அத்தியாயம் - 5

“உனக்கு ஏன் எவனும் பொண்ணு தர முன்ன வரலன்னு இப்ப தான் சித்தப்பு புரியுது!”

-இரவு பதினோறு மணியைக் கடந்திருந்த நிலையில் மங்கிய தெரு விளக்கின் வெளிச்சத்தில் வீதி உலா சென்று கொண்டிருந்தனர் மாறனும்,கார்மேகமும்.

என்ன தான் நாகரீகம் பெருகி, வீட்டுக்கொருக் கழிப்பறை வசதி வந்து விட்டாலும் கூட, வெட்டா வெளியில், இயற்கைக் காற்றை சுவாசித்தபடி இரவுக் கடனைத் தீர்க்கச் செடியோரமாய் ஒதுங்கும் பெருசுகளுக்குக் குறைவில்லாதக் கிராமம் அது என்பதால், போர்த்தியக் கம்பளியுடனும்,கையில் விளக்குடனும் சில,பல தாத்தாமார்கள் அந்த இரவிலும் தெருவில் தென்பட்டனர்.

பெரும்பாலும் அனைத்து வீடுகளின் முன்புறமும் மரம்,செடி,கொடிகள் வளர்க்கப்படும் பழக்கமிருந்ததால் சிலு,சிலுக்காற்றுக்கு அங்கே பஞ்சமில்லாமல் இருந்தது. அதனாலேயே வீட்டுக்குள் ஃபேனுக்கடியில் படுத்துறங்காமல் பலர் திண்ணையிலும், கயிற்றுக் கட்டிலிலும் துயில் கொண்டிருந்தனர்.

அவ்வப்போது குரைத்தபடிப் பின் தொடரும் நாய்களைக் கண்டு கொள்ளாமல், ஏதேதோ பறவைகள் எழுப்பிய வினோத ஒலிகளைப் பொருட்படுத்தாதுத் தீவிரமாகப் பேசிய படி நடந்து கொண்டிருந்தனர் இருவரும்.

“என்னதுக்கு அப்படி சொல்ற?”-கார்மேகம்

“ராவானா போதும், 2 கட்டிங் இல்லாம உன்னால தூங்க முடிய மாட்டேங்குது!, போதாததுக்கு இத்துப்போன இந்த பீடி குடிக்கிறப் பழக்கம் வேற?, ஏன், சித்தப்பு பீடி,சிகரெட்,சாராயம் இதெல்லாம் தப்புன்னு என்னையச் சொல்லி சொல்லி வளர்த்த?, உன்னால இந்தப் பழக்கமெல்லாம் இல்லாம இருக்க முடியல பாரேன்!”

“என்ன பண்றது?, உனக்குச் சொல்லி வளர்க்க நான் இருந்தேன், என் அப்பன்,ஆத்தா இதெல்லாம் தப்புன்னு ஒரு நாள்,ஒரு பொழுது சொன்னதில்ல!, தப்புன்னு புரியுற வயசு வரும் போது, பழக்கத்த விட முடியாம போச்சு!”

“அதுசரி”

“அந்த மட்டிலும், நம்ம சாதிக்காரப் பயலுக வாடை ஒட்டாம, என் பேச்சைக் கேட்டு நீ இதையெல்லாம் பழகாம இருக்குறதே எனக்குப் பெருமை தான்!”

“ம்க்கும்”

“ரெண்டுல ஒரு பழக்கம் உனக்கு இருந்திருந்தாலும், கௌரிய உனக்குக் கட்டிக் கொடுக்க நான் சம்மதிச்சுருக்க மாட்டேன்”

“அடேங்கப்பா!, உன மருமக உனக்கு அவ்ளோ உசத்தியா சித்தப்பு?”

“ஆமாடா! பின்ன?, அறியாத வயசுல ஆத்தா தூக்குல தொங்கிட்டா! அப்பன்காரன் கம்பு ஊண்டி நடக்குற வயசுலயும் பெண்ணாச பிடிச்சுப் போய்த் திரியுறவன்!, ஆம்பளப்புள்ளயா இருந்தாக் கூடப் பரவாயில்ல!, எப்படியோ போ-ன்னு விட்றலாம்! பொட்டப்புள்ளயாப் போச்சேடா! அவ படிப்பை முடிச்சு உன் கைல புடிச்சுக் கொடுக்கிற வரைக்கும், எனக்குத் தூக்கம் கிடையாது!”

