அத்தியாயம் - 7

“தந்நேனன்னே தாநேனன்னா….

ஏ.. வாங்கடிச் சிட்டுகளா.. நாம வட்டமிட்டுப் பாட்டு படிப்போம்..

ஏ… வட்ட வட்ட வயல் உழுது… நல்ல வைரசம்பா நாத்து நட்டு….

ஏ… பொட்டப்புள்ள நத்த நாட்டு.. நல்லா குலுங்குதடி வைர சம்பா..

ஏ தந்நேனன்னே தாநேனன்னா…..”

- தேனொழுகும் குரலில்.. கிராமத்து மணம் வீசும் தமிழ் உச்சரிப்பில்.. கைகள் அதன் போக்கில் நாத்து நடவில் ஈடுபட்டிருக்க.. தாங்கள் செய்து கொண்டிருக்கும் வேலையைச் சுலபமாக்க செங்குளத் தமிழச்சிகள் படித்துக் கொண்டிருந்த நாத்து நடவுப் பாடல் அது!

அன்று நன்மாறனின் நிலத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த சம்பா அரிசி நடவைக் காண வந்திருந்தாள் கௌரி. மஞ்சளும்,சிகப்பும் கலந்த பாவாடை,தாவணியுடன் நெற்றியில் திருநீரும்,குங்குமாய் மங்கலகரமாகக் காட்சியளித்தவளை வைத்துத் தான் முதல் நாற்றை நட்டிருந்தான் மாறன். அதில் ஏக பெருமை அவளுக்கு!

“எம் பேரனுக்கு உன் மேல எம்புட்டு ஆச இருந்தா மொத நாத்த உன்னைய நடச் சொல்லியிருப்பான்?, இனியாச்சும் எந்நேரமும் அவனை விரட்டியடிக்காம, கொஞ்சமாவது அவன் மேல பாச,நேசத்தோட நடந்துக்கடி”

-தூக்குச்சட்டியிலிருந்த சோற்றை உருட்டி கௌரியின் கையில் கொடுத்துக் கொண்டிருந்த முத்தரசியின் ஆதங்கக்குரலைக் கேட்டு உண்பதை நிறுத்தி விட்டு நிமிர்ந்து முறைத்தாள் அவள்.

அந்த மத்தியான வேளையில், வயல் வெளியருகே மரத்தடியில் அமர்ந்து, காரசாரமான புளிக்குழம்புடன் பிசைந்து வைத்திருந்த சோற்றையும், பருப்புத் துவையலையும் கிழவி கையால் லபக்,லபக்கென விழுங்கிக் கொண்டிருந்தவள் இந்தப் பேச்சை ரசிக்கவில்லையென்பது அவள் பார்வையிலேயே தெரிந்தது.

“இப்போ நான் என்ன பாசமா நடந்துக்காதத பார்த்த நீயி?”

“பின்ன?, பள்ளிக்கூடம் முடிச்சதும் மேற்படிப்புப் படிக்க பட்டணதுக்குப் போகப் போறன்னு உன் மாமன் சொல்லிக்கிட்டுத் திரியிறான்?, பொட்டச்சிக்கு என்னத்துக்குடி படிப்பு?, கலெக்டர் உத்தியோகமா பார்க்கப் போற நீயி”

“கெழவி, என்ன வாய் நீளுது?, நீ கொடுக்கிற சோத்தைத் திங்குறேன் பாரு, என்னையச் சொல்லனும்”

“படிச்ச வரைக்கும் போதும்டி, ஒழுங்கு மருவாதயா உன் மாமனைக் கட்டிக்கிட்டு, வீட்டோட கிடக்கப் பாரு. உனக்காக இன்னும் எத்தனை நாள்டி அவன் காத்துக் கிடப்பான்?”

“ம்ம், நானா காத்துக் கிடக்கச் சொன்னேன்?, கிழவி!, ரொம்பப் பேசுன பல்லைப் பேத்துறுவேன்! என்னைப் படிக்கச் சொல்லி வற்புறுத்துறதே உன் பேரன் தான்!, நீ என்ன என்ட்ட வந்து எகிறுற?”

“28 வயசுல உன் தாத்தாவுக்கு 4 புள்ளைக பொறந்துருச்சுடி! ஆனா எம் பேரனைப் பாரு, உன்னைய மாறி ஒரு சிறுக்கிய நம்பிக்கிட்டு கல்யாணப் பேச்சே எடுக்காம இருக்கான்”

“கிழவி, உனக்கு அம்புட்டு ரோதனையா இருக்குன்னா, உன் பேரனுக்கு எவளையாவது பார்த்துக் கட்டி வை! ஊர் உலகத்துல பொம்பளைகளா இல்ல?”

