி! நான் படிச்சதுக்கும்,பண்பட்டதுக்கும் காரணமே நீ தான்! நீயே என்னைய தப்பா நினைச்சுப் பேசுனா.. எனக்கு எப்பிடி இருந்திருக்கும்?, நான் பேசலன்னு இவ்ளோ பதறுறியே!, என்ட்ட நீ அன்னிக்கு பேசிட்டுப் போன விதத்தை நினைச்சு இன்னிக்கு வரைக்கும் மனசு வெம்பிப் போயிருக்கேன் நான்!, உனக்கு என்னிக்குமே என்னைய விட அந்தக் கழுத கௌரி தான முக்கியம்?”-என்றான் அவன்.

“டேய்…. டேய்… எனக்கு நீங்க ரெண்டு பேருமே ரெண்டு கண்ணு மாறி தான் டா!, கௌரி யாருடா?, என் அக்கா.. உன் மாரியத்த மக.. என்னைக்கா இருந்தாலும் நீ கட்டிக்கப் போற புள்ள!, அவளைக் காணோம்ன்னதும் உனக்குப் பதறல?, நெஞ்சைத் தொட்டு சொல்லு”

“சும்மா நான் கட்டிக்கப் போற புள்ள அது,இதுங்காத!, அந்தத் திமிர் பிடிச்சவளுக்கு என்னையல்லாம் புடிக்காது!, நான்-னாலே எரிஞ்சு விழுகுறவ என்னையக் கட்டிக்குவான்னு நான் காத்துக்கிடக்குனுமாக்கும்?, நான் எங்கப்பத்தா பார்த்து வைக்குற கருப்பியவோ,குள்ளச்சியவோ கட்டிக்கிறேன்”

“டேய் மாறா… என்னப் பேச்சு பேசுற?, கௌரி நல்லது,கெட்டது தெரியாத சின்னப்புள்ள டா! இப்போ அவளுக்கு என்னத் தெரியும்?, அதெல்லாம் அந்தந்த வயசு வந்ததும் தன்னால உன்னைப் புரிஞ்சுக்குவா!, மாரியோட கடைசி ஆச என்னன்னு உனக்குத் தெரியாதா டா மாறா?, அவ உங்க ரெண்டு பேர் கையையும் சேர்த்து வைச்சிட்டு செத்துப் போனவ டா!”

“ஹ்ம், அந்த அடங்காப்பிடாரிக்கு அதெல்லாம் எங்க புரியப் போகுது?”

“அதெல்லாம் புரியுறப்ப புரியும்!, கட்டி வைக்கிறேன்னு சொன்னதுக்காக.. சும்மா அவளைத் தொந்தரவு பண்ணிட்டுத் திரியாத. என்ன?”

“அடியாத்தே!, நான் என்ன உன்ன மாதிரி கவர்மெண்ட் ஆபிஸ்ல சீட்டைத் தேய்ச்சுக்கிட்டு நாள் பூரா வெட்டியா உட்கார்ந்திருக்கிற ஆளுன்னு நினைச்சியாக்கும்?, திங்கவும்,தூங்கவும் கூட நேரமில்லாம திரியுறவன் நான், அவ பின்னாடி அலையுறேனா?, மாமனுக்கும்,மருமவளுக்கும் நான்-னாலே எளக்காரமா இருக்கு?, போய்யா யோவ்… நீயாச்சு,அவளாச்சு!” – கடுப்புடன் நகரப் பார்த்தவனின் கையைப் பற்றியவர்..

“மாறா…. டேய் நில்லுடா.., கோவமில்லாம என்ட்டப் பேசுடா!, நான் அன்னிக்குப் பேசுனதுக்கு மன்னிப்புக் கேக்குறேன் டா” – எனக் கூற… “ச்சி,ச்சி” என அவர் கையை ஒதுக்கியவன் “மன்னிப்பு,அது,இதுன்னு என்ன பேச்சு சித்தப்பு இது?, நான் எத்தனை நாள் அப்படி உன்ட்ட முறைச்சிக்கிட்டு இருந்துறப் போறேன்!, சாயங்காலம் வந்து சேரு!, அப்பத்தாட்ட சொல்லி கருவாட்டுக் குழம்பு வைக்கச் சொல்றேன்” என்றான்.

முகம் மலர்ந்து சிரித்தவர் “காரத்தைக் கம்மியா போடச் சொல்றா!, கிழவி கைப்பக்குவத்தை இன்னிக்கு வரைக்கும் யாராலயும் அடிச்சுக்க முடியல” என்றபடி கண்ணாடியைச் சரி செய்ய “கால,காலத்துல கல்யாணத்தப் பண்ணியிருந்தன்னா.. இப்பிடி சோத்துக்குக் கஷ்டப்படுற நிலைமை வந்திருக்காதுல்ல?” என்றான்.