“பொம்பளப்புள்ளையக் கட்டிக் கொடுத்துட்டாப் போதும்,கடமை முடிஞ்சதுன்னு நினைக்கிறது தப்பு சித்தப்பு!, மேற்படிப்புப் படிச்சு,அவ கால்ல அவ நிக்குற நிலைமை வந்துட்டா.. அவ அப்பன் தயவு கூட அவளுக்குத் தேவைப்படாது!, என்னைய அப்படிச் சொல்லித் தான படிக்க வைச்ச?, கௌரியை மட்டும் ஏன் கட்டிக் கொடுக்கிறதுலயே குறியா இருக்கிற?, படிச்சுப் பண்பட்ட நம்மள மாதிரி ஆளுங்க கூட ஆண்,பெண்ன்னு வித்தியாசம் பார்க்குறது எனக்குக் கொஞ்சமும் பிடிக்கல!”

“பத்துப் பேர் ஒன்னு சேர்ந்து உன்னைய அடிக்க வந்தா.. அதுல குறைஞ்சது 2 பேரை அடிச்சு வீழ்த்துற உடல் வலிமையாச்சும் ஆம்பளன்ற பேர்ல உனக்குக் கொடுத்திருக்கான் ஆண்டவன்!, ஆனா அவ அப்டிக் கிடையாதே!, பாதுகாப்புன்னு ஒன்னு அவளுக்கு அவசியம் டா!, பெத்த அப்பன் கிட்டயிருந்து கிடைக்காத அந்தப் பாதுகாப்பு உன் மூலமா அவளுக்கு எவ்வளவு சீக்கிரம் கிடைக்குமோ, அவ்வளவு சீக்கிரம் கிடைக்கனும்னு நான் நினைக்கிறேன்!”

“……….” – சரி தான் என்று நினைத்தானோ என்னவோ! ஆனாலும் அவரது கூற்றை முழுதாக ஒத்துக்கொள்ளவும் தோன்றாமல், எதிர்த்து எதுவும் கூறவும் விழையாமல் கைகளைப் பின்னே கட்டிக் கொண்டு அமைதியாக நடந்தான். பின்…

“உங்கக்கா புருசன் இப்போ புதுசா ஒருத்திய புடிச்சுருக்கானாமா!, இந்த முறை அசலூர்க்காரின்னு ஊர் முழுக்க பேச்சா இருக்கே!”

“ஹ்ம்ம், இவ எத்தனை நாளைக்கோ தெரியல”

-பேச்சியின் வீட்டருகே வந்ததும் இருவரும் பேச்சை நிறுத்த.. திண்ணையில் தலை சாய்த்திருந்த பேச்சி நிமிர்ந்து நோக்கி “யாரு?” என்று குரல் கொடுத்தார்.

“நான் தான்” என்றபடி அருகே வந்த கார்மேகம் “எதுக்கு கொசுக்கடில வெளிய படுத்திருக்க?, உள்ளாரப் போய்ப்படு” என்றார்.

“கௌரி உள்ள படுத்திருக்கு” என்றவர் மாறனிடம் “இவன் கூட சேர்ந்துக்கிட்டு நீயுமாப்பு குடிக்கிற?” என்று விசாரித்தார்.

“அந்தக் கண்றாவியெல்லாம் நமக்கு ஒத்துக்காது ஆத்தா” – என்ற மாறனைக் கண்டுகொள்ளாமல் “கௌரி எதுக்கு இங்க படுத்திருக்கு?, என்னப் பிரச்சனை?” என்றார் கார்மேகம்.

“அதையேன் கேட்குற?, இந்த நாதாரிப்பய, இவ அப்பன்.. கடன்காரன் இன்னிக்கு ஒரு சிறுக்கிய இழுத்துட்டு வந்தான்” – என்று பெரிய வீட்டில் அன்று மதியம் நடந்தேறிய சம்பவத்தை விளக்கினார் பேச்சி.

கௌரிக்கு இது புதிதல்ல! அந்தப் பெரிய வீட்டில் ஒண்டிவீரனை விட்டு எத்தனை தூரம் தள்ளியிருக்க முடியுமோ,அவ்வளவு தள்ளியிருப்பவள் அவள்! கீழ் தளத்தின் கடைசி மூலையில், கொல்லையையொட்டிய அறை அவளது. அதனால் வீட்டின் முகப்புப் பகுதியோ, வீட்டுக்குள் வருவோர்,போவோரோ அவள் கண்ணில் பெரும்பாலும் பட்டதில்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், பேச்சியாத்தாவைப் போன்று அவள் மீது பாசம் வைத்திருந்த அவ்வீட்டு சமையல்காரி பொன்னம்,தோட்டக்காரர் மயில்சாமி போன்றோர், ஒண்டிவீரனது சைட்-டிஷ்கள் யாரையும் கௌரியிடம் நெருங்கவிட்டதில்லை. பெரும்பாலும் அவள் அறையில் தானுண்டு,தன் வேலையுண்டென்று அடைந்து கிடப்பாள்! ஒண்டிவீரனைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்! மகள் அவ்வீட்டில் வசிப்பதை அறியாதவர் போலத் தான் நடந்து கொள்வார்!

