அத்தியாயம் - 8

ரு மனிதனுக்கு அழிவுகாலம் என்பதுத் தொடங்கி விட்டால், அவனைச் சுற்றி வீசும் காற்று கூட அவனை அழிவுப்பாதை நோக்கித் தான் இழுத்துச் செல்லுமாம்! எருமை மாட்டின் மீதமர்ந்து கொண்டு எமன் என்பவன் பாசக்கயிற்றை வீச நேரம் பார்த்துக் கொண்டுத் தன்னையே தொடர்வதை அறிந்து கொள்ளாமல், பேராசையால் மூளை மழுங்கிப் போய், ஆட்டுவிப்பவரின் போக்க்கு ஆடத் துவங்கும் போதே, பாதி செத்துத் தான் விடுகிறோம்!

உலக நியதி அறியாமல், தானும் ஒரு சாதாரணச் சதை பிண்டம் தான் என்பதை மறந்து 30 வயதிலிருந்து மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டு, தன்னைச் சூழ்ந்தோருக்குப் பெருத்தத் தலைவலியாக உருமாறி ஆட்டம் போட்ட ஒண்டிவீரனை என்ன தான் சொல்வது?, ஏழரை சனி கூட ஒரு ராசியிலிருந்து நீங்கும் போது நல்லது செய்து விட்டுத் தான் செல்லுமாம்!, ஆனால் ஒண்டிவீரன் சனிபகவானை விடக் கொடியவன் போலும்! விதி முடியப் போகும் காலத்தில் கூட சுப்புவின் எடுப்பார் கைப்பிள்ளையாகித் தன் சொந்த மகளின் வாழ்வுக்குத் தன் கையாலேயே சூனியம் வைத்திருந்தார்.

ஆம்!, சுப்பு கூறிய சொத்து விசயம் அவரை வெகுவாக அசைத்து விட்டது. ஒண்டிவீரன் என்கிற ஆண்மகன் இஷ்டம் போக்கில் வாழ்நாளின் இத்தனை வருடங்களைக் கடந்ததற்கான மூலக்காரணியேப் பணமும்,அதனால் கிடைத்த செல்வாக்கும் தான்!,

ஒரு வேளை… ஒரு வேளை.. சுப்புவின் கூற்று மெய்யாகி.. கௌரி ஒருவனைத் திருமணம் செய்த பின், அவனோடு சேர்ந்துப் பரம்பரைச் சொத்துக்களைச் சுருட்டிக் கொண்டு அவரைத் தெருவில் தள்ளினால்… அவரது நிலை என்னவாகும்?

பணம் போனால், அதன் இரட்டைப் பிறவியான செல்வாக்கும் உடன் சென்று விடுமே! அவரது செல்வாக்கிற்காக மட்டுமே, அவர் கடித்துத் துப்பும் எலும்பைக் கூட உறிஞ்சித் தின்னத் தயாராய் இருக்கும் ஓநாய்க் கூட்டத்தில் யார் அவரை மதிப்பர்?

தன்னை எதிர்த்து ஒரு கேள்வி கேட்க ஆளின்றி, செங்குளத்தின் சீமராஜாவாக வலம் வந்த கம்பீர ஆண் புலி அவர்! மாறன் விசயத்தில் ஒருமுறை தோற்றதற்கே, அவ்வளவு தான், கிழவனின் அழிவுகாலம் நெருங்கி விட்டதென்று தன் முதுகுக்குப் பின் புறம் பேசும் குள்ளநரிகளைப் பற்றி அவர் உணர்ந்து தானிருந்தார்.