“காலம் கடந்து போனப்புறம், இப்போ யோசிச்சு என்ன பிரயோஜனம்?, எனக்கு நீயும்,கௌரியும் புள்ளைங்களா இருக்கீங்களே!,அது போதாது? கடைசி காலத்துல எனக்குச் சோறு போட்டுத் தூக்கிப் போட மாட்டீங்க??” எனக் கேட்டுக் கண்ணைத் துடைத்துக் கொள்ள.. “சித்தப்பு!, போதும் போதும் வசனம் பேசுனது!, சிவனாண்டி வீட்டுக் காது குத்துக்குத் தான போற?, வா சேர்ந்தே போவோம்..” என்றபடி அவரை அழைத்துக் கொண்டு நடந்தான்.

விசேஷ வீட்டில் கூடியிருந்தப் பெண்களின் மத்தியில் கௌரியைக் காணவில்லையென்றதும் “என்ன சித்தப்பு, உன் மருமவளைக் காணோம்?, ஊர் விசேஷம் எதுலயும் கலந்துக்காம அவங்கப்பனை மாறி இருக்கப் போறாளாமா அவ?, இந்தச் சிறுக்கியப் போய் நீயி என் தலைல கட்டப் பார்க்குற?” என்று கார்மேகத்திடம் விசாரித்தான் மாறன்.

வருவோர்,போவோரிடம் நலம் விசாரித்தபடி நடந்து கொண்டிருந்தக் கார்மேகத்திற்கு வழக்கம் போல் அவன் தனது மருமகளைப் பற்றிப் பேசியதும் சுரு,சுருவெனக் கோபம் தலைக்கேற.. “எலேய், பொடிப்பயலே! உன்னைய யாருடா கட்டிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துறது?, ஏதோ இந்த ஊர்லயே படிச்சவனா இருக்கியே!, படிச்சுப் பண்பட்டாலும், நகரத்துக்குப் போயி நாலு காசு சம்பாதிக்க நினைக்காம.. பொறந்து,வளர்ந்த ஊர்ல வேலை பார்த்து நாலு பேருக்கு நல்லது செய்ய நினைக்கிறியேன்ற எண்ணத்துல தான் உன்னை எம்புள்ளைக்குக் கட்டிக் கொடுக்க தீர்மானிச்சேன்! போதாததுக்கு என் அக்காகாரி வேற உன்னையக் கை காட்டிட்டு செத்துப் போயிட்டா!, அதுக்காக நீ என் மருமவள மட்டமாப் பேசுவியோ?, உனக்கெல்லாம் இந்த ஜென்மத்துல எவளும் பொண்ணு தர மாட்டா டா!, காட்டுப்பய, காட்டுப்பய!, பத்து நிமிசம் இவன் கூட நின்னு பேச முடியுதா பாரு” என்று திட்டி விட்டு விறுவிறுவென முன்னே நடந்து விட்டார்.

“போய்யா யோவ் போய்யா.. மருமகள ஒரு வார்த்தை சொன்னா போதும், அப்பிடியே பொங்கிற வேண்டியது!, சோடாபுட்டி” என்று அவனும் பதிலுக்கு முணுமுணுத்து விட்டு.. எதிரே வந்தக் கிழவியொருத்தியை நிறுத்தி “என்னாத்தா உன் சிநேகிதி பேச்சி இல்லாம நீ எங்கயும் வர மாட்ட?, எங்கக் கிழவியையும்,பேத்தியையும் ஆளக் காணோம் இன்னைக்கு?” என்று விசாரித்தான்.

“ஆமாப்பு!, அந்தப் பாழாப் போன பயலுக்கு புள்ளையக் கொடுத்து அவளை எமன் கைல தூக்கிக் கொடுத்தது மட்டுமில்லாம, பேத்தியையும் அவன் கிட்ட விட்டுப் போட்டு முழிச்சுக்கிட்டுத் திரியுறா அவ!, ஊர்ப்பொட்டச்சிகள்லாம் எங்க போனாலும்,அவங்கப்பனைப் பத்தி பேசியே… கூடச் சேர்த்துக்க மாட்டேங்குறாளுகன்னு கவுரி புள்ளைக்கு மனத்தாங்கலாம்!, எம் பேத்திக்குப் புடிக்காத இடத்துக்கு நான் மட்டும் எதுக்குப் போயிக்கிட்டுன்னு அந்தக் கூறு கெட்டவளும் வாசலைத் தாண்ட மாட்டேங்குறாப்பு” என்று கிழவி புலம்பியது.

“ஹ்ம்ம்ம்” எனத் தாடியைத் தடவியவனிடம் “உன்ன மாறி 4 இளந்தாரிக ஒன்னு சேர்ந்து அந்த ஒண்டிவீரன் சங்க அறுத்துத் தூக்கிப் போடுறதை விட்டுப்போட்டு, இன்னும் அவனை உயிரோட விட்டு வைச்சிருக்கீங்களேப்பு!, இன்னும் எத்தன நாளைக்கு அந்தச் சண்டாளப்பயலோட நாம போராடனுமோ” – என்று தலையில் அடித்தபடி கிழவி நகர்ந்து விட.. மாறன் சற்றும் யோசிக்காமல் கௌரியின் வீடு நோக்கிப் புறப்பட்டான்.