“ஏன்டி ஆத்தா பேச மாட்ட?, சாகக்கிடந்த உன் ஆத்தாகாரி, உனக்கு என் பேரனைத் தான் கட்டி வைக்கனும்னு என்ட்ட சத்தியம் வாங்காம போயிருந்தா.. நான் ஏன்டி உன்ட்ட தொங்கிக்கிட்டுத் திரியிறேன்! போக்கேத்தவளே!”

“நீ சோத்தைக் கொடுத்ததும் போதும், நான் தின்னதும் போதும்!, பார்க்குற நேரமெல்லாம் கரிச்சுக் கொட்ட வேண்டியது!, இந்த லட்சணத்துல நான் இது பேரனை கட்டிக்கிட்டு வந்து இது கூட வாழனுமாம்”

“ஆத்தி! உனக்குக் கஷ்டம் கொடுக்கிற அளவுக்கு நான் அம்புட்டு நாள்லாம் உசுரோட இருக்க மாட்டேன்டி ஆத்தா!, நீயும்,என் பேரனும் சந்தோசமா வாழ்ந்தாலே போதும் எனக்கு”

“அப்ப, நான் தான் நீ எப்ப சாவன்னு காத்துக்கிடக்கேனாக்கும்?”

“அய்யய்யய்யய்ய… உங்க மாமியார்-மருமக சண்டை என்னைக்குத் தான் டி ஓயப் போகுது?, பொழுதன்னைக்கும் மல்லுக்கட்டிக்கிட்டே இருப்பீங்களாடி?,” – நெற்றியைச் சுற்றிக் கட்டியிருந்தத் துண்டைக் கழட்டியபடி இவர்களருகே வந்து நின்றான் மாறன்.

“மாறா.. இந்தச் சிறுக்கி உனக்கு ஒத்து வர மாட்டாய்யா!, இவளுக்கு உன்னையக் கட்டிக்கிற எண்ணம் துளி கூடக் கிடையாது!, ஒழுங்கா இவ சகவாசத்தை அத்து விட்டுட்டு வா, மயில்சாமி பேத்தி எழிலரசியோட, நான் உனக்குப் பரிசம் போட்றேன்”

“போடுவ கிழவி போடுவ!, அதுவரைக்கும் நான் உன்னைய உசுரோட விட்டு வைச்சாத் தான?” – கொலைவெறியுடன் முத்தரசியின் மீது பாயத் தயாராகிக் கொண்டிருந்தாள் கௌரி.

“என்னாடி செய்வ?, மூக்கறுத்துப் போடுவியோ?, வாடி.. அடியேய் வாடின்றேன்ல?, வயசானாலும் நெஞ்சுல உரத்தோட வாழ்றவடி நானு!, தொட்டுப் பாரு” – என பதிலுக்கு சீறிய அரசியைக் கண்டு எரிச்சலாகிப் போனவன்..

“அப்பத்தா, இப்ப என்னத்துக்கு தேவையில்லாத பேச்செல்லாம் பேசுற?, நான் உன்ட்ட கேட்டேனா எனக்குக் கல்யாணம் பண்ணி வைன்னு?, இப்ப என்னத்துக்கு இவ கூட வம்பிழுத்திட்டிருக்க?”

“உனக்கும் வயசாய்க்கிட்டே போகுதுல ராசா?, உன் கூட்டாளி கரிகாலனுக்குக் கல்யாணமாகி கையில ஒரு குழந்தையே வந்துருச்சு!, நீ இன்னும் ஒத்த மரமா நிக்குறியே!”

“எனக்கு இன்னும் வயசு இருக்கு அப்பத்தா!, அது போக, கௌரிக்கு இன்னும் 18 வயசு கூட ஆகல!, இந்திய சட்டப்படி பெண்ணோடு திருமண வயசு 18 தான். தெரிஞ்சுக்க”

“எலேய் கேனப்பயலே!, நான் சட்டத்திட்டத்தைப் பார்த்தா உன் தாத்தனைக் கட்டுனேன்?”

“உன் காலம் வேற! இப்போ இருக்கிற நிலைமை வேற கிழவி”

“என்ன கலிகாலமோ!, பொட்டப்புள்ளைக்குச் சமையல் வேலையைச் சொல்லிக் கொடுத்து கால,காலத்துல கல்யாணத்தைப் பண்ணி அழகு பார்க்குறதை விட்டுப்போட்டு படிக்க வைக்கிறேன்,பட்டணத்துக்கு அனுப்புறேன்னு நீ சொல்ற எதுவும் எனக்கு வெளங்கவுமில்ல, பிடிக்கவுமில்லை!, உங்க வயசுக்கு நீங்க ஆடுறீங்கன்னு ஒதுங்கி நிற்கிறதைத் தவிர, இந்தக் கிழவியால என்ன செய்ய முடியும்?” – என்று புலம்பி விட்டு தூக்குச்சட்டியை மூடிக் கையில் எடுத்துக் கொண்டு நகர்ந்து விட்டார் முத்தரசி.

