அத்தியாயம் - 6

பேச்சியாத்தாவின் வாய்க்குப் பயந்தோ என்னவோ சுப்பு அதன் பின்பு பெரிய வீட்டின் புறம் தலை வைத்துக் கூடப் படுக்கவில்லை. ஒண்டிவீரனும் வழக்கம் போல அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என்கிற ரீதியில் வலம் வந்து கொண்டிருந்தார். இரண்டாவது கல்யாணம், சித்தி, அது,இதுவெனக் கூறியவர் அடுத்து எந்தக் காரியத்திலும் இறங்காதிருப்பதைக் கண்டு மாறனுக்கும்,கார்மேகத்துக்கும் யோசனை தான்! பூனை எப்படியும் ஒரு நாள் வெளியே வரத் தானே வேண்டுமென்றெண்ணி அமைதி காத்தனர். ஆனால் வெளியே வரப் போவது பூனையல்ல பூதம் என்பது புரியத் தொடங்குகையில் காலம் கடந்திருந்தது.

சாயப்பட்டறைக் கழிவு விசயத்தில் ஒண்டிவீரனை மாறன் உள்ளே தள்ளிய பிறகு, அவ்விசயத்தில் சற்றே இடைவெளி விட்டிருந்த வீரன், மீண்டும் தன் ஆட்டத்தைத் தொடங்கினார். அன்றைய சம்பவத்திற்குப் பிறகு கழிவைக் கொட்டுவதற்கு ஏற்ற இடம் அமையும் வரை ஃபேக்டரி போலீசாரால் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. ஆறும்,கிணறுமாய் சுற்றிலும் விளை நிலங்களைக் கொண்ட இடத்தில் கட்டப்பட்டிருந்த ஃபேக்டரிக்கு இந்த விசயத்தில் எப்படியும் தீர்வு கிடைக்காது என்பதால் எப்படியும் நிரந்தரமாக மூடப்பட்டு விடும் என்றே மக்கள் நம்பினர்.

ஆனால்.. ஃபேக்டரி ஓனர் மற்றும் ஒண்டிவீரனின் கணிப்போ வேறு மாதிரி இருந்தது. இரவில் ஊர் அடங்கியதும் ஃபேக்டரியை இயக்கிக் கழிவு நீரை யாருக்கும் தெரியாமல் செங்குளத்தின் குடிநீர் தரும் ஆற்றில் கலக்கத் தொடங்கினர்.

ஆரம்பத்தில் எந்த வித்தியாசத்தையும் எவராலும் கண்டறிய முடியவில்லை. அதன் பின்பு ஆற்றில் நுரை ததும்பத் தொடங்கியதும், வித்தியாச நாற்றம் அடிக்க ஆரம்பித்ததும் விசயம் மாறனைச் சென்றடைந்தது. அதன் பின்பு விசாரித்ததில் ஊர் மக்கள் சிலரின் உதவியால் ஒண்டிவீரன் ஃபேக்டரியை இரவில் இயக்குவது கண்டறியப்பட்டது.

“இந்தாளை உள்ள தூக்கிப் போட்டும் அடங்க மாட்டேங்குறானே” என்று கொதித்துப் போன மாறன், ஃபேக்டரியை நிரந்தரமாக மூடக் கோரி கலெக்டர் ஆஃபிஸ் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினான். ஊர் மக்கள் பலரும் அதில் கலந்து கொள்ள, நிச்சயம் ஃபேக்டரியை மூட வழி செய்வதாகச் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார் கலெக்டர்.

பெரிய வீட்டின் கொல்லையில் எண்ணெய்க் குளியலில் ஈடுபட்டிருந்த ஒண்டிவீரனிடம் இந்தத் தகவலைத் தெரிவித்தான் மாயி.

“அண்ணே!, அந்த மாறன் பய, ஃபேக்டரி விசயத்தை மோப்பம் பிடிச்சுட்டான்ணே”

“சரிடா, நீ ஏன் பதறுற, எத்தனை நாள் மறைச்சு வைக்க முடியும்?, கலெக்டரு நம்ம கையாளு தான்! அப்படியெல்லாம் ஒன்னும் பண்ணிட மாட்டான்”

“இல்லண்ணே!, இவன் எமகாதகனாச்சே!, ஆனானப்பட்ட உங்களையே செயில்ல .தள்ளுனவன்!, ஃபேக்டரிய இழுத்து மூட்ற வரைக்கும் சும்மா இருக்க மாட்டாண்ணே”

“ம்ம்ம்ம்” – எண்ணையைத் தலையில் கொட்டிப் பரபரவெனத் தேய்த்தவர் “அந்தப் பயலால இனி ரொம்ப நாளைக்கு ஆட முடியாதுடா மாயி! அவன் சங்கதி இன்னும் கொஞ்ச நாள்ல முடியப் போகுது”

“என்னண்ணே சொல்றீங்க?”

“ம், சொல்றேன், சுரக்காய்க்கு உப்பில்லன்னு”

“போ…போட்டுத் தள்ளப் போறீங்களா??” – கண்ணை விரித்து நோக்கிய மாயனின் முகத்தில் ‘அது அத்தனை சுலபமா’ என்பது போன்ற பாவமும் இருந்தது.

“அவனை கொன்னுட்டு நான் ஜெயில்ல போய் கழி திங்குறதா?, போடா டேய்..”

“பின்ன என்ன தான் பண்ணப் போறீங்க?”

“எல்லாம் நடக்குறப்பத் தானா புரியும்” – அவர் முடித்துக் கொண்டு குளியலறைக்குள் மறைந்து விட்டார்.

கொல்லையருகேயிருந்தத் தனது அறையின் ஜன்னலோரத்தில் நின்று கொண்டு தந்தை கூறிய அனைத்தையும் கேட்ட கௌரிக்கு இதயம் தொண்டைக்குள் வந்து துடித்தது.

பொதுவாக ஒண்டிவீரன் பேச்சை அவள் பெரிதாகக் காதில் வாங்கியதேயில்லை. ஆனால் இன்றைய பேச்சு மாறனைப் பற்றியதாக இருந்ததால், ஆர்வம் மேலிட ஜன்னலருகே நின்று கேட்டு விட்டாள்.

காது வழியே வாங்கிய சேதி.. தந்தையால் மாறனுக்கு ஏதோ நிகழப் போகிறதென்பதை மனசுக்கு எடுத்துச் சொல்லி மூளையில் பதிய வைக்க முயல்வதைக் கண்டவளுக்கு, கை,கால்களில் நடுக்கமெடுத்து மயக்கமே வந்தது.