பகல் பொழுதில் பெரும்பாலும் அவர் யாரையும் அழைத்து வந்ததில்லை. ஆனால் முற்றிலும் புதிய பழக்கமாக அன்று நண்பகலில் 40-வயது மதிக்கத்தக்க ஒருத்தியுடன் வீட்டுக்குள் நுழைந்தார்.

தன் வயதைக் குறைவாகக் காட்ட அப்பெண் பிரம்மப்பிரயத்தனம் செய்திருப்பது அவள் அணிந்திருந்த உடையிலும்,உதட்டுச்சாயத்திலுமே தெரிந்தது. வீட்டைச் சுற்றி சுற்றிப் பார்த்தபடி வெகு உரிமையுடன் உலா வந்தவள், கௌரியின் அறையையும் விட்டு வைக்கவில்லை.

தடுக்க நினைத்த பொன்னத்தை ஒண்டிவீரன் பார்வையிலேயே அடக்கி விட, என்ன செய்வதென்று புரியாமல் பேச்சியை அழைக்க ஓடி விட்டார் பொன்னம்.

திடீரென யாரோ தன் அறைக்குள் நுழைவதைக் கண்டு எழுந்த கௌரி, புதிதாக உள்ளே வந்தவளைக் கண்டு புருவம் நெரித்தாள். கூடவே அவள் பின்னே நுழைந்தத் தந்தையைக் கண்டு வியர்த்துப் போனது அவளுக்கு. கையிலிருந்தப் புத்தகத்தை நெஞ்சோடு அணைத்தபடி கட்டிலோரமாய் ஒடுங்கிப் போய் நின்றவளைக் கண்ட ஒண்டிவீரன் “இங்கெல்லாம் நீ பார்க்க எதுவுமில்ல சுப்பு, வெளிய போவோம் வா” என்றழைத்தார் அவளை.

“இருங்க, உங்க பொண்ணு தான இவ?” என்று அவளை மேலும்,கீழும் நோக்கி விட்டு “பார்க்க லட்சணமா,ரொம்ப அழகா இருக்காளே!, அவங்கம்மா மாதிரியோ?” என்று ஒண்டிவீரனிடம் வினவினாள்.

அவர் தோளைக் குலுக்கிக் கொண்டு எங்கோ நோக்க.. கௌரியின் அருகே சென்றவள் அவள் அணைத்திருந்தப் புத்தகத்தைப் பறித்து நோக்கி “ஓ!, 12த் படிக்கிறியா?, நல்லா படிப்பியா?” என்றாள்.

பதில் கூறாமல் தலை குனிந்தபடி நின்றவளிடம் “என்னைப் பத்தி சொல்லுங்க! ஏன் அமைதியா நிற்கிறீங்க?, பொண்ணு என்னையப் பார்த்துப் பயப்படுறால்ல?, கல்யாணத்துக்கப்புறம் தினம்,தினம் நாங்க 2 பேரும் ஒரே வீட்ல ஒருத்தரையொருத்தர் பார்த்துக்கப் போறோம்!, அப்படியிருக்கிறப்ப நல்லாப் பழகிக்கிறது தான நல்லது” என்றாள்.

என்ன சொல்ல வருகிறாள் என்று குழம்பிப் போய் கௌரி நிற்கையிலேயே, அவள் “ம்,சொல்லுங்க” என்று ஒண்டிவீரனை ஊக்கினாள்.

முன்னே,பின்னே மகளிடம் சாதாரணமாகக் கூடப் பேசிப் பழக்கப்பட்டிராத வீரன், இவளிடமெல்லாம் எதற்காகக் கூற வேண்டுமென்ற மிதமிஞ்சிய எரிச்சலுடன் முகத்தை வைத்துக் கொண்டு “இ..இவ.. இவ தான் உன் சித்தி. நான் இவளைத் தான் கட்டிக்கப் போறேன்”என்றார்.

திடுக்கிட்டு நிமிர்ந்த கௌரி தந்தையை ஒரு நிமிடம் வியப்புடன் நோக்கி விட்டு மீண்டும் தலையைக் குனிந்து கொண்டாள். உதடு கோணிக் கொண்டு அழுகை வரும் போலிருந்தது.

அவள் அழுகையை அடக்கமுயல்வதை உணர்ந்து மேலும் நெருங்கிய சுப்பு, அவளைத் தன்னோடு அணைத்து “நீ ரொம்ப சின்ன வயசா இருக்கிறப்பவே உன் அம்மா இறந்துட்டாங்களாமே!, கவலப்படாத! நான் இந்த வீட்டுக்கு வந்தப்புறம், உன்னை என் சொந்த மக மாதிரி பார்த்துக்கிறேன்” எனக் கூற.. பற்றிக் கொண்டு வந்தது கௌரிக்கு. கையை எட்றி எனக் கத்திக் கூறி, அவளை உதறி விலகித் தள்ளி நிற்க வேண்டும் போலத் தோன்றியது. பல்லைக்கடித்து சகித்துக் கொண்டு நின்றாள்.