அப்படியிருக்கையில், உடம்பின் தெம்பு மறைந்து ஓய்வு பெற நினைக்கும் கால கட்டத்தில், தான் செய்த வினையின் பலனாக, கௌரி மற்றும் அவனது கணவனால்.. தண்டனை பெற நேர்ந்தால்?, ஒண்டிவீரன் என்கிற புலி, பூனையெனப் பெயர் பெற்று விடுமே! இத்தனை வருடங்களாக நிமிர்ந்த தலையுடனும்,விரிந்த மார்புடனும் திமிராக வலம் வந்து விட்டுக் கடைசி காலத்தில் கௌரவத்தை இழந்து உயிர் விடுவதா? கூடாது! கூடவே கூடாது! சுப்பு கூறியது போல், கௌரியை சென்றாயனுக்குக் கட்டி வைத்து சொத்து வெளியில் எங்கும் சென்று விடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். இன்னும் 10வருடங்களோ,20 வருடங்களோ பல் போய்,பார்வை மங்கிக் கூன் விழுந்துப் படுத்த படுக்கையாகிப் போன நிலை வந்தாலும்.. ஒண்டிவீரன் என்றதுமே ஊராருக்குள் ஓடும் நடுக்கம், கடைசி வரை இருக்க வேண்டும்!

தீர்மானித்த மறுநொடி சுப்புவை அழைத்துத் தன் சம்மதத்தைத் தெரிவித்து, அவளையும்,சென்றாயனையும் தன் வீட்டிலேயே மீண்டும் தங்கும்படி ஏற்பாடு செய்து விட்டு ஒதுங்கிக் கொண்டார் ஒண்டிவீரன்.

ஒண்டிவீரன் தங்களது திட்டத்திற்கு எப்படியும் ஒத்துக் கொள்வார் என்பதை சென்றாயனும் சுப்புவும் அறிந்தே இருந்தனர். பெண்கள் விசயத்தைப் போலவே, காசு,பண விவகாரத்திலும் அவர் வீக் தான்! அதனால் கிழவர் அளித்த சம்மதத்திற்கு அவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

இப்போதைய சூழ்நிலையில் அவர்களது கண் முன்னே விஸ்வரூபமாய் எழுந்து நிற்கும் பிரச்சனை, கௌரியைச் சுற்றி அரண் போலக் காத்து நிற்கும் 3 காவலாளிகளைப் பற்றியது தான்!

பேச்சியாத்தா,கார்மேகம்,நன்மாறன்! இவர்கள் மூவரைக் கடந்து கௌரியின் மீது அத்தனை சுலபமாகக் கை வைத்து விட முடியாது. புத்தியுடன் திட்டமிட்டு செயல்பட வேண்டியக் கட்டாயத்தில் இருப்பதை உணர்ந்து கொண்டனர்.

அதன் முதற்ப்படியாக நன்மாறன் என்கிற சிங்கத்தைச் சாய்த்து விட்டால் போதும்! அடுத்தடுத்தக் காய்களை ஆயுதமின்றி வெட்டி விடலாம் என்பது சென்றாயனின் கருத்தாக இருந்தது. அந்தச் சிங்கத்தை வீழ்த்தும் பணியை, அவன் மீது ஏற்கனவே குறி வைத்திருந்த புலி ஏற்றுக் கொண்டது.

சாயப்பட்டறை விவகாரத்தில் ஏற்கனவே மாறனால் வெகுவாகக் காயப்பட்டிருந்தார் ஒண்டிவீரன். சமயம் பார்த்து அவன் மீது அம்பெறிய அவர் தீர்மானித்திருக்க, அதற்கு நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது நன்மாறனின் கண்டன ஊர்வலப் போராட்டம்.

சாயப்பட்டறைக் கழிவு விசயத்தைப் பொறுத்தவரை ‘இத்தோடு முடிந்தது’ என ஊர்மக்கள் ஆசுவாசமிடும் இடைவெளி ஒவ்வொன்றிலும் புகுந்து விளையாடிக் கொண்டிருந்தார் ஒண்டிவீரன். ஒரு நிலைக்குப் பிறகு இந்தப் பிரச்சனை செங்குளக் கிராம மக்களுக்கு ஓயாத ஒன்றாக மாறிவிட.. குடிநீர் ஆற்றில் கலந்து விடப் பட்ட கழிவுகளோ, ஆற்றைச் சுற்றியக் குடிசையில் வாழும் மக்களுக்குச் சரும வியாதிகளையும்,சுவாசக் கோளாறையும் உண்டு பண்ணிக் கொண்டிருந்தது.