கிழவி நகர்ந்ததும் அதுவரை அடக்கி வைத்திருந்தக் கோபம் புசுபுசுவென்ற பெரிய மூச்சுகளோடு அழுகையாக வெளி வர…. கண்ணைக் கசக்கிக் கொண்டு அங்கிருந்து செல்ல பார்த்தவளைத் தடுத்தான் மாறன்.

கண்டு கொள்ளாமல் விறுவிறுவென ரோட்டைக் கடந்து தோப்பினுள் நுழைந்து வீட்டை நோக்கி நடந்தவளின் பின்னேயே தானும் சென்றான்.

“என்னத்துக்குடி நல்ல நாளும்,அதுவுமா இப்புடிக் கண்ணைக் கசக்குற”-மாறன்

“கிழவி எப்பிடிப் பேசிட்டுப் போகுது பார்த்தேல?, பட்டணத்துக்குப் படிக்கத் தான போறேன்?, அப்படியே எவன் கூடவோ ஒரேடியா போயிருவேன்ற மாதிரி பேசுது?”

“ஏய், அடிச்சுப் பல்லைக் கழட்டப் போறேன் பாரு”

“படி,படின்னு நீ தான விடாம தொல்ல குடுக்குற?, எனக்கு மட்டும் உன்னைய விட்டுட்டு வெளியூருக்குப் போக ஆசையா என்ன?”

“பார்ரா… என் மேல அம்புட்டு பாசமாடி உனக்கு?”

“அதான?, நான் வைச்சிருக்கிற பாசமெல்லாம் உனக்கு எங்கப் புரியப் போகுது?, யாரோ மயில்சாமி மக எழிலரசியாம்ல?, நீ ம்-ன்னு சொன்னா கிழவி பரிசம் போடக் கிளம்பிரும். நீ அவளையேக் கட்டிக்கிட்டு சந்தோசமா இரு”

-அதுவரை பேசிக் கொண்டே நடந்தவள், கடைசி வாக்கியத்தை மட்டும் நின்று அவனை நோக்கி எரிச்சலும்,கோபமுமாய் மொழிந்து விட்டுத் திரும்ப… அவள் கையைப் பற்றி அருகிலிழுத்து இடையை வளைத்திருந்தான் மாறன்.

திடீரென்ற அவன் செய்கையில் திகைத்துத் தனக்கு வெகு அருகேத் தெரிந்த அவன் முகத்தை நோக்கியவள், விழிக்கடலில் உருண்டோடும் கருமணிகளிரெண்டும் தெறித்து தொபுக்கென வெளியே விழுந்து விடுமளவிற்கு ஓர் ஆச்சரிய பாவனையைத் தன் கயல் வழியே வெளிப்படுத்தினாள்.

“சின்னப்புள்ளையாச்சேன்னு இத்தனை நாள் உன்னைய விட்டு வைச்சது தப்பாப் போச்சுடி” – மென்மையைத் தாங்கியபடி மயிலிறகாய் வெளிவந்தது அவன் குரல்.

-பேச்சியாத்தா,முத்தரசி,கார்மேகத்திலிருந்துத் தொடங்கி மாறன் வரை கௌரி குடும்பத்தார் அத்தனை பேருக்கும் கட்டைக் குரல் தான். ஒலிப்பெருக்கியே தேவையில்லை என்பது போல, எட்டுத் தெருவுக்குக் கேட்குமளவிற்கு எந்நேரமும் முழுத் தொண்டையில் கத்திப் பேசுவது தான் அவர்களது வழக்கம்.

அதிலும் மாறன், அவ்வப்போது சில முறை அவளருகே வந்து முணுமுணுப்பதுக் கூட பத்தடித் தொலைவில் தள்ளி நிற்கும் பத்தாவது ஆளுக்குக் கேட்குமளவில் தானிருக்கும். அப்பேர்ப்பட்ட லௌட்ஸ்பீக்கரிடமிருந்து வெளிப்பட்ட இந்தக் குரல், கௌரியை வியப்பிற்குள்ளாக்கியதில் ஆச்சரியமேதுமில்லை.

சில நேரங்களில் அவளைத் தன்னுடைய உரிமைப் பொருள் என்கிற பார்வையுடன் ஒளிவு மறைவின்றி ஊரார் முன்னிலையில் வம்பு பேசி கேலி செய்பவன் அவன்! செங்குளத்தின் பாதாளச் சாக்கடையில் ஓடும் பெருச்சாளிக்குக் கூடத் தெரியும் கௌரி, மாறனின் முறைப்பெண் என்பது!