அந்த ஊரிலேயே பெரிய வீடு என்றழைக்கப்படும் தனி வீடு ஒண்டிவீரனுடையது. பரம்பரைப் பணக்காரன்!, ஏகப்பட்ட ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து ஊரில் பலருக்குப் பிழைப்புக் கொடுக்கும் பண்ணையார்! போதாதற்கு அரசியல்வாதிகள் சிலருடன் நெருங்கிய பழக்கம் வேறு! அந்தக்காலத்திலேயே அம்பாசிடர் காரில் வந்து செல்பவனின் பகட்டைக் கண்டு தன் மகள் மாரியம்மையை அவருக்கு மணமுடித்துக் கொடுத்தார் பேச்சி.

ஒண்டிவீரனின் தந்தை உயிரோடிருக்கும் வரை அவர்களது திருமண வாழ்க்கையில் எந்தவிதப் பிரச்சனையும் வந்ததில்லை. கௌரியின் தாத்தா தென்னம்பாண்டி சிவலோகப்பதவி அடைந்த பிறகு தொடங்கியது ஒண்டிவீரனின் ஆட்டம்! சம்பாதிக்கும் காசு,பணத்தை முழுதாக அனுபவிக்கும் நோக்கத்துடன் தொடங்கியது குடி,கூத்தி எனும் ஆசை! அதன் பின் போதாத அரசியல்வாதிகளின் சகவாசமும் சேர்ந்து கொள்ள.. ஊரில் அவருக்கிருந்த செல்வாக்கை உபயோகித்து அவர் செய்யாத அட்டகாசமில்லை! ஊரை விட்டுச் சில மைல் தூரத்தில் கட்டப்பட்டிருந்த ஃபேக்டரிகள் தங்களதுக் கழிவுகளைக் கொட்டுவதும்,நிலத்தடி நீரை உறிஞ்சுவதும் இவரது துணையுடனே நடந்தது.

படிப்பறிவில்லாதக் கிராம மக்களை ஏமாற்றுவது அவருக்கு எளிதாக இருந்த நேரத்தில் கார்மேகம் மற்றும் அவர் வழிகாட்டுதலோடு படித்துப் பட்டம் பெற்ற மாறன் போன்றோர் விசயம் புரிய ஆரம்பித்ததும், ஊர் மக்களிடம் அத்தனையையும் எடுத்துக் கூறி, விளைச்சல் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருவதற்கானக் காரணங்களை விளக்கி அன்று முதல் இன்று வரை அவரை எதிர்த்து வருகின்றனர்.

ஆனால் போலீஸிலிருந்து,மினிஸ்டர் வரை அத்தனை பேரின் ஆதரவையும் பெற்ற ஒண்டிவீரன் தனது செல்வாக்காலேயே ஊர் மக்களின் கண்களில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருந்தார்.

கார்மேகம் இது அத்தனையிலும் பின்னணியிலிருந்து மட்டுமே இயங்குவார். அவர் வாழ்வில் அவர் பெரிய சொத்தாக எண்ணிக் கொண்டிருந்த ஒரே அக்கா மாரி, தன் கணவனின் இந்தப் போக்கைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட பின், அவரது வாரிசான கௌரியின் மீது உயிராய் இருந்து அவள் நலம் பேணுபவர்!

அக்கா கணவனுடன் உறவாடுவது பெரிதாகக் குறைந்து விட்டாலும், அந்த வீட்டிற்குச் செல்வதையோ,கௌரியைக் காண்பதையோ அவர் நிறுத்தியதில்லை. ஒண்டிவீரனும் இதற்குப் பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை. அதே வீட்டின் மறு மூலையில்.. இருக்குமிடம் தெரியாமல் வளரும் சொந்தப்பெண் மீதே அவர் அக்கறை காட்டியதில்லை! இதில் கார்மேகம் அவரது கண்களுக்குப் புலப்பட்டால் தான் ஆச்சரியம்! ஆனால்.. அவ்வப்போது ஊர் மக்களின் பின்னே நின்று கொண்டு அவர் தன்னையே எதிர்க்கும் சேதியெல்லாம் அறிந்தவர் தான் ஒண்டிவீரன்! யானைக் காலடியில் நசுங்கிச் சாகும் எறும்பை எண்ணி எதற்குக் கவலைப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் அவரை இன்று வரை விட்டு வைத்திருக்கிறார்.

அந்தப் பெரிய வீட்டின் அருகிலேயே குடிசை ஒன்றில் வசித்து வந்தார் பேச்சி. பேத்திக்காக மட்டுமே அந்த வீட்டில் காலடி பதிக்கும் ஜீவன். எப்படியேனும் அவளை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்த பின்பு தான் தன் உயிர் போக வேண்டுமென்கிற எண்ணத்துடன் வாழ்பவர். அவளது உணவு,உடை அவளுக்கான பாதுகாப்பு அத்தனையும் கிடைப்பது பேச்சியிடமிருந்து தான். பெற்ற கடனுக்காகக் கணக்கரின் மூலம் மகளுக்குத் தேவையான காசை அள்ளி வீசும் அப்பனுக்குப் பிறந்ததன் பலன்! தனது பாட்டியை அண்டி வாழும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தாள் கௌரி.