ஏற்கனவே கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டிருந்த மாறனை, கலெக்டர் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருக்க, இப்போது விசயம் தீவிரமடைந்த பின்பும் கூட, அரசு அமைதி காப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி, செங்குளத்திலிருந்துத் தொடங்கி கலெக்டர் அலுவலகம் வரை கண்டன ஊர்வலம் செல்ல முடிவு செய்தனர். வழக்கம் போல மாறன் இதற்குத் தலைமை ஏற்க, கார்மேகம் அவனுடனிருந்து செயல்பட்டார்.

மாறனுடைய கண்டன ஊர்வல விவகாரம் கமிஷனர் அலுவலகத்தை எட்டியதுமே, ஒண்டிவீரன் தன்னுடைய அள்ளக்கை ஆபிசர்களுடன், சதியாலோசனையில் ஈடுபட்டார்.

பேச்சுவார்த்தையில் இழுபறி நிலையிருக்கும் வரை ஊர் மக்கள் நிச்சயம் அமைதியுடன் வேடிக்கை பார்க்க மாட்டார்கள். அதற்காக ஊர் மக்களைக் கருத்தில் கொண்டு ஃபேக்டரியை மொத்தமாக இழுத்து மூடுவதென்பதெல்லாம் முடியவே முடியாத காரியம். இன்று சாயப்பட்டறை, நாளை இன்னும் அரசின் கஜானா உயருவதற்கும்,அரசியல்வாதிகள் பாக்கெட் பெருகுவதற்கும் அவர்கள் போடும் திட்டங்கள் ஒவ்வொன்றிற்கும் மக்கள் எதிர்ப்புத் தர தொடங்கி விடுவார்கள்.

அத்தோடு, ஃபேக்டரி ஓனரோ பெரிய புள்ளி! அவரைப் பகைத்துக் கொள்வதென்பது போலீஸாரால் முடியாத காரியம். கழிவுகளை முறையாக வெளியேற்றுவதற்கும், கழிவு நீரைச் சுத்திகரித்த பின் ஆற்றில் கலக்க விடுவதற்கும் பணம் போட ஓனர் தயாராகவும் இல்லை. அப்படியானால் இந்தப் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு?

போலீஸ்,கலெக்டரிலிருந்துத் தொடங்கி பெரிய,பெரிய அரசியல்வாதிகள் வரை அத்தனை பேரின் வயிற்றையும் நிறைக்கும் ஃபேக்டரி ஓனர்,ஒண்டிவீரன் போன்ற பணக்கார முதலைகளைப் பகைத்துக் கொள்வதை விட.. போராட்டம்,ஆர்ப்பாட்டமென வேகாத வெயிலில் காயும் சாதாரண மக்களை அடக்கி ஒடுக்குவது தான் இந்தப் பிரச்சனைக்கு ஏற்ற முடிவென்றுத் தீர்மானித்தனர்.

லத்தி சார்ஜ்,துப்பாக்கிச் சூடு எனப் போலீஸ் எதைச் செய்தாலும் அரசு மீது தான் அனைவரது கவனமும் திரும்பும். இதே, மக்களுக்குள்ளேயேக் கலவரத்தைத் தூண்டி விட்டு, ஒருவரையொருவர் அவர்களே அடித்துக் கொள்ளும் நிலையை ஏற்படுத்தி விட்டால், வேலை சுலபமாக முடிந்து விடும்.

செங்குளம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தைச் சேர்ந்த கிராம மக்களில் பெரும்பாலோனோர் ஒரு குறிப்பிட்ட சாதிப்பிரிவினரைச் சார்ந்தவர்கள். சிறுபான்மையினத்தவராக மற்றொரு சாதிப்பிரிவினர் அக்கிராமங்களில் வசித்து வந்தனர்.