சாயப்பட்டறை விசயத்தில் அவன் ஒண்டிவீரனை ஜெயிலுக்கு அனுப்பியும் கூட, அவர் பம்மியிருப்பது, பாய்வதற்குத் தான் என்பதைப் புரிந்து கொள்ளாமல் அசால்ட்டாகத் திரியும் இவனை என்ன தான் செய்வது! ஒண்டிவீரன் ஒரு நச்சுப் பாம்பு! நேரம் பார்த்துக் கொத்திக் கொலை செய்யும் நாசக்காரன்! அப்படிப்பட்டவனிடம் நேரடியாக மோதி, எங்கே அவன் தன்னையே சிதைத்துக் கொள்வானோ என்கிற பயம் அவளை முழுமையாக பாதித்தது.

அவர் கொல்லையிலிருந்து நகர்ந்ததும் விறுவிறுவென பேச்சியின் வீட்டை நோக்கிச் சென்றாள் அவள்.

“ஆத்தா… ஆத்தா…. ஆத்தாஆஆஆஆ..” – வாசலில் நின்று கொண்டு விடாமல் கத்திக் கொண்டிருந்தவளிடம் “என்னத்துக்குடி கத்துறவ?, கூரை மேல கம்பு காயப் போட்டிருக்கேன் பாரு, எடுத்து கோழிகளுக்குப் போடு” என்று குரல் கொடுத்தார்.

கடுப்பாகிப் போனவள் “கிழவி.. நான் எவ்ளோ பெரிய விசயத்தைத் தெரிஞ்சுக்கிட்டுப் பயத்தோட வந்திருக்கேன், கோழி,கம்புன்னு லூசு மாதிரி பேசிட்டிருக்க?” என்று சிடுசிடுத்தாள்.

“அப்படி என்ன பெரிய விசயம்?, உங்கொப்பன் சாகக் கிடக்குறானா?, இந்த நூற்றாண்டுலயே எனக்குப் பெரிய விசயம்ன்னா உங்கொப்பன் சாவு தான் டி!”

“ஆமா, அப்டியே அந்தாளு போய்ச் சேர்ந்துட்டாலும்… இன்னும் எத்தன பேரை காவு வாங்கக் காத்திருக்கானோன்னு நானே பதறிப் போய்ருக்கேன்!, ப்ச், உன்ட்டப் பேசி பிரயோஜனமில்ல. மேகம் மாமா எங்க?”

“அவன் எங்கடி இங்கன கிடக்கான்?, கவர்மெண்டு உத்தியோகம் பார்க்குறவனுக்குக் கூரை போட்ட வீடெல்லாம் ஒத்து வராதுன்னு.. பெத்தத் தாயி ஒருத்தி, இங்கக் கொசுக்கடிலயும்,கோழி நாத்தத்துலயும் கஷ்டப்படுறது புரியாம.. சிமெண்டு போட்ட வீட்ல தனியாலடி குடியிருக்கிறான்?, உங்காத்தாகாரி அல்பாயுசுல போய்ச் சேர்ந்த நாள்லயிருந்து என்னைய எவன் டி கண்டுக்கிறயான்?” – மூக்கைச் சீந்திக் கொண்டு கிழவி ஒப்பாரி பாட.. எரிச்சலுடன் “ப்ச், இதுவேற நேரம்,காலம் தெரியாம புலம்பும், லூசுக் கிழவி” என்று திட்டி விட்டு விறுவிறுவென மாறனின் வீட்டை நோக்கி நடந்தாள்.

ஒண்டிவீரனின் பெரிய வீட்டைப் போலில்லாவிடினும், மாறனின் வீடும் அவ்வூரில் பெரியதே! முற்றத்தில் தூண்களுடன், சகல மின்சார வசதிகளுடனும் கூடிய வசதியான வீடு தான் அது! வீட்டைச் சுற்றிலும் தான் ஆராய்ச்சி புரியும் ஏதேதோ செடி வகைகளை நட்டு வைத்து வளர்ப்பவன் அவன் என்பதால் வீட்டின் வெளிப்புறம் பச்சைப் பசேலென அழகாகக் காட்சியளிக்கும்.

வீட்டின் உட்புறமோ அப்படியே நேரெதிர். முத்தரசிப் பாட்டிக்கு வீட்டைச் சுத்த,பத்தமாகப் பார்த்துக் கொள்ளும் எண்ணமெல்லாம் பிறந்ததிலிருந்தே கிடையாது. மாறனுக்குச் சோறு பொங்கிப் போட்டு சமையலறை வேலைகளைக் கவனித்துக் கொள்வதோடு சரி! மற்றபடி வீடு எப்போதும் போட்டது போட்டபடி அலங்கோலமாகத் தான் காட்சியளிக்கும்.

தூக்கிக்கட்டிய கொண்டையுடனும், பாவாடை,தாவணியுடனும் விறுவிறுவென வீட்டுக்குள் நுழைந்தவள் மீன் குழம்பு வாசனையை நுகர்ந்தபடி நேராக சமையலறைக்குச் சென்றாள்.

“அரசி ஆத்தா, மாறன் மாமன் எங்க?”

“வாடி என் மக பெத்த மவளே!, இந்தப் பக்கமெல்லாம் காலடி வைச்சிருக்கிறவ?, என்னா விசயம்?”

“ம், உன் மீன் குழம்பு வாசனை வீட்டு வரைக்கும் அடிச்சதால, மூக்கு வேர்த்துப் போய் உன் வீட்ல தின்னுட்டுப் போகலாம்ன்னு வந்துருக்கேன்!”