பேச்சியின் உடன் பிறந்த சகோதரி முத்தரசியின் பேரன் தான் நன்மாறன்! ஐந்து வயதிலேயே பெற்றோரை விஷக்காய்ச்சலில் பலி கொடுத்து விட்டு.. முத்தரசியை அண்டி வாழ்ந்தவன். அப்பன்-ஆத்தா இல்லாமல் வளர்ந்தவன் என்பதால் பேச்சி குடும்பத்திற்கு மாறனின் மீது மிகுந்த அன்பு.

அதிலும் கௌரியின் தாய் மாரிக்கு சிறு வயதிலிருந்தே மாறனின் தந்தை மீது கொள்ளைப் பிரியம்! அந்தப் பிரியம் மாறனின் மீதும் தொடர.. எப்படியேனும் தன் மகளை அவனுக்குத் திருமணம் செய்து கொடுக்க வேண்டுமென்று.. உயிரோடிருந்த வரை விடாமல் கூறிக் கொண்டு திரிந்தாள்.

பேச்சி,முத்தரசியின் குடும்பங்கள் வாழையடி வாழையாக பரம்பரை நிலங்களில் விவசாயம் செய்து வருபவர்கள்! சொத்து,பத்தில் எவ்விதக் குறையும் கிடையாது! விவசாய நிலங்கள் மட்டுமல்லாது மாறனின் பெயரில் பக்கத்துக் கிராமத்தில் சினிமாக் கொட்டகையும்,திருமண மண்டபமும் இருந்தது! சுற்றியிருந்த கிராமங்களில், குறிப்பாக இவர்களது சாதி,சனத்தினர் பெரும்பாலானோர் திருமணம் செய்வது இவனது மண்டபத்தில் தான்!

கார்மேகத்தின் வழிகாட்டுதலில் விவசாயப் பிரிவில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றிருந்த மாறன் அவ்வூரிலேயே பெரிய படிப்பு படித்தவன் என்னும் பெயர் பெற்றவனாயிருந்தான். படிப்பறிவு,அனுபவ அறிவு அத்தனையையும் ஊர் மக்களின் நன்மைக்கு மட்டுமே உபயோகப்படுத்தும் நல்லவனாகவும் இருந்தான்!

புதுமையான விவசாய முறைகளைக் கையாளுவதிலும்,அதை ஊர் மக்களிடம் கொண்டு செல்வதிலும் அவன் வல்லவனாயிருந்தான். படித்தவன் என்பதே ஊராரின் மனதில் அவனுக்கு செல்வாக்கைப் பெற்றுத் தர, போதாதற்கு ஊர்ப்பிரச்சனைகள் அனைத்திலும் முன்னால் நிற்கும் அவன் குணம், ஊருக்குள் எங்கு,என்ன வெடித்தாலும் ‘மாறனைக் கூட்டி வாங்கப்பா’ என ஊர் மக்கள் கூறும் அளவிற்கு அவனை உயர்த்தியிருந்தது.

விசேஷ வீட்டிலிருந்து நேராக பேச்சியின் குடிசையை வந்தடைந்த மாறன் “அப்பத்தா.. அப்பத்தா..” என்று வாசலில் நின்று கொண்டு குரல் கொடுத்தான்.

“மாறனா.. வாப்பு…. அப்பத்தா கோழி உறிச்சுக்கிட்டிருக்கேன் ராசா” – குடிசையின் இடது புறத்திலிருந்துக் குரல் கொடுத்தார் பேச்சி. அவரருகே சென்றவன்…

“அதான் விசேஷ வீட்ல கறி சோறு போட்றாய்ங்கள்ல, நீ வேற என்னத்தக் கோழிய உறிக்கிறவ?”

“எல்லாம் எம் பேத்திக்குத் தேன்!, இந்தக் காவாலிப்பயலுக்கு மகளாப் பொறந்த பாவத்துக்கு எம்புள்ள இப்புடி சாதி,சனத்தோட ஒட்ட வழியில்லாம வீட்டுக்குள்ளேயே கிடக்குறாளே ராசா”

“ஏன் எவன் என்ன சொல்லிறப் போறான்?, இவ வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்துக்கிட்டா ஊர்க்காரன்ய்ங்க வாயை மூடிட முடியுமா?, நீ என்னாத்தா.. புள்ளைக்கு எடுத்துச் சொல்லி வெளிய கூட்டியாராம, உள்ள வச்சு அழகு பார்த்துட்டிருக்க?, 4 இடத்துக்கு போய் வந்தா தான, நீ நினைக்கிற மாறி நல்ல மாப்பிள்ளையா பார்த்து உம் பேத்திக்குக் கட்டி வைக்க முடியும்?”