அந்தக் குறிப்பிட்ட சாதியினரிடம் தண்ணீர் வாங்கிக் குடிப்பதைக் கூட கௌரவக் குறையாகக் கருதும் மக்கள் மத்தியில் மேல் ஜாதி,கீழ் ஜாதியென்கிறப் பகையுணர்வு எப்போதும் இழையோடிக் கொண்டு தானிருந்தது. 10,15 வருடங்களுக்கு முன்பு இரு பிரிவினரிடையே நடந்த சாதிக்கலவரத்தில் பலரது உயிர்கள் காவு வாங்கப்பட்டிருந்தது. அதன் பின்பு ஒரேடியாக பிரச்சனையின்றி அனைவரும் சாதி,இன வெறியை மறந்து ஒற்றுமையாக வாழ்கிறார்கள் என்கிற நிலை இல்லாவிடினும் ஓரளவு சண்டை,சச்சரவின்றி வசித்து வந்தனர்.

அவ்வப்போது சுடர் விடும் சாதிச்சண்டைக்கு எண்ணெய் ஊற்றி பெருந்தீயாக உருமாறச் செய்து அன்று நடந்த கலவரத்தை மீண்டும் நிகழ்த்தினால், இப்போதைய பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.

சாதிச்சண்டைக்கானக் காரணத்தை ஆராயும் பணியும், கலவரத்தில் பலி போகும் உயிர்கள் தந்து போகும் காயங்களும் அத்தனை சீக்கிரத்தில் தீர்ந்து விடாது. மக்கள் கவனம் முழுதும் இதில் திரும்பும் போது, சாயப்பட்டறை விசயம் பின் தங்கி விடும். அதன் பின்பு, ஃபேக்டரிக் கழிவை மக்களின் வாயில் நேரடியாகக் கொட்டினால் கூட கேட்க ஆளிருக்காது என்பதே அவர்களது எண்ணமாக இருந்தது.

கண்டன ஊர்வலப் போராட்டத்துக்கு ஏற்பாடு செய்து சாதிக்கலவரத்தைத் தூண்டியதற்காக நன்மாறனைச் சிறையில் தள்ளிப் பல வருடங்களுக்குக் களி உண்ண வைக்க வேண்டுமென்பதை மனதுக்குள் தீர்மானித்துக் கொண்டார் ஒண்டிவீரன்.

இது ஏதுமறியாத மாறன், செங்குளம் மற்றும் அதன் சுற்று வட்டாரக் கிராம மக்கள் பலரைத் திரட்டிக் கொண்டு செங்குளத்திலிருந்து நடைபயணமாகக் கலெக்டர் அலுவலகம் வரை ஊர்வலமாகச் செல்லத் தொடங்கியிருந்தான்.

ஃபேக்டரியை மூடக் கோரியும், விவசாயிகளின் கஷ்டங்களை எடுத்துச் சொல்லியும், சரும,சுவாசக் கோளாறுகளை மக்கள் முன்பு காட்டிய படியும், ஏதேதோ கோஷங்களுடன் அமைதியாகத் தங்களது போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

டவுனில் இருக்கும் கலெக்டர் அலுவலகத்தை அடைய செங்குளத்தை அடுத்த மூன்று குக்கிராமங்களைக் கடக்க வேண்டியிருந்தது. அந்தந்த ஊர் கிராம மக்களும் இவர்களது ஆர்ப்பாட்டத்தில் சேர்ந்து கொண்டதால், கூட்டத்தின் எண்ணிக்கைப் பெருகத் தொடங்கிய நேரம், பாக்டீரியா,வைரஸ் போன்று ஆங்காங்கே மக்களோடு மக்களாய்க் கலந்திருந்த ஒண்டிவீரனின் ஆட்கள் தங்களது வேலையைக் காட்டத் தொடங்கியிருந்தனர்.

“எலேய் சித்தா, இங்க வாடா” – வேஷ்டி-துண்டு அணிந்து பெரிய மனிதர் போன்ற தோற்றத்திலிருந்த ஒருவன் தன்னருகே இருந்த இளைஞன் ஒருவனை அழைத்தான்.