ஒண்டிவீரனுக்கும் கூட இந்தப் பேச்சு ரசிக்கவில்லை போலும்! முகத்தைச் சுழித்துத் தன் வெறுப்பைக் காட்டியவர்.. “நீ இந்த அறைப் பக்கமெல்லாம் வர வேண்டிய அவசியமில்ல!, உனக்கு இங்க எந்த வேலையுமில்ல!, சொல்றது புரிஞ்சதா?” என்று அதட்டினார்.

“ஏன் ஏன் ஏன்?, அப்டின்னா எனக்கு இந்த வீட்ல எந்த உரிமையும் இல்லன்னு சொல்றீங்களா?, சின்னப்புள்ள முன்னாடி என்னைய அவமானப்படுத்துறீங்கள்ல?” என்று அவள் கண்ணைக் கசக்கியபடி வெளியே செல்ல.. “சுப்பு,சுப்பு” என்றழைத்தபடி பின்னேயே சென்றார் ஒண்டிவீரன்.

அதற்குள் பொன்னத்தின் மூலம் சேதியறிந்திருந்த பேச்சி, வீட்டினுள் நுழைந்திருக்க.. இவர்களிருவரது கொஞ்சல்களையும் நேரே கண்டவருக்குத் தலை முதல் கால் வரை தகித்துப் போனது.

“யாத்தே! யாத்தே! யாத்தே!, எந்தக் காட்டுச் சிறுக்கிடி நீயி?, உள்ளூர்க்காரிக சகவாசம் போதாதுன்னு இப்ப உன்ட்டத் தொங்கிட்டுத் திரியிறானா இந்தக் களவாணிப்பய?, ஏன்டி கை,கால் நோக வேலை செஞ்சு சோறு திங்க வலிக்குதுன்னு இப்பிடிப் பொழப்புப் பார்த்து வயிறை நிரப்புறியே! வெட்கமா இல்ல?, நீ தெரு நாயோட தெரு நாயா இருந்துட்டுப் போடி!, ஆனா.. எம்பேத்தி கண் முன்ன நிற்க உனக்கு என்னடி தகுதியிருக்கு?” என்று சுப்புவை நோக்கிப் பெருங்குரலில் கத்தியவர்.. ஒண்டிவீரனிடம் திரும்பி..

“இந்தாரு, எம்புள்ள போய்ச் சேர்ந்தப்புறம் என் பேத்தியத் தான் உசுரா நினைச்சு வாழ்ந்துட்டிருக்கேன்!, உன் சகவாசத்தையெல்லாம் உன்னோட நிறுத்திக்க! இந்தத் ***** சிறுக்கிக காத்தெல்லாம் எம்பேத்தி மேலப் படவே கூடாது!, இன்னொரு முறை இப்படி நடந்தா, உன்னைய வெட்டிப் போடக் கூட யோசிக்க மாட்டேன்” என்று மிரட்டினார்.

கிழவிக்குப் பதிலேதும் கூறாமல் அருகிலிருந்துத் தனது அள்ளக்கை மாயியை நோக்கினார் ஒண்டிவீரன்.

உடனே ஓடிச் சென்று பேச்சியின் தோளைப் பற்றி இழுத்துச் சென்ற மாயி “இந்தா அயித்த.. உனக்கு எங்கிட்டிருந்து இம்புட்டுத் தகிரியம் வந்துச்சு?, அண்ணன் முன்ன நின்னு கை நீட்டிப் பேசுறவ!, இடத்தக் காலி பண்ணு முதல்ல” என்று எகிறியபடி வெளியே நிறுத்தினான்.

“கட்டைல போற பய, எல்லாம் அந்தச் சிறுக்கிமவளைச் சொல்லனும்! போய்ச் சேர்ந்தவ, இந்தப் பொட்டக்கழுத கழுத்துலயும் கயத்தை மாட்டித் தன்னோடயே கூட்டிப் போயிருந்தா.. இன்னிக்கு இப்படி ஒரு நிலைமை வருமா?, இவனுக்குப் பொறந்ததுக்கு எம்பேத்தி இன்னும் என்னல்லாம் படப் போறாளோ!, கூத்தியாளைக் கூட்டி வந்து நடு வீட்ல உட்கார்ந்து கூத்தடிக்கிறானே பொசகெட்ட பய” – விடாமல் ஒலித்த பேச்சி ஆத்தாவின் குரல் கேட்காதது போலக் காதைச் சொறிந்த ஒண்டிவீரன் சுப்புவை நோக்கினார்.