“நல்ல மாப்பிள்ளையா?, ஜல்லிக்கட்டுக் காளையாட்டம் நீ கண்ணு முன்ன நிக்கும் போது, நான் ஏன் எவனையும் தேடப் போறேன்?” – கிழவி நொடித்துக் கொள்ள.. கர்வத்துடன் மீசையை முறுக்கிக் கொண்டவன்..

“அதெல்லாம் நடந்தா பார்ப்போம் அப்பத்தா..”-என்றான்.

“பொய் பேசாதப்பு!, உனக்கும் கௌரியைக் கட்டிக்க ஆச!, ஆனா.. அப்பப்ப அதை எங்க வாயாலச் சொல்லக் கேட்டு சந்தோசப் பட்டுக்குற” – பேச்சி கேலி செய்து சிரிக்கக் கடுப்பாகிப் போனவன்...

“கிழவி வாயைக் குறை முதல்ல!, போ… போய் உம் பேத்தியச் சீக்கிரம் கிளம்பி வரச் சொல்லு!, எவன் என்ன பேசுறான்னு நானும் பார்க்குறேன்”-என்றான்.

“வேணாம்ப்பு!, சின்னப்புள்ள மனச என்னத்துக்கு நோகடிச்சுக்கிட்டு?”

“ப்ச், கிழவி போ-ன்றேன்ல?, பேசுறவன் பல்லு மேலயே ரெண்டு போடு போடுறதை விட்டுப் போட்டு எங்கனயும் போகாம பாட்டியும்,பேத்தியும் வீட்டுக்குள்ளாரயே இருப்பீங்களாக்கும்?, போ… போய் வரச் சொல்லு அந்தக் கழுதய”

-அவன் விரட்டியதில் ஓடிய பேச்சி “கௌரி… அடியேய் கௌரிரிரிரிரிரி……” என்று குரல் கொடுத்தார்.

வீட்டு வாசலின் மறு ஓரத்தில் மர நாற்காலியில் அமர்ந்திருந்த ஒண்டிவீரன் சிறிய முகக்கண்ணாடியொன்றை கையில் வைத்துப் பார்த்தபடித் தன் தாடி முடியை ஆராய்ந்து கொண்டிருந்தார்.

மாமியாரின் குரல் கேட்டு ஒரு நிமிடம் திரும்பியவர் பின் அவரைக் கண்டு கொள்ளாமல் “அம்பட்டையான எங்கடா?” என்று எதிரே நின்றவனிடம் விசாரித்தார்.

“இதோ வந்துட்டேனுங்கய்யா” – என்றபடி சவரப் பெட்டியுடன் ஓடி வந்த ஒருவன், அவர் முகத்தில் தண்ணீரைத் தெளித்துத் தாடியை சிரைக்கத் தொடங்கினான்.

பேச்சியின் குரல் கேட்டு, பக்கவாட்டுக் கதவு வழியாக வெளியே வந்த கௌரி தூரத்தில் குடிசை வாசலில் நின்றிருந்த மாறனை நோக்கி விட்டு “என்னாத்தா?” என்றாள். அந்தக் கடத்தல் சம்பவத்திற்குப் பிறகு அவனை இன்று தான் காண்கிறாள்!

“நம்மள சிவணாண்டி வீட்டு விசேசத்துக்குக் கூட்டிப் போக.. மாறன் வந்திருக்கிறான். விரசாப் போயி பாவாடை,தாவணி போட்டுக்கிட்டு நகை,நட்டெல்லாம் மாட்டிக்கிட்டு வாடியாத்தா” – கம்மிய குரலில் மருமகனின் செவிகளுக்கு எட்டா வண்ணம் விறுவிறுவெனப் பேசினார் பேச்சி.

“நான் தான் எங்கயும் வர மாட்டேன்னு சொன்னேன்ல?, எதுக்கு என்னைய தொந்தரவு பண்ணுற?” – சுவற்றிலிருந்தச் சுண்ணாம்பைக் கீறியபடி எரிச்சலோடு மொழிந்தவளிடம்..

“எவன்,என்ன பேசுனாலும் நான் பல்லைத் தட்டுறேன்னு சொல்லிட்டு நிக்கிறான்டி உன் மாமன்!, அவன் இருக்கும் போது உனக்கென்ன பயம்?”

“ம்க்கும்!, ஊர்ப்பயலுகளை விட என்னைய அதிகமா கேலி பேசி சித்ரவதை பண்ணுறதே இந்தக் காட்டுப்பய தான்! இவனை நம்பி நான் வரனுமா?”

“அவன்,இவன்னு மருவாதயில்லாம பேசுனேனா.. வாயைக் கிழிச்சிருவேன்! கட்டிக்கப் போறவனை இப்பிடித்தான் பேசுவியாடி?, போ, போய் துணிய மாத்திட்டு வா!”