அதே போல் பல சமயங்களில் அவளது வயதைக் காரணம் காட்டி ஒதுங்கி நின்று மூத்தவன் என்கிற அனுபவத்தில் அவளது படிப்பு மற்றும் பாதுகாப்பில் முறையாக அறிவுரை கூறி உடனிருந்திருக்கிறான்.

ஆனால் இது போன்ற வெகு சில கணங்கள் மட்டுமே அவனுக்குள் ஒளிந்திருக்கும் அவளுக்கான காதலனை அவன் வெளிப்படுத்துவது!

அந்த நிமிடங்களில் அவனிடமிருந்துக் கேலிப் பேச்சு அறவே வராது! தனது தகுதி,அவள் மீதான அவனது உரிமை அத்தனையையும் மறந்து, அவளது அன்பையும்,காதலையும் மட்டுமே யாசிக்கும், அவ்விழிகளின் உணர்வுகள் கௌரியை மொத்தமாக வசப்படுத்தி விடும்.

எப்போதும் அலைபாயும் தன் அகண்ட கண்களின் கருமணியை அவள் பால் நிறுத்தி, உதடு துடிக்கக் கொஞ்சம் காதல்,கொஞ்சம் காமத்தோடு அவன் பார்க்கும் பார்வை அவள் இதயத்தின் இயக்கத்தை நிறுத்தி விடும் வித்தையை அறிந்து வைத்திருந்தது.

அவன் குரலும்,பார்வையும் மாறிய விதத்தைக் கண்டுப் படபடத்த இமைகளை மெல்லத் தாழ்த்தியபடி இடையில் பதிந்த அவன் கரத்தை விலக்க எத்தனித்தாள் அவள்.

அவளது முயற்சியைத் தடுத்து தன்னோடு இறுக அணைத்துக் கொண்டவன் அவள் கூந்தலில் முகம் புதைத்து “கௌரி……” என்றான்.

இது என்ன மாதிரியான உணர்வென்பதே புரியாமல், உடல் முழுதும் ஊடுருவிச் செல்லும் சிலிர்ப்பையும், நடுங்கும் உதடுகளையும், வெடவெடக்கும் கை,கால்களையும் கட்டுப்படுத்த முயன்று தோற்று.. அவன் மார்பில் முகத்தைச் சாய்த்து இறுகக் கண் மூடியிருந்தாள் அவள்.

“இதையெல்லாம் உனக்குப் புரிஞ்சுக்கிற வயசு இல்ல தான். ஆனாலும் சொல்றேன்…” என்று இடைவெளி விட்டவன், மென் குரலிலேயே மீண்டும் தொடர்ந்தான்.

“இந்த மாதிரி நினைப்பெல்லாம் பார்க்குறவ மேல-லாம் வராதுடி!, மயில்சாமி மகளோ, கந்தசாமி மகளோ.. அப்பத்தா எவளைக் கூட்டி வந்தாலும், என்னால ஏத்துக்க முடியாது! ஏன்னா…. எனக்கு.. நீ மட்டும் தான் வேணும்! இப்புடி இறுக்கக் கட்டிக்கிறதுக்கு… இன்னும்,இன்னும் எல்லாஆஆத்துக்கும்! புரிஞ்சதா?” – அவன் முடிப்பதற்குள், அவன் மார்பிலிருந்து சட்டென நிமிர்ந்து கண்களிலும்,உதட்டிலும் சிரிப்புப் பரவ அவனை முழு மலர்ச்சியுடன் நோக்கியவளைக் கண்டுச் சிரித்து விழி மூடியபடி அவளது உதடு நோக்கிக் குனிந்தவன்.. பின் என்ன நினைத்தானோ மீண்டும் நிமிர்ந்து.. “இது சரி வராது..” என்று விட்டு பட்டென அவள் இடையிலிருந்துத் தன் கரத்தை உறுவிக் கொண்டான்.

இத்தனை நேரமாகக் கால்கள் தரையில் பதியாமல், அவனோடு அண்டியபடி நின்று கொண்டிருந்தவள், அவன் திடீரென விலகியதும் தள்ளாடி பொத்தெனக் கீழே விழுந்தாள்.

அவளை விலக்கியதும் அவள் முகம் பாராமல் திரும்பி நடந்தவன் “மாமன் ரொம்ப மோசமானவன் டி!, இனி இந்த மாதிரி முகத்தை வைச்சிக்கிட்டுப் பக்கத்துல வராத” என்று கூறியபடியே விறுவிறுவெனச் சென்று விட்டான்.

இன்னமும் படபடத்துக் கொண்டிருந்த இதயத்தையும், நடுங்கிக் கொண்டிருந்த கைகளையும் கண்டு செய்வதறியாது விழுந்த நிலையிலேயேக் கிடந்தாள் கௌரி.