“ஆமா டி!, நாம செய்யுற சமையல் வாசனை ஊர்ல ஒரு பயல விட்டு வைக்கக் கூடாது! சமைச்சா அப்புடி சமைக்கனும்!, உன் வீட்ல இருக்கிற கிழவி ஒருத்தியும் சமைக்கிறா பாரு! உப்பு,சப்பில்லாம”

தன் பேச்சியாத்தாவைப் பற்றிக் கூறியதும் கொதித்துப் போனவள் “உனக்கு சமைக்கிறதயும்,திங்குறதையும் தவிர என்ன தெரியும்?, வீடு பாரு, முற்றத்து மூலைல எறும்புப் புத்துக் கட்டிப் போய்க் கிடக்கு! நாளைக்குப் பாம்பு புத்து கட்டுனா கூட நீயெல்லாம் வீட்டைச் சுத்தமா வைச்சுக்க மாட்ட!, நீயெல்லாம் எங்காத்தாவ பேச வந்துட்ட?, கிழவி.. அம்மிக்கல்லை எடுத்து மண்டைல போட்ருவேன் சொல்லிட்டேன்”

“ம்ம்ம், போடுவடி போடுவ! அதுவரைக்கும் என் கை என்ன கோழியப் பறிச்சிட்டிருக்குமாக்கும்?, எம் பேரனைக் கட்டிக்கிட்டு இந்த வீட்டுக்குள்ள காலடி எடுத்து வைக்கிறதுக்கு முன்னாடியே நீயெல்லாம் இந்தப் போடு போடுறியே!, கல்யாணம் மட்டும் ஆச்சுன்னா, என்னைய உசுரோடப் பாடைல ஏத்திருவியேடி”

“பின்ன?, உன் வாய்க்குப் பயந்து அடங்கிப் போவேன்னா நினைச்ச?, கிழவி வயசுக்கு ஏத்த மாதிரி நீ அடங்கி,ஒடுங்கி மூலைல கிடக்கல?, தூக்கிக் கொண்டு போய் மாட்டுக் கொட்டகைல போட்ருவேன்”

“அய்யோ அய்யோ அய்யோ!, கல்யாணத்துக்கு முன்னாடியே இப்புடிப் பேசுறாளே! நீ ராங்கின்னு தெரியாம உன் மேல மயங்கிப் போய்க் கிடக்குறானே எம்பேரன்! இந்தாருடி, நான் ஒரு வார்த்தை சொன்னா.. என் பேரன் உன்னைய நிமிஷத்துல கைக் கழுவி விட்ருவான்! தெரியும்ல?”

“அடேங்கப்பா! சீமைல இல்லாத ஆம்பள உம் பேரன்! அவனைக் கட்டிக்கனும்ன்னு நான் தவம் கிடக்குறேன் பாரு! ஏய் கிழவி! கடைசி வரை ஒத்தைல வாழ்ந்து தனியாச் சாவேனே தவிர, உன் பேரனுக்கு வாக்கப்பட மாட்டேன்”

“ஹ்ம்ம், இத்தன நாளா ஜாடை,மாடையா சொல்லிட்டு இருந்தவ, இன்னிக்கு வெளிப்படையாவே சொல்லிட்டா என்னையக் கட்டிக்க முடியாதுன்னு!, கிழவி.. எல்லாம் உன்னால தான்” – அடுக்களை வாயிலில் இருந்து மாறனின் குரல் ஒலித்தது.

அப்போது தான் குளித்து விட்டு வந்திருப்பான் போலும்! இடுப்பில் வேஷ்டியுடனும், வெற்று மார்புடனும் கையில் வைத்திருந்தத் துண்டினால் தலை துவட்டிக் கொண்டிருந்தான்.

“ம்ம், நான் என்னடா சொன்னேன் உன் அயித்த மவள?, எந்நேரமும் வம்பிழுத்து கேலி பேசிச் சிரிச்சா, எவ தான் உன்னக் கட்டுவா?” – நிமிடத்தில் சேம் சைட் கோல் போட்டது கிழவி! அப்படிச் சொல்லு ஆத்தா என்பது போல் முகத்தை வைத்திருந்த கௌரியும் இப்போது பாட்டியின் பக்கம்!

“அது சரி!, என்னைத் தவிர எவனுக்கு உரிமையிருக்கு அவளைக் கேலி பண்ண?, சொல்றி செவத்தச்சி!, இவ்ளோ நேரமா அது கூட சண்டைக்கு நின்னவ, இப்ப ஏன் கம்முன்னு இருக்க?” – என்றவன் தலையைத் துவட்டிக் கொண்டிருந்தத் துண்டை நுகர்ந்து பார்த்து ‘ச்சை’ என்று முத்தரசியின் மேல் தூக்கியெறிந்தான்.

“ஏய் கிழவி, துண்டைத் துவைக்கக் கூட பொழுதில்லாமலா திரியிற நீயி?, கருமம் என்னைக்குத் துவச்சதோ! இப்புடி நாறுது, ம்க்க்க்கும்” என்று முகத்தைச் சுழித்து விட்டு கௌரியின் தாவணியைப் பற்றியிழுத்துத் தன் தலையைத் துவட்டிக் கொண்டான்.

ரொம்ப இயல்பாத் தொட்றானே! வழக்கமா நடக்குற விசயமோ! என்பது போன்ற பாவத்துடன் முகத்தை வைத்துக் கொண்டு கிழவி அவளை ஒரு மாதிரி நோக்க…

‘கிழவி, நான் தான் இந்தாளை மயக்கி வைச்சிருக்கேன்ற மாதிரி பார்த்து வைச்ச, குரவளையத் திருகிருவேன்” என்று பதில் பார்வை பார்த்தாள் கௌரி.

இருவரையும் கண்டு கொள்ளாமல் தலையைத் துவட்டி முடித்த மாறன் அவளது பின் மண்டையில் ஒரு போடு போட்டு “என்னத்துக்குடி கிழவிய முறைக்குறவ?” எனக் கூறி “சோத்தை போட்றி!, பசிக்குது” என்று விட்டுப் போனான்.

“இந்தா.. இந்த மீனைப் பொறிச்சு அவனுக்குச் சோத்தைப் போடு, நான் ரேசன் கடை வரைக்கும் போயிட்டு வாரேன், விரசாப் போகாட்டி சீனி தீர்ந்துருச்சுன்றுவியான் அந்தச் சண்டாளன்” என்று புலம்பிய அரசி வெளியேற.. தான் வந்த வேலையை மறந்து விட்டு சமையல்கட்டில் கரண்டியுடன் நிற்பதை எண்ணித் தன்னையே நொந்து கொண்டு வேகமாக மாறனைத் தொடர்ந்து ஓடினாள் கௌரி.

அவன் அறையில்.. சீப்பினால் தன் சுருட்டை முடியைப் படிய வைக்க முயற்சித்தபடி கண்ணாடி முன்னே நின்றிருந்தான் மாறன்.

எதிர் சுவர் முழுதையும் வித,விதமானப் புத்தகங்கள் நிறைத்திருக்க,அவனமரும் மேஜை மீதும் ஏதேதோ புத்தகங்கள் சீராக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. மடிப்புக் களையாத படுக்கை விரிப்பு,ஜன்னல் திரைச் சீலை என அனைத்தையும் நோட்டம் விட்டவளைக் கண்ணாடியில் பார்த்தவன் “என்னடி?” என்றான்.