-முசுட்டு முகத்தை மேலும் சுருக்கிய வண்ணம் எரிச்சலுடன் நின்றிருந்தவளைக் கண்டு விட்ட மாறன், தானும் பேச்சியின் அருகே வந்தான். வாசலில் அமர்ந்திருந்த ஒண்டிவீரனிடம் ஒரு பார்வையைச் செலுத்தியவன்..

“என்ன கழுத?, ஊரே விசேசத்துக்குக் கூடியிருக்கிறப்ப?, நீ இங்க வீட்ல உக்கார்ந்து என்ன சொவத்தைச் சுரண்டிட்டிருக்க?” என்று விசாரித்தான்.

தகப்பன் இருப்பது தெரிந்தும் குரலை உயர்த்திப் பேசுபவனைக் கண்டு நடுங்கிப் போனது கௌரிக்கு. வாசலை எட்டி,எட்டிப் பார்த்தபடி.. “ச..சத்தம் போடாத மாமா!, நா..நான் ஆத்தாவோட வாரேன்” என்று பயந்து போன குரலில் கூறினாள்.

“என்னத்துக்குடி பயப்படுற?, ஊர்ப்பயலுக முறைச்சுக்கிட்டு நின்னா.. நீ மொத்தமா ஒதுங்கிருவியோ??, தென்னம்பாண்டி பேத்தி நீயி!, அவருக்குப் பொறவு வந்ததுவேணா.. தறிகெட்டத் தறுதலையா ஊர்க்குள்ள நாட்டாம பண்ணலாம்! ஆனா.. அந்த மனுஷன் செஞ்சுட்டுப் போன நல்ல விசயம்.. ஊர்க்காரய்ங்க ரத்தத்துல இன்னும் ஓடுது! அப்பேர்ப்பட்ட நீயி.. வீட்டுக்குள்ள ஒடுங்கி உக்கார்றதா?, உங்காத்தா மாறி புருசன் நடவடிக்கைக்குப் பயந்துக்கிட்டு தூக்குல தொங்குன கோழையா இருக்காத! நம்ம சாதிக்காரனுக்கே உரிய வீரம், நாடி,நரம்பு அத்தனைலயும் இருக்கனும். புரியுதா?”- எனக் கூற..

“எலேய் மாறா.. என்னடா வாய் நீளுது?, எங்க நின்னு பேசிக்கிட்டிருக்கன்னு தெரியுதுல்ல?” – ஒண்டிவீரனின் அருகே நின்றிருந்தவன் மாறனை நோக்கிக் குரல் கொடுத்தான்.

வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டுத் தன் மீசையை முறுக்கியபடி ஒண்டிவீரனை நோக்கியவன் “இந்தா.. மாமா.. உன் அள்ளக்கையெல்லாம் என் முன்னக் கைய நீட்டி பேசுற அளவுக்கு இந்த மாறன் சாதாரண ஆள் கிடையாது. சொல்லி வையி!” என்றான்.

அவனைத் திரும்பியும் பாராமல், முகக்கண்ணாடியிலேயே பார்வையைப் பதித்திருந்த ஒண்டிவீரன் “விடுடா மாயி!, நான் பார்த்து வளர்ந்த பொடுசு அவன்!, இந்த மாறி துள்ளிக்கிட்டு வந்த எத்தனையோ காளைய அடக்கிட்டு வந்தவன் தேன் நானு!,” என்றவர்.. மாறனிடம் திரும்பி..

“சாயப்பட்டறை விசயத்துல நாலு மணி நேரம் என்னைய ஜெயில்ல உட்கார வைச்சுட்டதால நீ வீரனாயிட முடியாது!, என் பலம் தெரியாம மோதிக்கிட்டு இருக்கிற!, நேரம் பார்த்து அத்தனையையும் ஒடுக்கிப் போடுவேன்! பார்த்து இருந்துக்க” என்று எச்சரித்தார்.

“60 வயசுல உனக்கிருக்கிற பலம், 27 வயசுல எனக்கிருக்காதா மாமோய்?, நீ என் கிட்ட மோதப் போற நேரத்தை எதிர்பார்த்துட்டுத் தான் நானும் காத்திட்டிருக்கேன்” என்று பதில் கூறியவன் கௌரியின் புறம் திரும்பி “இன்னுமாடி இங்க நிக்கிற?, ஓடுறி கழுத” என்று விரட்டினான்.

இருவருடைய சம்பாஷணையையும் கேட்டு விதிர்த்துப் போய் நின்றிருந்த கௌரி, அவனது அதட்டலில் ஓடிச் சென்று ஒரு தாவணியைப் போட்டுக் கொண்டு திரும்பி வந்து அவன் முன் நின்றாள்.

சவரம் செய்து முடித்துத் தோளிலிருந்தத் துண்டினால் முகத்தைத் துடைத்த படி வாசல் படியேறிய ஒண்டிவீரனின் பார்வை மகள் மீது படிந்தது.