“என்னண்ணே?”

“அண்ணன் செருப்பு திடீர்ன்னு பிஞ்சு போச்சு, ஓடிப் போய் தச்சுட்டு வாடா”

கோஷ ஒலிகளுடன் இடைவெளி விடாமல் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த மக்களை நோக்கிய சித்தன் தயக்கத்துடன் “இ..இப்போவாண்ணே?” என்றான்.

“என்னடா பார்க்குற?, நீயில்லாம ஊர்வலம் நகராதுன்ற மாதிரி பார்க்குற?, போ போ…. இந்தா செருப்ப கைல எடுத்துக்க, அப்டியே வரும் போது அண்ணனுக்கு ரெண்டு சிகரெட்டு வாங்கிட்டு வா” – விடாமல் ஏவினான் அவன்.

மேலும் தயங்கி நின்றவனிடம் “என்னடா இன்னும் நிக்கிற?,கலெக்டர் ஆபிஸ்க்கு போனதும் அதிகாரிங்களோடப் பேச்சு வார்த்தை நடத்தப் போறது, நீயோ,உன் சாதிக்காரனோ கிடையாது!, கூட்டத்துல கலந்துக்கிட்டா ஒரு வேளை சோறு கிடைக்கும்ன்னு வந்துட்டு, ரொம்பத் தான் பண்ற?, ஓட்றா.. ஓடுன்றேன்ல?” என்று அவன் விரட்ட… சித்தனும் செருப்பைக் கையில் எடுத்துக் கொண்டு ஓடினான்.

செருப்பைத் தைத்து முடித்து விட்டு மறுபடி அவன் கூட்டத்துடன் கலந்து கொண்ட போது “சிகரெட்டு வாங்கிட்டு வரச் சொன்னேன்ல, எங்கடா?” என்று விசாரித்தான் அவன்.

ஓடி வந்த அவசரத்தில் பீடியை மறந்து போன சித்தன், தலையைச் சொறிந்தபடியே “அவசரத்துல மறந்துட்டேண்ணே!”என்றான்.

“மறந்துட்டியா?, சரி, மறுபடி போய் வாங்கிட்டு வா” – அதிகாரமாக அவன் கூறியதும் சித்தனுக்குக் கோபம் வந்து விட..

“என்னண்ணே விளையாட்றியா?, அடிக்கிற வெயில்ல இப்ப தான் ஓடிப் போய் செருப்பத் தச்சிட்டு வந்திருக்கேன்!, இன்னொரு தடவ சிகரெட் வாங்க வேற போனுமா?, இன்னும் 1 கிமீ நடந்தப்புறம் கடை வரும், அங்க வாங்கிக்க” என்றான்.

“அடி செருப்பால, நாயே! யார்ட்டடா எகிறிக்கிட்டு வர்ற?, ஊர்க்குள்ள கக்கூஸ் கழுவிக்கிட்டும்,குப்பையள்ளிக்கிட்டும் திரிஞ்ச சாதிக்காரப் பயலுகள, இன்னிக்கு இவ்ளோ பெரிய கூட்டத்துல எங்களோட ஒருத்தனாக் கூட்டி வந்தா, மேல் ஜாதிக்காரனையே எதிர்த்துப் பேசுவியா நீயி?, எலேய், வேட்டிய மடிச்சுக் கட்டுடா!, வாடா, இன்னிக்கு நீயா,நானான்னு பார்த்துருவோம்!”

தனது சாதியைப் பற்றி இழிவாகப் பேசியதும் எகிறிய சித்தனும் “அண்ணே!, அளவாப் பேசு, தேவையில்லாம என் சாதிக்காரய்ங்களைப் பத்திப் பேசுன, வம்பாப் போயிரும் சொல்லிட்டேன்” என்று விரல் நீட்டி எச்சரித்தான்.