அவருக்கு மாமியாரிடம் பேச்சு வாங்கிப் பழக்கம் தான்! ஆனால் சுப்புவிற்கு இது புதிததல்லவா! தனது உடல்வளத்தினால் சுற்றியிருக்கும் ஆண்களை நொடியில் கைக்குள் போட்டு விடுபவள்! தன்னோடு பழகும் பெண்களின் கண்களில் பொறாமையை மட்டுமே பார்த்துப் பழகியவளுக்கு, இன்று கிழவியின் பேச்சுப் பெரிதாய் பாதித்து விட்டது.

பக்கத்து ஊர் ஜமீனுக்கு வப்பாட்டியாய் காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தவளுக்கு அடித்தது லாட்டரியாக.. அவ்வூரின் திருவிழாவில் கலந்து கொண்ட ஒண்டிவீரனின் பார்வை விழுந்தது! ஜமீனுக்கும்,தனக்கும் ஏற்கனவே நிலவிய பகையைத் தீர்த்துக் கொள்ள முடிவு செய்த ஒண்டிவீரன், எப்படியேனும் சுப்புவைத் தன்புறம் இழுக்கத் தீர்மானித்தார். சிறுபிள்ளைத் தனமாகத் தோன்றினாலும், உன் பின்ன திரிஞ்ச பொம்பளை இப்ப என் பக்கம்! என்று ஜமீனிடம் காட்டிக் கொள்வதில் அவருக்கு ஏக விருப்பம் இருந்தது. சுப்புவை வைத்து ஜமீனைப் பற்றிய சில அந்தரங்க விசயங்களைத் தெரிந்து கொண்டு அவருக்குத் தண்ணி காட்டவும் தீர்மானித்திருந்தார். ஆனால் அனைத்தையும் தாண்டி சுப்புவின் மீது அவர் கொண்ட மையல் அவரது மூளையை மழுங்கச் செய்திருந்தது.

இவரது எண்ணத்தை அறிந்து கொண்ட சுப்பு, இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் வப்பாட்டியாக வாழ்ந்து பொழுதைப் போக்குவதென முடிவு செய்து, பெண்டாட்டியற்ற ஒண்டிவீரனிடம் தன்னை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும்படிக் கேட்டுக் கொண்டாள். அறுபதை நெருங்கி விட்ட ஒண்டிவீரன், எப்படியும் அதிக நாட்கள் தாங்க மாட்டார்! அடுத்த சில வருடங்களில் செத்துத் தொலைத்தாரானால் சொத்துக்களனைத்தையும் சுருட்டிக் கொள்ள வேண்டுமென்று முடிவு செய்தாள்.

ஒண்டிவீரன் எவ்வளவோ தாஜா செய்தும் அவள் ஒரு இரவை அவளுடன் கழிக்கக்கூடச் சம்மதிக்கவில்லை. அவர் மிரட்டியதற்கும் அஞ்சாமல், ஜமீனின் பாதுகாப்பை மீறித் தன் மீது கை வைக்க முடியாதென்று எதிர்த்து நின்றாள்.

வேறு வழியின்றி அவள் எண்ணத்திற்குச் சம்மதித்துத் தொலைத்தார் ஒண்டிவீரன். வெறும் தாலி தானே! முறையாக மணந்தவள் தூக்கில் தொங்கும் போதே அவர் எதைப் பற்றியும் கவலைகொள்ளவில்லை. இப்போது இவள் என்ன பெரிய பத்தினியாக அவருடன் வாழ்ந்து விடப் போகிறாள்?, மோகம் தீர்ந்ததும், காரியம் முடிந்ததும் சில,பல சொத்துக்களுடன் இவளை ஒதுக்கி விட வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டார்.

நாளை தான் ஆளப் போகிற வீடு என்கிற மமதையுடன் அவள் உலா வருகையில் பேச்சி ஆத்தா வேலைக்காரர்கள் முன்னிலையில் அவளை அவமானப்படுத்தியதை அவளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஒண்டிவீரன் பின் தொடர அழுது கொண்டே வீட்டை விட்டு வெளியேறி விட்டாள்.

தந்தை கூறிய செய்தி கேட்டு முற்றிலும் பீதியடைந்து போன கௌரிக்கு அவர்கள் சென்ற பின் அந்த வீட்டினுள் கால் பதிக்கக் கூட விருப்பமில்லாமல் போனது. தகப்பன் ஒரு ஆண் பரத்தையென்பது அவளறறிந்தது தான்! கண் கூட அவர் எவளுடனும் சுற்றுவதை இதுவரை அவள் நேரில் பார்க்கா விட்டாலும், ஊராரும், கிழவியும் பேசுவதை வைத்தே அவரது குணம் அவளுக்குப் புரிந்து தான் போயிருந்தது.

இயல்பான தந்தை-மகள் உரையாடல் கூட இதுவரை அவர்களிருவரிடையே நடைபெற்றிராத சூழ்நிலையில் இன்று திடீரென ஒருத்தியைக் கூட்டி வந்து ‘இவள் உன் சித்தி’ என்று அவர் கூறியதில் முழுவதும் பயந்து போனாள் அவள்.