ல நாட்களுக்குப் பிறகு அன்று பகல் பொழுதில் பெரிய வீட்டில் தென்பட்டார் ஒண்டிவீரன். சுப்புவும்,சென்றாயனும் இணைந்துத் திட்டமிட்ட தினத்திலிருந்து கண்ணில் படாத மனிதர், இன்று அதிசயமாய் வீட்டிலிருக்கவும், சுப்பு மெல்ல அவரை நெருங்கினாள். எப்படித் தொடங்குவதென்று வெகுவாக யோசித்தவள்.. பின்..

“நான் பழையபடி ஜமீன் வீட்டுக்கேப் போயிரலாம்ன்னு இருக்கேன்” – என்று கூற.. எதிர்பார்த்தது போல் கோபப் பார்வையுடன் அவளை நோக்கினார் வீரன்.

“என்னடி விளையாட்றியா?”

“யாரு நான் விளையாடுறேனா?, கல்யாணம் பண்ணிக்கிறேன், அது,இதுன்னு சொல்லி கூட்டியாந்து வீட்ல வைச்சவரு, என் முகத்தைப் பார்த்துப் பேசக் கூட நேரம் ஒதுக்காம திரிஞ்சா, நான் என்ன தான் செய்றது?, என்னைய விட அழகி எவளும் கிடைச்சுட்டாளா?, அதான் என்னைய ஒதுக்கப் பார்க்குறீரோ?” – வராத கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் அவள்.

“அப்டியெல்லாம் எந்த எழவும் கிடயாது. கல்யாணம் தான?, இப்பக் கூடப் பண்ணிக்கிறேன், தாலி வாங்கிட்டு வரச் சொல்லவா?”

“ம்ம்ம், இங்கன வைச்சா?, கல்யாணம்ன்றது கடவுள் சந்நிதில நின்னு மனப்பூர்வமாப் பண்ணிக்க வேண்டிய விசயம்?”

“அடேங்கப்பா! உன்னைய மாதிரிப் பொம்பளகளுக்குக் கூட கடவுள் பக்தி இருக்காடி?, ஆச்சரியம் தான்!”

“இதுவரைக்கும் இருந்ததில்ல தான்!, இனியாச்சும் உங்களோட காலம் பூரா நல்லபடியாக் கழிக்கனும்ன்னு தேன் சாமி முன்னாடி தாலி கட்டிக்கனும்ன்றேன்!, உங்களை நான் வற்புறுத்தல சாமி! என் காலம் அந்த ஜமீனோடத் தான் கழியனும்ன்னு இருந்தா, நான் அப்படியே வாழ்ந்துட்டு சாகுறேன்”

-கஷ்டப்பட்டு யோசித்து அவள் கோர்வையாகப் பேசிக் கொண்டிருக்க, ஒண்டிவீரனின் பார்வையோ அவள் முகத்தைத் தவிர அத்தனை இடங்களிலும் மேய்ந்து கொண்டிருந்தது. அதை உணர்ந்ததாலோ என்னவோ, அவள் மேலும் தன் நடிப்பைத் தொடர்ந்தாள்.

“இப்ப என்ன தான் செய்யனும்ன்ற?”

“சட்டுப்புட்டுன்னு நல்ல நாளா பார்த்துக் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க”

“நல்ல நாள், நொல்ல நாளெல்லாம் நீயும்,உன் தம்பியும் பாருங்க. தாலி கட்டுற அன்னிக்கு நான் உன் கூட இருப்பேன்” – என்றதோடு அவர் முடித்துக் கொள்ள.. அவசரமாக அவரைத் தடுத்தவள்.. “எனக்கு இன்னொரு ஆசையும் இருக்கு” என்றாள்.

“என்ன?”

“அப்பன்,ஆத்தா இல்லாத எனக்கு, இருக்கிற ஒரே ரத்த சொந்தம் என் தம்பி மட்டும் தான்றது உங்களுக்குத் தெரியும் தான?”

“அதுக்கென்ன?”

“கஷ்டத்திலயும்,துக்கத்துலயும் என் கூட இருந்த அவனுக்குக் கைம்மாறா நான் எதாவது செய்யனும்ன்னு நினைக்கிறேன்”

“செய்!, காசு,பணம் எது வேணும்ன்னாலும் கணக்கரைக் கேளுன்னு சொன்னேன்ல?”

“அய்ய, காசு,பணம் யாருக்கு வேணும்?, என் தம்பிக்கு என்னை விட அதெல்லாம் பெருசு இல்ல”

“பின்ன?”

“இந்த வயசுல நானே கல்யாணம்,அது,இதுன்னு செட்டில் ஆகனும்ன்னு ஆசைப்பட்றப்ப, அவன் வயசுக்கு அவனுக்கும் ஆச வரும் தான? அதனால..”

“அதனால?”