“யாரடா கைய நீட்டிப் பேசுற?, அப்டித் தான் டா பேசுவேன், என்னடா செய்வ?, குப்பயள்ளுறப் பயலுக தான நீங்க?, நாங்க தின்ன எச்ச இலையைப் பொருக்கித் திங்குறவிங்களுக்கு என்னத்துக்குடா ரோசம் வருது?” – என்று அவன் முடிப்பதற்குள், அவனது சட்டையைக் கொத்தாகப் பற்றியிருந்தான் சித்தன்.

“என் மேலயா டா கைய வச்ச?” என்று அவன் பதிலுக்கு சித்தன் மூக்கை உடைக்க, “என் சாதிக்காரன இழிவு படுத்துனதுமில்லாம, மேல வேற கை வைக்கிறியாடா?” என்று கீழ் ஜாதிப்பிரிவினர் பொங்கி எழுந்து தங்களது தாக்கலைத் துவங்க.. நிமிடத்தில் அங்கே கைக்கலப்பாகிப் போனது.

வாய்த் தகராறாய்த் துவங்கி, சட்டையைப் பிடித்துச் சண்டை போடுமளவிற்கு முன்னேறியிருந்த நிலையில், எங்கிருந்தோ திடீரென கட்டை,கம்பு,கத்தியென ஆயுதங்கள் பறந்து வர.. நொடியில் ஆளாளுக்கு அணிந்திருந்த சட்டையில் ரத்தக்கறையுடன் காட்சியளிக்கத் தொடங்கினர்.

யார் யாரை அடித்தனர்,குத்தினர் என்பதை உணர்ந்து கொள்வதற்கு முன்னேயே ஒரு சிலர் ரத்தக்காயங்களுடன் கீழே விழ ஆரம்பிக்க, நன்மாறனின் கண்டன ஊர்வலம், கலெக்டர் அலுவலகத்தைச் சென்றடையும் முன்பே, கலவரமாக உருமாறி, செங்குளம் சார்ந்த குக்கிராமம் ஒன்றை ரத்தபூமியாக மாற்றியிருந்தது.

கூட்டத்தின் ஒருபுறத்தைச் சார்ந்தவர்கள் அனைவரின் சட்டையும் சண்டையில் கிழிந்து கொண்டிருக்க, முன்னே சென்று கொண்டிருந்தவர்கள், சலசலப்பை உணர்ந்து என்னவென்று அறிந்து கொள்ளும் முன்பாகவே, அவர்களது மண்டை பொளக்கப்பட்டது.

கூட்டத்தைத் தலைமை தாங்கி முன்னே நடந்து கொண்டிருந்த நன்மாறன், நடந்து கொண்டிருப்பதை அறிய எடுத்துக் கொண்டது ஒரே ஒரு நொடி தான்! அடுத்த நிமிடம் தன்னைக் குறி பார்த்துத் தாக்க வந்தவனின் கையை ஒடிப்பதில் தீவிரம் காட்டிக் கொண்டிருந்தான்.

விறுவிறுவென இங்குமங்கும் நோக்கியபடி உருண்ட அவனது கண்மணிகள் “எலேய் கரிகாலா… நம்ம பயலுக எல்லாரையும் ஒன்னு திரட்டு, கத்தி,கம்புன்னு எவன் கைலலாம் ஆயுதமிருக்கோ, அத்தனை பேர் கையையும் ஒடிச்சுத் தனியா நிறுத்து” என்று ஆணையிட்டுக் கொண்டே முன்னேறி, ஆயுதம் தாங்கி நிற்பவன் ஒவ்வொருவனையும் வீழ்த்திச் சாய்த்தான்.

அவன் எதிர்பார்த்ததை விட அக்கம்,பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், செங்குளப் பிரச்சனைக்காக ஒன்று கூடியிருக்க, அத்தனை பெரியக் கூட்டத்தில் மூட்டப்பட்டிருந்த பெருந்தீயை அவன் ஒருவனால் அவ்வளவு சுலபமாகக் கட்டுப்படுத்த முடியவில்லை.