“வீடே சுத்தமில்லாம நாறிப்போய்க்கிடக்கு! ஆனா தொர ரூமை மட்டும் பாரேன்” – என்று முணுமுணுத்தவளிடம் “நான் வேணா, வெளக்கமாத்தக் கைல தூக்கி வீட்டைப் பெருக்கித் துடைச்சு சுத்தமா வச்சிக்கவா?, போடி போக்கேத்தவளே! அந்த வேலையெல்லாம் நான் பண்ணுனா, வர்றவ என்ன ***-ஆ புடுங்குவா?” என்று பதில் கேள்வி கேட்டான் அவன்.

அவன் கூறியதைக் கண்டு கொள்ளாமல் அருகே வந்தவள் “உன் கிட்ட ஒரு முக்கியமான விசயம் சொல்லத் தான் மாமா வந்தேன்” என்றவளின் முகம் மறுபடி கலக்கத்தை வெளிப்படுத்த.. தன் வீட்டில் ஒண்டிவீரன் கூறிய அத்தனையையும் முழுவதுமாக ஒப்பித்தாள்.

அவள் கூறியதைக் கேட்டவன் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் மீண்டும் கண்ணாடியில் தன் முகத்தை நோக்கி மீசையை முறுக்கி விட்ட படியே “உங்கொப்பன் குணம் தெரிஞ்சது தானடி?, இதெல்லாம் ஒரு விசயமா?, போய் சாப்பாடு எடுத்து வைடி. போடி” என்று துரத்தினான்.

விசயத்தின் தீவிரம் புரியாமல் பேசுகிறானே இவன் என்றெண்ணியவளுக்குக் கோபம் வந்து விட “இப்போ திங்குறது தான் முக்கியமா?, அ..அப்பா.. அப்பாவைப் பத்தி உனக்கு நல்லாத் தெரியும்ல மாமா?, அவர் உன்னை ஏதாவது செஞ்சுட்டா..” என்று பயம் முழுதையும் கண்களில் தேக்கிக் கூறினாள்.

“போய்ச் சேர வேண்டியது தான் டி செவத்தச்சி!, அய்யய்யய்ய.. நீ தான் என்னையக் கட்டிக்க மாட்டேன்னு சொல்லிட்டேல?, பின்ன என்ன உனக்கு என் மேல அக்கறை? போவியா…” என்றவன் தொடர்ந்து “ஒரு பக்க மீசை ஏன் இப்பிடி வளைஞ்சு கிடக்கு?” என்றபடிக் கண்ணாடியையே நோக்க எரிச்சலாகிப் போனவள்… அவன் தோளைப் பற்றித் தன்புறம் திருப்பினாள்.

கொண்டை மயிர்கள் ஆங்காங்கு வெளி வந்து கழுத்தை உரச.. குட்டிக் குடை ஜிமிக்கி காதருகே கதை பேச.. அடர்ந்து படர்ந்திருந்தப் புருவங்கள் நெரிந்த விதத்தையும், விடைத்த நாசி வெளியிட்ட உஷ்ண மூச்சையும் வெகுவாக ரசித்தான் அவன்.

புன்னகை முகத்தோடுத் தன்னையே நோக்குபவனைக் கண்டு.. கோபம் எழ.. ஏற்கனவேப் பெரிதாய் விரிந்திருந்த முட்டைக் கண்களை மேலும் விரித்து “நான் சொல்றது உனக்குப் புரியலையா மாமா?, அப்பா கண்டிப்பா பெருசா ஏதோ திட்டம் போட்டுருக்காரு!” என்று கூறினாள்.

தோளில் பதிந்திருந்த அவளது மென் விரல்களைப் பற்றியவன் “இதையெல்லாம் எதிர்பார்க்காமலாடி நானும்,உன் மேகம் மாமாவும் உங்கொப்பனை ஜெயில்ல போட தீர்மானிச்சிருப்போம்! அந்தாளால என் சுண்டு விரலைக் கூடத் தொட முடியாது!, என்ன தலையவா எடுத்துருவாய்ங்க?, இப்டிப் பயப்படுற?, ஒன்னும் பண்ண மாட்டான்டி! அவன் கோடு போடுறதுக்குள்ள நான் ரோடு போட்டு, அவனைத் தூக்கிருவேன்! கவலைய விடு” என்றான்.

முழுதாகச் சமாதானமடையாமல் தலையை மட்டும் மெல்ல ஆட்டியவள், அவன் கைகளில் சிக்குண்டத் தன் விரல்களை வேகமாகத் தன் புறம் இழுத்துக் கொண்டு, அவனை முறைத்தாள்.

“இதுல மட்டும் கரெக்டா இருப்பியே!” – நொடித்துக் கொண்டவன் பின் வாயெல்லாம் பல்லாக மாறி “ஆனாலும் இந்த மாமனுக்கு ஒன்னுன்னா நீ பதறித் தான் போயிடுவ போல! என்னடி?, இதுக்காகவே உங்கொப்பன்ட்ட தலையைக் கொடுத்து ‘இந்தா வெட்டிக்கன்னு சொல்லலாம் போல” எனக் கூற… முழு எரிச்சலில் அவனை மேலும் முறைத்தாள் அவள்.

“நான் ஒன்னும் அவ்ளோ உசத்தி கிடயாது! அந்தாளால எங்கம்மா ஒருத்திய நான் இழந்தது போதாதா?, உன்னையும் வேற அவனுக்காகத் தூக்கிக் கொடுக்கனுமா?” என்று கேட்டவளுக்குக் குரல் கம்மி அழுகை வரப் பார்க்க.. அதைக் கண்டு கொள்ளாமல் “நீ அவ்ளோ உசத்திக் கிடையாதுன்றது உண்மை தான் டி. என்னடி என் இடுப்புக்குத் தான் இருப்ப போல! அய்யய்ய..” என்றபடி அருகே வந்து அவள் உயரத்தை அளந்தவனின் கையைத் தட்டி விட்டாள் அவள்.

அவள் தள்ளி விட்டதும் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டவன் “ப்ச், போடி.. நீ ரூம் வரைக்கும் வந்ததும், என் மேல அம்புட்டு ஆசையோன்னு ஒரு நிமிஷம் சந்தோசப்பட்டேன்!, நான் கொடுத்து வைச்சது அவ்ளோ தான்! காலம் பூரா உன் கூடயும், உங்கொப்பனோடயும் போராடி,போராடியே கழியப் போகுது போல” என்று புலம்பியபடி ஹாங்கரில் தொங்க விடப்பட்டிருந்த சட்டையருகே செல்ல எத்தனிக்க… சற்றும் யோசிக்காமல் அவன் புறம் நகர்ந்தவள் பின்னிருந்து அவனை இறுகக் கட்டிக் கொண்டு அவன் முதுகில் தலை சாய்த்தாள்.