இனி அவள் கதி என்ன?, பேச்சியும்,கார்மேகமும் இதுவரை அவளுடனிருந்துப் பாதுகாத்து வருகிறார்கள் தான்! ஆனால்.. இதுவரை தந்தையை எதிர்த்து அவர்களிருவராலும் ஒரு சுண்டு விரலைக் கூட அசைக்க முடிந்ததில்லை.

சித்தி என்று வரவிருப்பவள் என்ன செய்யக் காத்திருக்கிறாள்?, நிச்சயம் கதை,சினிமாக்களில் வருவது போலக் கொடுமை செய்ய முடியாது! அவள் ஒன்றும் அறியாச் சிறுமியல்ல! வளர்ந்த குமரி! பணத்துக்காகத் தந்தையை மணம்முடிக்க முயல்கிறாளாயின், தனக்குக் காசு,பணம் எதுவும் தேவையில்லை எனக்கூறி ஆத்தாவுடன் ஒதுங்கி விட வேண்டுமென்றுத் தீர்மானித்துக் கொண்டாள்.

பேச்சியாத்தாவின் மூலம் நடந்ததைக் கேட்ட கார்மேகம் பொங்கி எழுந்துவிட்டார்.

“என்ன தான் நினைச்சுக்கிட்டிருக்கான் இந்தாளு?, கேட்க ஆளில்லன்னா?, இத்தனை நாள் இந்தாளு நடத்தை எப்படியிருந்தாலும், புள்ளைய அது பாதிக்க விட்டது கிடையாது!, ஆனா.. இப்ப, இந்த நிலைமைக்குக் கொண்டு வந்து விட்டுட்டானே!” – கார்மேகம்

பின்னங்கழுத்தைத் தடவியபடிக் கொட்டாவியை வெளியிட்ட மாறன் “சித்தப்பு, என்ன அடிச்ச சரக்கு வேல செய்யுது போல?, ரொம்பப் பொங்குற?” என்றான்.

“உனக்குக் கோவம் வரலையாடா மாறா?, சித்தியாம்ல சித்தி?, எந்த ******** டா அவ?”

“இப்ப எதுக்குக் கத்துற நீயி?, வயசாய்ப் போச்சு! முன்ன மாறி உடம்பு ஒத்துழைக்கலன்னு ஒருத்தியக் கூட்டி வந்து வீட்லயே வைச்சு, அவளோட செட்டில் ஆயிரலாம்ன்னு ப்ளான் போட்டிருப்பான் இந்தக் களவாணிப்பய!”

“டேய்..”

“பின்ன என்ன எதிர்பார்க்குற?, கௌரிக்குக் கல்யாணம் பண்ணி வைச்சு அழகு பார்த்துப் பேரன்,பேத்திகளோட மிச்ச வாழ்க்கைய ஓட்டுவான்னா?, லூசு மாதிரி பேசுற?, எனக்கு எந்த அதிர்ச்சியுமில்ல!, இதெல்லாம் எதிர்பார்த்தது தான்!”

“…………….”

“அந்தப் பொம்பள சுப்பு, பக்கத்து ஊரு ஜமீனோட வப்பாட்டியா இருந்தவ! இவன், அந்தாளோட தகராறுல, இவள இழுத்துட்டு வந்துட்டு, ஆம்பளடான்னு மார் தட்டிட்டுத் திரியிறான்!, ஆம்பளத்தனத்த பொம்பளங்கக்கிட்ட மட்டும் தான் காட்டுவான் போல! *****பய!, அவ ரூட்டப் போட்ருப்பா!, கல்யாணம்ன்னு ஒன்னைப் பண்ணிக்கிட்டா பெருசா காசு பார்த்துரலாம்ல?, இந்த நாயும் அவ மேல இருக்கிற ஆசைல தல கிறுகிறுத்துப் போய், அவ ஆட்டி வைக்கிறதுக்கெல்லாம் ஆடிட்டுத் திரியுது”

“அந்தாளு எப்டியோ போகட்டும்டா மாறா!, கௌரிய அவிங்க தொந்தரவு பண்ணுனா, என்னால ஏத்துக்க முடியாது”

“வாஸ்தவம் தான்”

“என்னடா இப்படிப் பொறுப்பில்லாம பேசுற?”

“வேற என்ன செய்யனும்ன்ற?, சினிமா பாணில, அந்தாளை எதிர்த்து அவளைத் தூக்கிட்டுப் போய்த் தாலி கட்டட்டுமா?, சின்னப்புள்ள அது!, அது வயசுக்குப் பார்க்கக் கூடாததையெல்லாம் பார்த்துட்டிருக்கு! இதுல நான் வேற அதுக்கு இம்சையக் கொடுக்கனுமா?, குரங்குக்கு வாக்கப்பட்டா, குட்டிக்கரணம் அடிச்சுத் தான் ஆகனும்!, இந்தாளுக்கு மகளாப் பொறந்ததுக்கு, இதையெல்லாம் அனுபவிக்குதுன்னு நினைச்சுக்க வேண்டி தான்!”