“அவனுக்கு ஒரு நல்ல பொண்ணாப் பார்த்து கட்டி வைக்கலாம்ன்னுனுனு..”

“நல்ல பொண்ணுன்னா.. எப்புடி உன்ன மாறியா?”

“ப்ச், விளையாடாதீங்க”- சிணுங்கிக் கொண்டவளைக் கண்டு, வெட்கமின்றி தொப்பை குலுங்க நகைத்தார் ஒண்டிவீரன்.

“இல்ல, நான் உங்களைக் கட்டிக்கிட்டா.. கௌ.. கௌரி எனக்கு மகளாயிடுவா!, அக்கா மகளைத் தம்பிக்குக் கட்டிக் கொடுக்கிறது கால,காலமா நடக்குறது தான?, அ…அதான்.. சென்றாயனுக்குக் கௌரியைக் கட்டிக் கொடுக்கலாம்ன்னு……………………..” – அவள் முடிப்பதற்குள், சற்றுமுன்னிருந்த மையல் மறைந்து சீறும் பார்வையை அவள் மீது செலுத்தியிருந்தார் ஒண்டிவீரன்.

“உன்ன மாதிரி ஒரு ****** கூடப் பொறந்தவனுக்குக் கட்டிக் கொடுக்கிற அளவுக்கு ஒண்டிவீரன் வீட்டுப் பொம்பளைங்க தரம் தாழ்ந்துட்டாங்கன்னு நினைச்சியாடி?” – ரௌத்திரத்துடன் வெளிப்பட்டது அவர் குரல்.

இதை எதிர்பார்த்திருந்தவள் போன்று, அவரது கோபத்துக்குக் கட்டுப்படாமல் நிமிர்ந்து நின்றவள், அவர் கூறியதைக் கேட்டுக் கலகலவெனச் சிரித்தாள்.

“ஹாஹாஹா.. என் தம்பியைக் கட்டுறதால உங்க மக தரம் தாழ்ந்து போயிருமா?, அடேங்கப்பா!, உங்கள மாதிரி ஒரு ஆளுக்கு மகளாப் பொறந்தன்னிக்கே அவ தரம் தாழ்ந்து தான் போயிருச்சு!, தெரிஞ்சுக்கங்க”

“என்னடி ரொம்பப் பேசுற?” – கையை ஓங்கியவரைக் கண்டுகொள்ளாது..

“எங்க, வெளியே போய் உங்க பேரைச் சொல்லி உங்க மகளுக்கு மாப்ள கேட்டுப் பாருங்க, ஒரு பய முன்ன வர மாட்டான்!, ஊருக்கு ஒரு கூத்தியாளோட வாழ்ந்த நீங்க, உங்க மகளை எவனுக்காவது வப்பாட்டியா வேணா அனுப்பி வைக்கலாம்” – இப்போது ஒண்டிவீரனின் கரம் அவள் கன்னத்தில் இடியென இறங்கியிருந்தது.

“ஓ!, மகளை ஒதுக்கி வைச்சிருந்தாலும், அவ மேல பாசம் குறையாமத் தான் இருக்கீங்க போலருக்கு!, என் தம்பிக்கு உங்க பொண்ணைக் கட்டிக் கொடுக்க முடியாதுன்னா, என்னாலயும் உங்களைக் கட்டிக்க முடியாது! பண்றது காவாலித்தனம் தான்னாலும், ஜமீன் எனக்கு நேர்மையாத் தானிருந்தான்! நான் அவன் வீட்டுக்கேப் போறேன்” என்று வெளியேற எத்தனித்தவள் நின்று..

“நான் இதை யோசிச்சது என் சுயநலத்துக்காக இல்ல. உங்க நல்லதுக்காகத் தான்!, பாதிக்கும் மேல உங்க பரம்பரை சொத்து அத்தனைக்கும் உரிமைக்காரி உங்க மக தானாம்ல?, நாளைக்கு நீங்க அவளை ஒருத்தனுக்குக் கட்டிக் கொடுத்து, அவனும்,அவளும் சேர்ந்துக்கிட்டு சொத்தையெல்லாம் எடுத்துக்கிட்டு, நீங்க இத்தன நாளா அவளுக்குப் பண்ணுன பாவத்துக்கு, உங்களை அநாதையா வெளிய துரத்தி விட்டா, என்ன செய்வீங்க?, கடைசி காலத்துல மக கண்டிப்பா கூட இருக்க மாட்டா!, எப்டியும் நமக்குத் துணை வேணும்ன்னு தான என்னைக் கட்டிக்கச் சம்மதிச்சீங்க?, இப்ப என்ன மக மேல பாசம் இருக்கிற மாதிரி பொங்குறீங்க?” – அவள் பேச்சைக் கேட்டு ஒண்டிவீரன் அமைதியானதும் மேலும் பேசினாள் அவள்.