விழி விரியத் திகைப்புடன் நின்று விட்டவனுக்கு ஒரு நொடி மூளை மரத்துப் போனது. அறியாத வயதிலிருந்து அவள் பின்னே வலம் வருபவன் தான்! எத்தனையோ முறை தொட்டுப் பேசியிருக்கிறான்! ஆனால்.. ஆனால்.. இது புதிது அவனுக்கு! கௌரியின் இந்த ஸ்பரிசம் முற்றிலும் புதிது!

வயதோ,காதலோ,காமமோ என்னக் கண்றாவியோ! என்ன பெயர் வேண்டுமானாலும் இருக்கட்டும்! தன் சொந்த அத்தை மகள் என்கிற தகுதியைத் தாண்டி, என்றேனும் ஒரு நாள் திருமணம் என்கிற பெயரில் தன்னோடுக் கடைசி வரை உடன் வரப் போகிறவள் என்கிற உரிமையைத் தாண்டி, அவள் பெண் – அவன் ஆண் என்கிற இந்த நிலை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

இதற்கு முன்பும் அவனைக் கட்டிக் கொண்டிருக்கிறாள்! அன்று மழை நாளில்.. கோவிலில் நடந்ததே! நல்ல உறக்கத்தின் போது பேய்க் கனவு கண்டால் பயத்தில் தலையணையைக் கட்டிக் கொண்டு உறங்குவோமே! அது போல அவனை ஸ்பரிசித்திருந்தாள் அன்று.

ஆனால் இன்று.. கண் மூடித் தன் கன்னத்தை அவனது வெற்று முதுகில் சாய்த்திருந்தவளின் சருமம் வெகுவாகச் சிவந்துக் கூசிச் சிலிர்ப்பதை அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது. எதிலிருந்தோ அவனைக் காப்பாற்ற விழைபவள் போன்று அவன் வயிற்றைச் சுற்றி இறுகப் படர்ந்திருந்த அவள் கைகள் சொன்ன சேதியை அவன் மனம் புரிந்து கொண்டது. இந்த நிலையிலிருந்து மீள அவள் விரும்பவில்லையென்பதை அவளது மௌனத்திலேயேக் கண்டு கொண்டான் அவன்.

அவள் கையைப் பற்றித் தன் புறம் திருப்பி முகம் முழுக்க முத்தமிடும் வேகம் எழுந்தாலும், அடக்கி.. அவ 18 வயசு கூட தாண்டாத சின்னப்புள்ள டா மாறா!, 27-வயசுக் காட்டெருமை நீயி! என்று சபித்த மனசாட்சியிடம் அசடு வழிந்தான் அவன்.

முதல் முறைக் காதலோடு அணைக்கும் ஒரு பெண்ணின் ஸ்பரிசம், அந்த அடங்கா ராட்சனின் குரலைக் கம்மச் செய்ய, தொண்டையைக் கனைத்து கஷ்டப்பட்டு வாய் திறந்தவன் “ஏய்ய்ய்… கைய எட்றி” என்றான்.

“ம்ஹ்ம் மாட்டேன்”

“மெத்தை விரிப்பெல்லாம் எவ்ளோ நீட்டா இருக்கு பார்த்தேல?, உன்னைத் தூக்கிட்டுப் போய் அதுல போட்டேன்னு வையி, அடுத்து நடக்குற எந்த சம்பவத்துக்கும் நான் பொறுப்பில்ல”

“பரவாயில்ல”

“அடிப்பாவி!, ஏய்ய்ய் எட்றி கைய…”

“…………..”

“கௌரி…..”

“ம்ம்”

“என்னடி ஆச்சு?”

“…………….”

“கேக்குறேன்ல?”

“ப….பயமா இருக்கு மாமா”

“என்னத்துக்கு?, உன் அப்பன் என்னைய எதுவும் பண்ணிடுவான்னா?”

“ம்ம்”

“அப்டில்லாம் ஒன்னும் நடக்காதுன்னு சொல்றேன்ல?, என்னைய நம்புடி கிறுக்கி”

“ஹ்ம்ம்ம்”

“இப்போவாவது கைய எடு”

“ஒ..ஒரு வேள.. எ..என் அப்பா.. உனக்கு என்னையக் கட்டிக் கொடுக்கச் சம்மதிக்காட்டி என்ன மாமா பண்றது?” – கலங்கிய குரலுடன் அழுகை ஒரு சேர மெல்லக் கேட்டாள் அவள்.

வலுக்கட்டாயமாக அவள் கையை விலக்கி அவள் புறம் திரும்பியவன் “என்னைய பார்த்தா… உங்கொப்பன் சம்மததுக்காகக் காத்துக்கிட்டிருக்க பொட்டப்பய மாறியா தெரியுது?, 60-வயசுலயும் புது மாப்பிள்ளையாக நினைக்கிற *******பய உங்கொப்பன்! அவனுக்காகவெல்லாம் உன்னை விட்டுக் கொடுக்க முடியாது! ஒரே வெட்டா அவன் தலையைப் பொளந்துட்டு, மாமன் ஜெயிலுக்குப் போய்ட்டு வந்தா.. நீ எனக்காகக் காத்திட்டிருக்க மாட்ட?” என்று வினவினான்.

“ப்ச், பேச்சைப் பாரு!, இவரு ஜெயிலுக்குப் போவாராம், நான் காத்திட்டிருக்கனுமாம்! நம்ம சாதி ரத்தம் உனக்குள்ளயும் ஓடுது மாமா! நீயெல்லாம் படிச்சு என்ன பிரயோஜனம்?”

“பின்ன உங்கொப்பனை மாறி ஆளோட, உட்கார்ந்து பேசியா பிரச்சனையைத் தீர்க்க முடியும்?, போடி ஏய்…. சோத்தைப் போடு போ…”

“நீ திங்கத் தான் லாயக்கு” – என்று வைதபடியே அவன் அறையை விட்டு வெளியேறியவளிடம் “நான் கட்டப்போற தாலியோட இந்த ரூம்க்குள்ள காலடி எடுத்து வைச்சப்புறம் பாருடி, இந்த மாமன் எதுக்கு லாயக்குன்னு அப்போ தெரியும்” – மார் தட்டிக் கொண்டான் அவன்.