“…………..” – உண்மை நிலைமையும் அது தான் என்பதால் இருவரும் அவனை எதிர்த்து எதுவும் கூறாமல் அமைதி காத்தனர்.

“முதல்ல கௌரி ஸ்கூலை முடிக்கட்டும்!, அதுக்கப்புறம் மேற்படிப்புப் படிக்க வெளியூருக்கு அனுப்பிட்டா, இந்தக் கண்றாவியெல்லாம் பார்க்க வேண்டியிருக்காது!” – மாறன் கூறியதும் யோசனையுடன் பீடியைப் பற்ற வைத்துக் கொண்டார் கார்மேகம்.

“அவ்ளோ லேசுல நாம நினைக்குறது நடந்துடாது டா மாறா!, சொந்தப் பொண்டாட்டியவே கைக் கழுவினவன், பெத்த புள்ளைய விட்டு வைச்சிருக்கிறது பாசனத்துனாலன்னா நினைக்கிற?, எல்லாம் சொத்துக்காக!முக்கால்வாசிக்கும் மேற்பட்ட ஒண்டிவீரனோட சொத்துப் பரம்பரையா வந்தது தான்! அதுல பாதிக்கும் மேல கௌரிக்குச் சேர வேண்டியது!, காசுக்காக ** திங்குறவன் அவன்!, இவன் கிட்ட புள்ளைய விட்டு வைச்சிருக்கிற ஒவ்வொரு நிமிசமும் எனக்குப் பயம் தான் எந்நேரம் என்ன செய்வானோன்னு!”

“அப்டியெல்லாம் அவளை அந்தாளால ஒன்னும் பண்ணிட முடியாது சித்தப்பு”

“பண்ணவும் விட மாட்டேன்!” – சூளுரைத்தார் கார்மேகம்.

றுநாள் காலை செங்குளம் பஸ் ஸ்டாப் அருகேயிருந்த டீக்கடையில் ஒரு கையில் வடையுடனும்,ஒரு கையில் டீ க்ளாஸூடனும் நின்றிருந்தான் மாறன்.

“என் மாமன் ஒரு நாள் மல்லியப்பூ கொடுத்தான்..

அடியாத்தி இது எதுக்கு?, நான் யோசனை பண்ணிப் பார்த்தேனம்மா!

அத வாங்கிக்கச் சொல்லித் தந்தானம்மா”

-காலை நேரத்திற்குரியப் பொழிவுடன், ஊதுபத்தி மணம் கமழ.. ஒரு புறம் கொதிக்கும் எண்ணெய்ச் சட்டியில் சுடச் சுட சுட்டு எடுக்கப்படும் வடைகளுக்கு மத்தியில், காபி,டீயின் நறுமணத்துடன்.. ரேடியோப் பெட்டி வழியாக வழிந்து கொண்டிருந்த பாடலுடன் அந்த டீக்கடையில் அன்றைய நாளைத் தொடங்கியிருந்தான் மாறன்.

“என்னா சொல்லு மருது, நீ போட்ற ஆம வடைக்கு நிகர் இந்த ஊர்,உலகத்துல எதுவுமே கிடையாதுய்யா!, காலைல எந்திரிச்சதும் பல்லு வெளக்காம உன் கடைல ஒரு டீயைக் குடிச்சுப் போட்டு, 2 வடைய உள்ள தள்ளுனாத் தான் நாளே வெளங்குதுன்னா பாரேன்”

“உவ்வேஏஏஏஏ…. அழுக்குருண்ட!, பல்லு வெளக்காம எப்டித் தான் திங்குதோ! பண்டாரம் பண்டாரம்!” –மருது உடனான அவனது சம்பாஷணையைக் கேட்டபடி பஸ் ஸ்டாப்பில் பள்ளிச் சீருடையில் நின்றிருந்த கௌரியின் ரியாக்ஷன் இது.

அருகே தொங்கப்பட்டிருந்தப் பேப்பர் கட்டிலிருந்து ஒரு பேப்பரை உறுவியவன், அதைக் கொண்டுத் தன் கையைத் துடைத்தபடி புருவத்தைச் சுருக்கிக் கொண்டு எட்டி அவளை நோக்கினான்.

“மல்லியப் பூ வாசம்… என் மாமன் மேல வீசும்” – பாடல் விடாது ஒலித்தது.

பின் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு கடையை விட்டு வெளியே அவளருகே வந்தான்.