அவர் நோக்கியதும் தலையைக் குனிந்து கொண்டு சுவரோரமாய் மறைந்தவளைக் கண்டு எரிச்சலுற்ற மாறன் “இன்னும் என்னடி உள்ள ஒளியுற, இறங்கு கீழ” என்று அதட்டினான்.

கண்களில் நீர் கோர்க்க.. ஆத்தாவின் முகத்தைப் பார்த்தபடி உதட்டைக் கடித்த கௌரிக்குத் தந்தையை எண்ணிக் குலை நடுங்கியது. அவர் இவளிடம் உரையாடி பல வருடங்கள் இருக்கக்கூடும்! ஆனால்.. அவர் வீட்டுக்குள் இருக்கும் ஒவ்வொரு நொடியும் அவர் பார்வை தன் மீதே படிந்திருப்பது போன்றொரு மாயை அவளுக்கு எப்போதும் உண்டு!

அவளது பார்வையில் தெரிந்த பயத்தைக் கண்டவன் சிறிதும் யோசிக்காமல்.. விறுவிறுவெனப் படியேறி அவள் கரத்தைப் பற்றி “இந்தாளுக்கெல்லாம் பயந்துக்கிட்டிருக்க?” என்று முனகியபடி இழுத்து வந்து பேச்சியிடம் விட்டு “கூட்டி வா ஆத்தா” என்றபடி முன்னே நடந்தான்.

“என்னண்ணே!, நம்ம வீட்டுக்குள்ள நுழைஞ்சு, நம்ம புள்ள கையை புடிச்சு இழுத்துட்டுப் போறான். இந்தக் கிழவியும் இதுக்குத் துணை போகுது” – ஒண்டிவீரனின் அள்ளக்கை அவரது காதைக் கடிக்க.. வாசல் தாண்டி செல்லும் மூவரையும் விடாது நோக்கிய வீரன், துண்டை உதறியபடி வீட்டினுள் நுழைந்தார்.

மாறனைப் பின் தொடர்ந்து நடந்த பேச்சி பேத்தியின் காதில் “பார்த்தியாடி?, எப்பிடி உங்கப்பனையே எதிர்த்துப் பேசுறான் எம் பேராண்டி?, இவனை விட எந்த ஆம்பளடி உனக்காகக் காத்திட்டிருக்கான்னு அவனைக் கண்டாலே வெறுக்குற” எனக் கூற “ப்ச்” என முகத்தைத் திருப்பினாள் கௌரி.

வீட்டிலிருந்த வரை இதோ வந்து விடுவேன் என்று நின்றிருந்த கண்ணீர், வீட்டை விட்டுப் படியிறங்கியதும் டாட்டா காட்டி விட.. ஆத்தா கூறியதைக் கேட்டது வேறு அவளது தைரியத்தைக் கொஞ்சம் அதிகப்படுத்தியிருந்தது. முன்னே செல்லும் மாறனைக் குறுகுறுவெனப் பார்த்தபடி நடந்தவளின் பார்வையை உணர்ந்ததாலோ என்னவோ, திடீரெனத் திரும்பி நோக்கினான் அவன்.

“இந்தா பேச்சி….” –என்றபடி வழியிலிருந்தக் குடிசையிலிருந்து ஒரு பெருசு குரல் கொடுக்க.. “என்னாடியாத்தா?” என்று நின்று விட்டவரைக் கண்டு கொள்ளாமல் முன்னே நடந்து வந்தவளை நோக்கினான் அவன்.

அவசர,அவசரமாகக் கிளம்பியதில் நீண்டு பின்னப்பட்டிருந்தக் கூந்தல், வகிட்டிலிருந்து விலகி நெற்றி மீதுத் தன் போக்கில் புரண்டு கொண்டிருக்க.. கழுத்தை ஒட்டி அவள் அணிந்திருந்தப் பதக்கம் அவளைச் சுத்த கிராமத்துக்காரியாகக் காட்டிக் கொண்டிருந்தது.

தன்னைக் கடந்து செல்லவிருந்தவளை மேலிருந்துக் கீழ் வரை நோக்கியவன் “என்னடி, ஒரு மாதிரி பார்க்குற?” என்று வினவினான்.

அவன் கேள்வி காதில் விழாதது போல் நடந்தவளை முறைத்து வேக எட்டுக்களுடன் அவளருகே சென்றவன் “ஏய் நில்றி” என்றான்.

“என்ன?” – அவன் முகம் பாராமல் எங்கோ பார்த்தபடி, தாவணியைத் திருகியவளிடம்..

“நானும் பார்த்துட்டுத் தான் டி இருக்கேன்?, அன்னிக்கு ராத்திரி தேனூர் கோயில்ல வைச்சு என்னையக் கட்டிப்புடிச்சதிலிருந்து நீ ஒரு மார்க்கமாத் தான் இருக்கிற!, எதுவும் ஹார்மோன் ரியாக்ஷனோ?, 17 வயசுல இந்த மாதிரியெல்லாம் தோணத் தான் டி செய்யும்! கட்டுப்பாடு இருக்கனும். சரியா??” –என ஒழுக்கசீலனாக அறிவுரை கூறினான் அவன்.