அடுத்த சில நாட்கள் எந்த வித ஆரவாரமுமின்றி அமைதியாகக் கழிய.. சாயப்பட்டறை இரவு நேரத்தில் இயங்கும் விவகாரம் ஊர் மக்களை எட்டி விட்டதால், ஆளாளுக்குக் காவலிருந்து, ஃபேக்டரியை இயங்கா விடாமல் செய்து வெற்றி பெற்றுக் கொண்டிருந்தனர். கௌரியின் பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு நெருங்கும் சமயம் என்பதால், அவள் படிப்பில் பிஸியாகி விட்டாள்.

ஆனால் கலகம் விளைவிப்பதற்கே யாம் பிறப்பெடுத்திருக்கிறோம் என்று திரியும் ஒண்டி வீரன் மாத்திரம், அந்தப் பெரிய வீட்டின் நிம்மதியைக் குலைக்கும் பொருட்டு சுப்புவை அவ்வீட்டிலேயே குடி வைத்தார். இம்முறை அவளுக்குப் பாடிகார்டைப் போலொருவன் அவளுடனேயே தங்கினான்.

எப்படியும் ஒரு நாள் எதிர்பார்த்தது தான் என்பதால் கௌரி இதைப் பெரிதுபடுத்தவில்லை. படிப்பில் மட்டுமே கவனத்தைச் செலுத்த முடிவு செய்திருந்தாள். எப்படியேனும் நல்ல மார்க் எடுத்து, வெளியூர் எங்கேனும் மேற்படிப்புக்காக ஓடி விட வேண்டுமென்பது அவள் மற்றும் மாறனின் திட்டம்.

அவ்வப்போது கௌரியிடம் பேச வரும் சுப்புவை பொன்னம் நெருங்கவிடுவதில்லை. “நீ அவ பக்கத்துல போனா.. தேவையில்லாம கிழவி கிட்டப் பேச்சு வாங்க வேண்டி வரும், உனக்கு எதுக்கு அவ சகவாசம்?” என ஒண்டிவீரனும் திட்டித் தீர்ப்பதால்.. அந்த வீட்டு வசதிகளையும்,ஒண்டிவீரன் பணத்தையும் முழுதாக அனுபவிப்பதில் நேரத்தைப் போக்கினாள் அவள். இந்நிலையில் கௌரியின் மீது வினையாக விழுந்தது சுப்புவின் உடன் வந்திருந்தவனின் பார்வை!

ன்று பக்கத்து ஊரிலிருக்கும் தனது சினிமா கொட்டகையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்காக ‘அப்போது வெளி வந்த, குழந்தைகள் ரசிக்கும் ஆங்கிலப் படமொன்றை இலவசமாகத் திரையிடத் தீர்மானித்திருந்தான் மாறன்.

மாணவ,மாணவிகள் அனைவரையும் வரிசையாக தியேட்டருக்குள் அனுப்பிக் கொண்டிருந்தவனின் பார்வை எதிரேயிருந்த பஸ் ஸ்டாப் அருகே நடந்து வந்து கொண்டிருந்த கௌரியிடம் பாய்ந்தது.

பத்து,பதினைந்து நாட்களுக்கும் மேலிருக்கும் அவளைப் பார்த்து! அந்தச் சண்டாளி சுப்பு பெரிய வீட்டிலிருப்பதை கார்மேகத்தின் மூலம் தெரிந்து கொண்டவனுக்கு உள்ளூரக் கொஞ்சம் பதைப்பு தான்! கௌரி எந்த விதத்திலேனும் காயப்படுத்தப்படுவாளோ என்று! ஆனால்.. லௌட் ஸ்பீக்கர் பேச்சியாத்தாவின் துணையிருக்கும் காரணத்தினால் அவனால் சுலபமாக சுப்புவின் இருப்பை அலட்சியப்படுத்த முடிந்தது.

வேஷ்டியை மடித்துக் கட்டியபடி வாசலருகே நின்று கொண்டு அவளையே நோக்கிக் கொண்டிருந்தவன் “குனிஞ்ச தலை நிமிராம நடக்குறா பாரு!, அந்தக் களவாணிப் பயலுக்குப் போய் இம்புட்டு நல்ல புள்ள பொறந்திருக்க வேணாம்” என்று முணுமுணுக்கையில் அவளையே நோக்கியபடி ஒருவன் பைக்கில் அவளைச் சுற்றி சுற்றி வருவது தெரிந்தது.

நிச்சயம் முப்பது வயதுக்கு மேலிருக்கும் அவனுக்கு! அவன் தன்னை நோக்குவதும், சுற்றி வருவதும் கூடத் தெரியாமல் தன் போக்கில் சாலையில் நடந்து கொண்டிருந்தாள் அவள்.

அதற்குள் பேருந்து வந்து விட.. அவளும் அதில் ஏறி மறைந்தாள். அதன் பின் பைக் பார்ட்டி காணாமல் போகவும், “எவனாவது கேனப்பயலா இருக்கும்! செவத்திச்சி செவுல்லயே ரெண்டு விட்டான்னா, அடங்கிருவியான்!” என்று தனக்குத் தானே கூறிக் கொண்டு உள்ளே சென்று விட்டான்.

அதன் பின்பு மீண்டும் ஒரு முறை அவள் பள்ளியருகே மாறன் உரக் கடையில் நின்று கொண்டிருந்த போது, அவனைச் சந்திக்க நேர்ந்தது. இப்போதும் பைக்கில், அதே இளிப்புடன் அவளையே நோக்கியபடி அவன் சுற்றி வர.. உள்ளே எகிறிக் கொண்டு வரும் கோபத்தை அடக்கித் தாடியைச் சொறிந்தான் மாறன்.

று நாள் காலை செங்குளம் பஸ் ஸ்டாப் அருகே, தான் வழக்கமாக வருகை புரியும் டீக்கடை வாசலில் நின்றிருந்தவன், பள்ளிக்குச் செல்லத் தயாராகி வந்து பஸ்ஸூக்காகக் காத்திருக்கும் கௌரியையும், அவளையே நோக்கியபடி எதிரிலிருந்த மைல்கல்லில் அமர்ந்திருந்த அந்த பைக் பார்ட்டியையும் நோக்கினான்.

சுர்ரென்று மேலிருந்து கீழ் வரை ஏறிய உணர்வில் “அடியேய்…. என் அயித்த மவளே….” என்று கௌரியைக் கத்தி அழைத்தான் மாறன்.