“நான் சொன்ன மாதிரி என் தம்பிக்கும்,அவளுக்கும் கல்யாணம் நடந்தா.. புள்ளயோடு சேர்த்து சொத்தும் நம்ம கையை விட்டுப் போகாது! எதுக்கும் கலங்காத ஒண்டிவீரன்ற ஆம்பள, கடைசி வரைக்கும் கெத்தாவே வாழ்ந்துட்டுச் சாகலாம்!, இதுக்கப்புறம் உங்க இஷ்டம்” என்றவள் தன் பையை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டாள்.

அவள் சென்றதும் ஓடி வந்து ஒண்டிவீரனை நோக்கிய மாயி “அண்ணே!, அண்ணி வீட்டை விட்டுப் போறாங்கண்ணே” என்று கூற.. பதில் பேசாது நின்றவரின் முகம் பலத்த யோசனையிலிருந்தது.

ரு விடுமுறை நாளன்று காலை.. செங்குளத்தின் நூலக வாசலில் நின்றபடி அன்றைய தினசரி நாளிதழை வாசித்துக் கொண்டிருந்தான் மாறன். செங்குளச் சாயப்பட்டறை விவகாரம் மாநில அளவில் பெரு அளவில் உருப்பெற்றிருந்ததைப் படித்தபடி தீவிர முகத்துடன் நின்றிருந்தவனைக் கடந்து லைப்ரரிக்குள் நுழைந்தாள் கௌரி.

“களவாணிப்பயலுக, இந்தப் பத்திரிக்கைக்காரய்ங்க திருட்டுப் பயலுகன்றதை நிரூபிக்கிறானுங்க பாரு!, எப்டி நியூஸ் எழுதிருக்கான்?, எலேய் கரிகாலா…. இந்த ஆர்ட்டிகிள் எழுதுன திலீப்குமார் எவன்னு புடிடா, அவன் விரலை ஒடிச்சாத் தான் எனக்குத் திருப்தியாகும்” – வாசித்தச் செய்தி தந்த ஏமாற்றத்தில் கோபமாகப் பேசியவனிடம்..

“நீ அவன் விரலை ஒடிக்கிறது இருக்கட்டும், உன் அயித்த மவ, உன் மேல கை வைக்காமலே உன்னைய ரெண்டா உடைச்சிருவா போல!, அப்படிப் பார்த்துட்டுப் போறா” என்றான் கரிகாலன்.

“என் அயித்த மவளாஆஆஆ” என்றபடியே திரும்பி நோக்கிய மாறன், நூலகத்தினுள் ஏதோ நூலைத் தேடியபடி, புத்தகத்தின் மீது ஒரு பார்வையும்,அவன் மீது ஒரு பார்வையுமாயிருந்த கௌரியைக் கண்டான்.

நாத்து நடவு தினத்திற்குப் பிறகு, ‘படிக்குற புள்ள மனசைக் கெடுக்கிறயேடா நாயே!, வெக்கமா இல்ல உனக்கு’-என மனசாட்சி முகத்திலேயே காறித் துப்பியதால் அவளை வெகுவாகத் தவிர்த்துக் கொண்டிருந்தான் அவன்.

இன்றும் அதே போல நகர்ந்து விட எண்ணியவன் பின் என்ன நினைத்தானோ பிடறி முடியைக் கோதியபடி அவளருகே வந்தான்.

“இன்னும் 10 நாள்ல பரீட்சைய வைச்சுக்கிட்டு, எதுக்கு வெளிய சுத்திக்கிட்டிருக்கவ?”

“லைப்ரரிக்கும் படிக்கத் தான் வருவாங்க”

“ஹ்ம்ம்ம், பன்னிரெண்டாங் க்ளாஸ்க்கே லைப்ரரில புக் எடுத்துப் படிக்கிற அளவுக்கு அறிவாளியாடி நீயி”

“அ…அ..அது.. சும்மா படிச்சுட்டே இருக்கிறது போர் அடிச்சுச்சு, ஒரு மாறுதலுக்காக லைப்ரரிக்கு வந்தேன்” – என்றவள் அப்பட்டமாகப் பொய் கூறுகிறாள் என்பதை அவனால் கண்டு கொள்ள முடிந்தது.

பஸ் ஸ்டாப் டீக்கடையிலும், அவனது தியேட்டர் வாசலிலும் இந்தப் பல நாட்களாக அவனைத் தேடித் தேடிச் சலித்துப் போனவள், இன்று தற்செயலாக நூலக வாசலில் அவனைக் காண, வாய்ப்பைத் தவற விட வேண்டாமென்றெண்ணி உள்ளே நுழைந்திருந்தாள்.