கையைக் கட்டிக் கொண்டு அவனை முறைத்துப் பார்த்தாள் அவள்.

“எனக்கு சொல்ற மாதிரி உனக்கு நீயே சொல்லிக்கிறியோ?” – கௌரி

பல்லைக் கடித்தபடி பின்னந்தலையைக் கோதியவன் “பதிலுக்குப் பதில் வக்கணையா பேசாம, உன்னைய விட மூத்தவன் அறிவுரை சொன்னா கேட்டுக்கடி” என்று கெஞ்சாத குறையாகக் கூறினான் அவன்.

“எனக்கு எந்த ஹார்மோனல் ரியாக்ஷனும் இல்ல!, என் நினைப்பெல்லாம் இந்த வருஷம் நடக்கப் போற பப்ளிக் எக்ஸாம் மேல மட்டும் தான்”

“ஓஹோ!!” என்று தாடியைத் தடவியவன் “அதுக்காக.. எப்பவும் படிப்பு,படிப்புன்னு இருக்குறதும் தப்புடி ராங்கி!, என் கூடப் படிச்ச ஒருத்தன், எந்நேரமும் படிச்சுப்படிச்சே மெண்டலாப் போயிட்டான் தெரியுமா?” என சிறுபிள்ளைத்தனமாகக் கூறி வைக்க கௌரிக்கு சிரிப்பை அடக்குவது பெரும்பாடாகி விட்டது.

“என்ன நீயி, வயசுக்கேத்த உணர்வுகளுக்கும் இடம் கொடுக்கக் கூடாதுன்ற?, படிப்பைப் பத்தி மட்டும் தான் நினைக்கிறேன்னாலும், இப்டிப் பேசுற?, உன் பிரச்சனை தான் என்ன மாமா?” – எரிச்சலுடன் வினவியவளிடம்..

“எல்லாம் நேரம்டி!, என் கையப் பிடிச்சு நடை பழகுன கழுதையெல்லாம் இன்னிக்கு என்னையவே நக்கல் அடிக்குது!” என்று கூறியபடி மீசையை முறுக்கியவன் பார்வையைச் சற்றே இறக்கி “என்ன தான் உன்னைய சின்ன வயசுல முழுசாப் பார்த்துருக்கேன்னாலும், இப்ப இப்டில்லாம் இடுப்பு தெரியுற மாதிரி துணி போடாதடி!, நீ தேனூர் கோயில்ல வைச்சு என்னைய இறுக்கக் கட்டிக்கிட்டதுல இருந்தே மாமன் ஒரு மாதிரித் திரியுறேன்!, அப்புறம் மாமன் இங்க கை வைச்சான், அங்க கை வைச்சான்னு என் பேரைக் கெடுத்துட்டுத் திரிவ!” என்றான்.

அவன் கூறியதும் விறுவிறுவெனத் தாவணியைச் சரி செய்து கொண்டவள் அவனை முறைத்து “பொறுக்கிப்பய மாதிரி நடந்துக்காத மாமா” என்று கத்த…

“அப்படியே நீயி, மாறன் என் கையப்புடிச்சு இழுத்துட்டியான்னு ஒப்பாரி வைச்சன்னு வையி, பேச்சி அப்பத்தா இதான் சாக்குன்னு உன்னைய எனக்குக் கட்டி வைச்சுரும். உனக்கு என்னையக் கல்யாணம் பண்ணிக்குறதுல இஷ்டமில்ல தான?”-என்று வினவினான்.

“……………”

பதில் பேசாமல் முறைத்துக் கொண்டே நின்றவளை மையலுடன் நோக்கிச் சிரித்து “அப்ப நான் என்ன செஞ்சாலும் வெளிய சொல்லக் கூடாதுடி” எனக் கூறி.. மீசையை முறுக்கியபடியேக் கண்ணடித்து “நாளைக்கு மாந்தோப்புப் பக்கம் வர்றியா?” என்று விசாரித்தான்.

நெஞ்சு ஏறி,இறங்க இடுப்பில் கை வைத்து முறைத்தபடி “என்னைய என்ன அந்தத் தெற்குத் தெரு ஜோதின்னு நினைச்சியோ!, போன வாரம் நீயி அவளோட புளியந்தோப்புல கூத்தடிச்சதெல்லாம் எனக்குத் தெரியாதுன்னு நினைச்சியா?, களவாணிப்பயலே” என்றுத் திட்டியவள் “ஆத்தாஆஆஆஆஆஆ” என்று கத்த…

“ஏய்.. ஏய்.. ஏய்.. வாய மூட்றி.. மூட்றி” என்று பதறிக்கொண்டு அருகே வந்தவன் அவள் கழுத்தைப் பற்றித் தன் வலது கையால் அவள் வாயை இறுக மூடித் தரதரவென முன்னே இழுத்துச் சென்றான்.