சுற்றிக் கூடியிருந்த அனைவரும் ஒரு நிமிடம் நிமிர்ந்து நோக்கி விட்டுப் பின் இது வழக்கம் தான் என்பது போலத் தலையைக் குனிந்து கொள்ள, கௌரியோ மிதமிஞ்சிய எரிச்சலுடன் அவனை நோக்கினாள்.

“பள்ளிக்கூடத்துக்காடி போற?”

“இல்ல, பத்துப் பாத்திரம் தேய்க்கப் போறேன்”

“ஏன், பாத்திரம் தேய்க்கிறதுன்னா எளக்காரமா இருக்கா உனக்கு?, என்னையக் கட்டிக்கிட்டு என் வீட்டுக்கு வந்தா.. நீ அதையெல்லாம் செஞ்சு தான் டி ஆகனும்”

“அதுக்கு நான் உன்னையக் கட்டிக்கிட்டாத் தான?,” – நெற்றியில் துள்ளி விழுந்த கூந்தலை அலட்சியமாகச் சிலுப்பியவளிடம் வம்பிழுத்தபடியே நெருங்கியிருந்தான் அவன்.

“யார்றி அவன்? எதிர்த்தாப்ல நிக்குறவன்?” – முணுமுணுத்தக் குரலில் கேட்டவனின் குரல் மாறிப் போயிருந்த விதத்தில் பயந்து, எதிரே நோக்கியவள் “அந்தக் கருப்புச் சட்டைக்காரனயா கேக்குற?” என்று விசாரித்தாள்.

“ம், நானும் பத்து நாளா பார்க்குறேன்! உன் பின்னாடியே திரியிறானே!”

“என்ன சொல்ற?”

“உனக்கு ஒரு மயிறும் தெரியாதுடி!, பொம்பளைப் புள்ளைங்க மண்ணைப் பார்த்து நடக்குறது நல்லது தான்! அதுக்காக இப்பிடியா?”

“நான் சத்தியமா கவனிக்கல மாமா”

“அவன் யாருன்னு உனக்குத் தெரியுமா?”

“ம், எங்கப்பன் ஒருத்திய வீட்ல கூட்டியாந்து வைச்சிருக்கான்ல, அவ கூடச் சேர்ந்து இந்தக் கருவாயனும் தங்கியிருக்கிறான்” – என்று கௌரி முழுதாக முடிப்பதற்கு முன்… நாலு கால் பாய்ச்சலில் அவன் முன்னே நின்றிருந்தவன் தன் முஷ்டியால் அவனது மூக்கை உடைத்திருந்தான்.

திடீரென்ற அவனது தாக்குதலில் கௌரியிலிருந்துத் தொடங்கி, ஏன், அடி வாங்கியவன் கூட பயந்து,நடுங்கிப் போய் நிற்க.. ரத்தம் சொட்டச் சொட்டத் தன் கண் முன்னே நின்றவனின் சட்டையைப் பிடித்துக் கிட்டத்தட்டத் தூக்கிக் கொண்டு அருகேயிருந்த புதரின் பின்பு மறைந்தான் மாறன் “சார் கூட, எனக்கு பேச்சு வார்த்தை நடத்த வேண்டியிருக்கு” என்றபடி.

“அந்தப்பய இந்தப்புள்ள பின்னாடியே வர்றதையும்,போறதையும் நானும் கவனிச்சுட்டுத் தானிருந்தேன் மருதண்ணே!, எப்டியும் மாறனுக்கு விசயம் போய்ரும்ன்னு தெரிஞ்சு தேன் அமைதியா இருந்தேன்” என்ற பூக்கடை யோகாம்பாள் “நான் சொன்னா நீ எங்க பயந்துக்கிடுவியோன்னு தேன் தாயி உன்ட்ட நான் ஒன்னும் சொல்லிக்கிடல” என்றாள் கௌரியிடம்.

பீதியடைந்து போன கௌரியின் பார்வை புதருக்குப் பின்னே சென்றது.

“எலேய் யார்றா நீயி?, என்னத்துக்குடா சொல்லாம,கொள்ளாம மேல கைய வைக்குற?” – எகிறிக் கொண்டு வந்தவனின் தலை முடியைப் பிடித்து ஆட்டிய மாறன் “நான் ஏன் அடிக்குறேன்னு உங்களுக்கு நிஜமாத் தெரியலயாண்ணே?” என்றான்.

“அண்ணனா?, யாருக்கு யார்றா அண்ணன்?, என்னத்துக்குடா அடிக்குற?”

“உங்க வயசுல பாதியிருக்கிற புள்ள பின்னாடி நீங்க ரோமியோ மாறி சுத்தி வந்தா, மண்டையப் பொளக்காம என்னண்ணே செய்வேன்?”

“யா..யா..யாரைச் சொல்ற? நா..நான் எந்த புள்ள பின்னாடி சுத்துறேன்?”

“அசலூர்ல இருந்து இங்க வந்துக்கிட்டு உள்ளூர்க்காரனை ஏமாத்தப் பார்க்குறியேண்ணே!”

“க..க.. அந்தக் கௌரி புள்ளைக்கு நீ என்ன வேணும்?, சொ..சொந்தக்காரனா?, சொல்றா”

“யாரா இருந்தா உனக்கு என்னண்ணே!, எங்கூர்ப்புள்ளைய இப்டில்லாம் அசலூர்க்காரன் விரட்டுனா, கைய,கால வகுந்து மரத்துல தொங்க விட்ருவோம்ண்ணே! இது தெரியாமலா அந்தக் பொட்டப்பய ஒண்டிவீரன் வீட்ல அண்டி வாழ வந்திருக்க?, ச்சு,ச்சு பாவம்ண்ணே நீயி”

“ஒண்டிவீரனையே சல்லிசாப் பேசுற, யார்றா நீயி?”

“இந்தப் பொதரை விட்டு வெளிய போனப்புறம் நான் யாருன்றது உனக்குத் தன்னாலத் தெரிய வரும்ண்ணே!, அதுவரைக்கும் இத வாங்கிக்க” என்றவன் அவன் வாயிலும்,மூக்கிலும் பலமாகத் தாக்கி.. தலை முடியைப் பிடித்திழுத்துச் சாலையில் போட்டான்.

“இங்க என்னத்தடி வேடிக்கை பார்க்குறவ?, பஸ் வந்துருச்சுல்ல? ஏறிப் போ” – அவன் தன்னை நோக்கி உறுமியதும் விழுந்தடித்துக் கொண்டு பஸ்ஸூக்குள் ஏறினாள் கௌரி.