“ஹ்ம்ம்ம்ம்” என்றவனும் மேலும் எதுவும் பேசாமல் அமைதியாகி விட.. அவனருகாமையை உணர்ந்தபடி மெல்ல நடந்து.. ஒவ்வொரு புத்தகமாகப் பார்வையிட்டாள் கௌரி.

அவளையே பார்த்தபடி அவள் பின்னே தொடர்ந்து நடந்தவன் “கலர் சுடிதாரெல்லாம் போடுற போல!, எந்நேரமும் பாவாடை-தாவணி தான கட்டுவ?, இப்போ என்ன புதுசா?” என்று விசாரித்தான்.

“எந்தக் காலத்துல மாமா இருக்குற?, பாவாடை-தாவணியெல்லாம் பழைய ஃபேஷன்”

“ஓஹோஓஓஓ”

“ஏன், எனக்கு சுடிதார் நல்லாயில்லையா?” – அவன் புறம் திரும்பி நின்று நேராகக் கேட்டவளைக் கண்டுப் பல்லைக் கடித்துக் கொண்டு மறுபுறம் பார்த்தவன்..

“ஒரு தடவ தொட்டா, மறுபடி மறுபடி தொடத் தோணும்ன்னு கூட இருந்த பயலுக சொன்னப்பல்லாம் நம்பாம போனது தப்பாப் போச்சேடா மாறா” என்று முணுமுணுத்து விட்டு “நீ வந்த வேலையைப் பாரு, நான் வர்றேன்” என்று கிளம்பி விட்டான்.

“ஷ்ஷ்ஷ்ஷ் அப்பாஆஆஆ” என்றபடி பஸ் ஸ்டாப் டீக்கடையருகே வந்தவன் “அனுபவம் புதுமை… அவளிடம் கண்டேன்…” – என்று டீக்கடையில் ஒலித்த பாடலைக் கேட்டு “சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி ஒரு பாட்டைப் போட்டுக் கொளுத்துறதையே வேலையா வைச்சிருக்காய்ங்கப்பா” என்று புலம்பியபடி உள்ளே நுழைந்தான்.

அவன் உள்ளே நுழைவதைக் கண்டு ஒரு உருவம், டீக்கடைக்குள் பம்முவதை உணர்ந்தவன் சற்று உற்று நோக்கி.. சென்றாயனைக் கண்டு கொண்டு “அட இந்தக் களவாணிப்பயலா” என்று விட்டு அவனருகே சென்றான்.

“என்னண்ணே!, நீ இன்னுமா இந்த ஊருக்குள்ள சுத்திட்டிருக்க?, உங்கொக்காகாரி ஒண்டிவீரனை விட்டு ஓடிட்டான்னு கேள்விப்பட்டேனே”

-வழக்கம் போலச் சத்தமான குரலில் அவன் நக்கலடித்ததும், சுற்றியிருப்போர் லேசாக நகைக்க, பல்லைக் கடித்த சென்றாயன் பதிலேதும் கூறாமல் அமைதியாயிருந்தான்.

“அக்காவுக்காகத் தூது போகலாம்ன்னு வந்திருக்கிறீரோ?” – அவன் விடுவதாக இல்லை.

“அப்டியெல்லாம் ஒன்னுமில்ல”

“பின்ன?,இந்த முறை நீங்க முயற்சி பண்ணலாம்ன்னு நினைச்சுட்டீங்களா?, ஆனா.. என் மாமன் ஆம்பளைகளோடெல்லாம் சுகிக்க மாட்டான், தெரியும்ல? – எனக் கூறி நகைக்க.. கோபம் தலைக்கேறிப் பட்டென எழுந்தான் சென்றாயன்.

மீசையை முறுக்கியபடி அவனை உறுத்து நோக்கியவன் “என்னண்ணே கோவம் வருதா??,அப்டின்னா போவோமா பொதருக்குப் பின்னாடி?”-எனக் கேட்க.. வியர்வை வழிந்த முகத்துடன் கையிலிருந்த சிகரெட்டைக் கீழே போட்டு நசுக்கியவன் அவனுக்குப் பதில் கூறாமல் விறுவிறுவென வெளியே நடந்தான்.

“இந்தப் ****பயலுக்கு நம்மூர்ல என்ன வேல?,மாறன் எப்பிடியாளுன்னு தெரியாம, அவன் கண்ணுல பட்டு உரண்ட இழுத்துட்டுத் திரியுறான் பாரு!, செமத்தையா வாங்கியும் போ மாட்றானேய்யா” – ஊர்க்காரர்களின் பேச்சுக் காதில் விழுந்ததும் அவமானத்தில் முகம் சிவக்கத் தன் பைக்கை நோக்கிக் கிட்டத்தட்ட ஓடிய சென்றாயனின் மனதில் வன்மம் வேர் விட்டு வளரத் துவங்கியிருந்தது.