“நீ பேசுறதெல்லாம் தெளிவா என் காதுல விழுந்துடுச்சுடி ராங்கி” – மாறன்

“விழுகட்டும்ன்னு தான் பேசுறேன்!, கடை வைச்சுருக்கிற மருதண்ணன் கூட, வேர்த்து வழியும்ன்னு தெரிஞ்சும், குளிச்சுட்டுத் தான் வேலை செய்யுது! ஆனா நீயி.. ச்சி,ச்சி பல்லு வெளக்காமக் கூட.. உவ்வேஏஏஏ.. வாந்தி வரல உனக்கு?”

சுண்டு விரலை வாய்க்குள் விட்டு கடவாய்ப்பல்லில் தெக்கி நின்ற வெங்காயத்தை எடுத்துத் தூஊஊஊஊ எனத் துப்பிக் கொண்டிருந்தான் அவன்.

அவன் செய்கையில் “ச்சைஐஐஐ.. கர்ர்ர்ர்ருமம்ம்ம்” என முகத்தை அஷ்டகோணலாகச் சுழித்தவளைக் கண்டு கொள்ளாமல்.. அவளது துப்பட்டாவைப் பற்றி அவன் கையை வேறு துடைக்க.. துள்ளி விலகினாள் அவள்.

பஸ் ஸ்டாப் அருகே பூக்கடைப் போட்டிருந்த யோகாம்பாள் டீக்கடை மருதுவிடம் 5 முழம் கதம்பத்தைக் கொடுத்து விட்டு, மாறனிடம் திரும்பி “பூ வாங்கிக்க ராசா, இன்னிக்கு ரெண்டாவது போனி உன்னோடதா இருக்கட்டும்” என்றாள்.

“பூவை வாங்கி நான் காதுலயா வைச்சுக்க?, போக்கா.. ஏ, போக்கா” - மாறன்

“ஏன் வீட்டுக்குப் போய் ஆத்தாக்கிட்ட குடு. சாமி படத்துக்கு வைக்கட்டும்” – யோகம்

“யாரு?, அந்தக் கிழவியா?, வீட்ல சாமிப்படம் எங்கயிருக்குன்னு நான் பூவக் கொண்டு போய் கொடுத்தப்புறம் தான் தேடும்!,”

“அட சும்மா வாங்கிட்டுப் போய் கொடுப்பு”

“ம்ம்ம்” –வெகுவாக யோசித்தவன் “பேசாம இந்த ராங்கி தலைல ரெண்டு முழப் பூவைச் சுத்தி விடு. அப்டியாச்சும் பொட்டச்சி போலத் தெரியட்டும்” என்றான்.

அவனை நோக்கித் தீப்பார்வை செலுத்தியவளைப் பொருட்படுத்தாமல், காசு கிடைத்தால் போதும் என்ற நோக்கத்துடன் அவளருகே வந்த யோகம், அவள் தலையில் பூவைச் செருகி விட்டாள்.

“என்னத்தப் பண்ணான், ஏது பண்ணான்,

சின்னப்புள்ள நான், பச்சப்புள்ள நான்

வாசத்திலே மதி மறந்து வாங்கிக்கிட்டனாம், வைச்சுக்கிட்டனாம்!

மல்லியப் பூ வாசம், என் மாமன் மேல வீசும்” – எஸ்.பி.பி,சைலஜா குரல்கள் இன்னமும் டீக்கடையில் ஒலித்துக் கொண்டிருந்தது.

தோளைத் தாண்டித் தொங்கும் மல்லிகப் பூவை “ப்ச்” என்றபடி நோக்கியவளைக் கண்டு சிரிப்பு வந்தது அவனுக்கு.

“ஏன் டி பல்லு வெளக்காம வடையத் தின்னதுக்கே ரொம்பப் பண்ணிக்கிறியே!, என்னையக் கட்டிக்கிட்டு என் வீட்டுக்கு வந்தா, பல்லு வெளக்காமத் தான் எல்ல்லாஆஆஆம் பண்ணுவேன், அப்ப என்னடி செய்வ?” – கண்ணை உருட்டிக் கொண்டு அருகே வந்து முணுமுணுத்தவனிடம் முகத்தைச் சுழித்து “அதுக்கு நான் உன்னைக் கட்டிக்கிட்டாத் தான?, நீ இப்டி சோம்பேறியாட்டமிருந்து.. கடைசி வரை அந்தக் கிழவியோடவே வாழ்ந்து சாகப் போற பாரு” – என்று பதிலுக்கு முணுமுணுத்தவளைக் கண்டு கொள்ளாமல்..

இப்போது இரண்டு கண்ணையும் சுத்தம் செய்து கண் பீழையை அவள் தோளில் தடவிக் கொண்டிருந்தான் அவன்.

“அய்ய்யயயயயய ச்சிசிசிசிசிசிசி” – இருக்குமிடம் மறந்து தோளைத் தட்டித் துள்ளிக் குதித்தவளைக் கண்டு “ஹாஹாஹாஹாஹா’-வென வாய் விட்டுச் சிரித்தான் மாறன்.