கையைத் துடைத்துக் கொண்டு ஒன்றுமே நடவாதது போல் மாறன் நகர்ந்து விட, டீக்கடை மருது ஓடி வந்து, விழுந்து கிடந்தவன் மீது தண்ணீரைத் தெளித்து “அவன் கட்டிக்கப் போறப் புள்ள பின்னாடி திரிஞ்சு வினையத் தேடிக்கிட்டியேப்பு, மாறன் யாருன்னு தெரியாதா உனக்கு?” என்று அவனைப் பற்றி எடுத்துக் கூறி அனுப்பி வைத்தார்.

பெரிய வீட்டில் தன் அக்கா சுப்புவின் அறையில்.. மூக்கு மற்றும் வாயில் பிளாஸ்த்ரியுடன் அவமானத்தில் முகம் சிவந்து போய் தலை குனிந்து அமர்ந்திருந்தான் அவன் – சென்றாயன்.

“இந்த மாத்திரையப் போடு டா, வலி கொறயும்.” – சுப்பு நீட்டிய மாத்திரையைப் போட வாயைத் திறந்தவனுக்கு வலியெடுக்க.. “ஷ்ஷ்…” என்றபடி மீண்டும் தலையைக் குனிந்து கொண்டான்.

“தெரியாத ஊர்ல இருக்கோமே! கொஞ்சமாவது வாலைச் சுருட்டிக்கிட்டு அடங்கியிருப்போம்ன்னு இல்லாம, எதுக்குடா உனக்கு இந்த வேதனையெல்லாம்?, அப்பிடி எந்த ரதி பின்னாடி போயி இப்டி அடி வாங்கிட்டு வந்திருக்க?”

“…………..”

“பதில் சொல்லுடா”

“எல்லாம், உனக்குப் புருசனாகப் போற அந்த ஒண்டிவீரன் மக கௌரி தான்”

தன் சின்னக் கண்ணை விரித்துத் திகைப்பை வெளிப்படுத்தியவள் “கௌரி பின்னாடியா திரியுற நீயி?” என்று விசாரித்தாள்.

“ம்ம்” என்று தலையைக் குனிந்து கொண்டவன் “அக்கா” என்றழைத்தான்.

“என்னடா?”

“எ..எனக்கு… எ..எனக்கு அந்தக் கௌரியைக் கட்டிக் கொடு” – பட்டென்று கேட்டவனின் ப்ளாஸ்த்ரிகளைக் கண்டு கொள்ளாமல் அவன் வாயிலேயே ஒரு போடு போட்டாள் சுப்பு.

“ஆஆஆஆஆ, வலிக்குதுக்கா”

“பின்ன என்னடா?, என் பொழப்பே இங்க சிரிப்பாச் சிரிச்சுக் கிடக்கு! கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னவரு, இன்னும் ஒன்னையும் பண்ணக் காணோமே!, அந்த ஜமீனை வேற எதிர்த்துக்கிட்டு இந்தாளு பின்னாடி வந்து உட்கார்ந்ததுக்குக் கல்தா காட்டிருவானோன்னு நானே பயந்து கிடக்கேன், இதுல உனக்கு.. அந்தாளு மக கேக்குதோ?”

“அக்கா.. அந்தாளுக்கு உன் மேல இருக்குற ஆசையைப் பத்தி, அந்தாளு பார்க்குற பார்வையிலயே தெரியலயா உனக்கு?, நீ கொஞ்சம் கண்ணைக் கசக்குனா, கூடிய சீக்கிரமே உன் கழுத்துலத் தாலிய கட்டிருவான்”

“ம்ம்ம்”

“அப்புறம் நேரம் பார்த்துக் கொஞ்ச,கொஞ்சமா அந்தாளு சொத்தைச் சுருட்டிரலாம்”

“மெதுவாப் பேசு டா, மனுஷன் சாயப்பட்டற விவகாரத்துல கொஞ்சம் பிஸியா திரியுறாரு!, வரட்டும் இன்னைக்கு. பேசிக்கிறேன்”

“அக்கா… என் விசயம்??”

“உன் விசயமா?, உன் விசயம் என்னடா?, அந்தக் கௌரி உனக்குக் காலத்துக்கும் கிடைக்க மாட்டா!, அதனால் உன் ஆசைல மண்ணைப் போட்டு மூடு”

“உனக்கு இன்னும் விசயமே புரியல. ஒண்டிவீரன் சொத்துல பாதிக்கும் மேல அந்தப் புள்ள கௌரி பேர்ல தான் இருக்காமா!, ஊர்ப்பயலுகல விசாரிச்சதுல கிடைச்ச சேதி இது!, அந்தாளும் பொண்ணு விசயத்துல கொஞ்சம் பம்முறான் பார்த்தேல?, எல்லாம் சொத்துக்காகத் தான்”

“நிஜமாவா டா சொல்ற?”

“என் மேல சத்தியம்க்கா. உன்னைய அந்தாளு தொடனும்ன்னா, கழுத்துல தாலி ஏறனும்ன்னு நீ பிடிவாதம் பண்ணுன மாறி, இந்தக் கல்யாணம் நடக்கனும்ன்னா, உம் மகளை என் தம்பிக்குக் கட்டி வையி, இல்லாட்டி நான் ஜமீன் கிட்டயே போறேன்னு நீ கண்ணைக் கசக்கு!”

“டேய், அந்தாளு ஒத்துப்பான்னு நினைக்கிறியா?, உன் கூட எனக்குக் கல்யாணமே வேணாம்ன்னு தொரத்திட்டா என்னடா பண்றது?”

“தொரத்த மாட்டான்-க்கா! பொம்பள விசயத்துல அந்தாளு ரொம்ப வீக்கு!, அந்தாளை எப்பிடி மயக்கி வழிக்குக் கொண்டு வர்றதுன்னு உனக்குச் சொல்லியா கொடுக்கனும்?”

“ஹ்ம்ம்ம்”

“ஒரே கல்லுல ரெண்டு மாங்காயும் அடிச்சுட்டா, சொத்து பூராவும் நமக்குத் தான்”

“அந்தக் கிழவி, இன்னும் அவ மாமன் ஒருத்தன், இவிங்களுக்கு மத்தில அந்தப் புள்ள எப்பிடிடா உனக்குக் கிடைப்பா?”

“அதையெல்லாம் அந்தாளு சரி கட்டிருவான்!, எனக்கு அவ வேணும்க்கா!, அந்த மாறன் பயலால நான் இன்னிக்குப் பட்ட அவமானத்துக்கு எனக்குப் பழி தீர்த்தே ஆகனும்” – கோரமான முகத்துடன் தீர்மானமாய்க் கூறினான் சென்றாயன்.