தோளும்,கை முட்டியும் கத்தியால் கீறப்பட்டதில் சட்டை கிழிந்து ரத்தம் வழிந்து கொண்டிருக்க, நெற்றி வியர்வையுடன் சேர்ந்து, அங்கும் குருதி பெருகிக் கொண்டிருந்தது மாறனுக்கு.

ஒண்டிவீரன்,ஒண்டிவீரன் ஒருவன் மட்டுமே இதற்குப் பின்னாலிருக்கிறான் என்பதைப் பட்டவர்த்தனமாகப் புரிந்து கொண்டவனுக்கு, அவனை ஜெயிக்க விடக்கூடாதென்கிற வெறியும் கூடிப் போக, கண்மண் தெரியாத ஆத்திரத்தில், தன்னைத் தாக்க வந்த அத்தனை பேரையும் தூக்கியெறிந்து கொண்டிருந்தான் அவன்.

பலி எண்ணிக்கையை அதிகமாக்க வேண்டுமென்று ஒண்டிவீரனால் கட்டளை விதிக்கப்பட்டிருந்ததால், கூட்டத்தில் கலந்து கொண்ட வயது முதிர்ந்த பெரியவர்களைக் குறி வைத்துத் தாக்கிக் கொண்டிருந்தக் கயவர்களை உடன் கண்டு கொண்டான் மாறன்.

உருட்டைக்கட்டையுடன் தன்னை நோக்கி வந்தவனிடம் சோடாபுட்டியைச் சரி செய்தபடி பதிலுக்குப் போராடிக் கொண்டிருந்த கார்மேகத்திடம்..

“பேண்ட்-சட்டையைப் போட்டுக்கிட்டு சும்மா கவர்மெண்ட் ஆபிசில் சீட்டைத் தேச்சா போதுமா சித்தப்பு, சண்டைன்னா நாலு பேர் காலையாவது உடைக்க வேணாம்?, என் அப்பத்தா உனக்குக் கறிக் கொழம்பா ஆக்கிப் போட்டு என்ன பிரயோஜனம்?”

-அந்தக் கலவரத்திலும் சித்தப்பனிடம் நக்கல் அடித்தவனைக் கண்டு கொதித்துப் போன கார்மேகம் “எலேய் பன்னாடப் பயலே!, தூக்கி வளர்த்த சித்தப்பனை ஒருத்தன் கட்டையால அடிக்க வர்றானே, வந்து காப்பத்துவோம்ன்னு இல்லாம, எலேய் வாடா இங்க,” அலறிய குரலில் கூறியவரிடம் உடனே வந்து எதிரிலிருந்தவனை கீழே தள்ளி அவரைக் காப்பாற்றினான் மாறன்.

மாறனும்,அவனைச் சேர்ந்தவர்களும் ஒருபுறம் கலவரத்தை அடக்குவதில் போராடிக் கொண்டிருக்க, திடீரென எங்கிருந்தோ சோடா பாட்டில்கள் வீசப்பட்டு அடுத்தத் தாக்குதலைத் தொடங்கினர் கலவரக்காரர்கள்.

எங்கிருந்து வீசப் படுகிறதென்பதைக் கண்டு அங்கு செல்லும்படி கரிகாலனை அவன் ஏவிய தருணம், திடீரென ஒருவன் அரிவாள் வெட்டினால் அலறிக் கொண்டுக் கீழே விழுந்தான்.

பாதுகாப்பிற்கு வந்த போலீசார் அமைதி காப்பதையும், விடாது குவிந்த ஆயுதங்களைக் கண்டும் திணறி செய்வதறியாது மாறன் குழம்ப, சுத்துப்பட்டிக் கிராமத்தைச் சேர்ந்த மேல்ஜாதி,கீழ் ஜாதியினர் அனைவரும் ஒவ்வொருவராக வந்திறங்கி, கலவரம் அடுத்தக் கட்டத்தை எட்டிக் கொண்டிருந்தது.

காயம் பட்டும்,உயிரை விட்டும் பலர் விழுந்து கிடப்பதைக் கண்ட போலீசார், திருப்திப்பட்டுக் கொண்டு, கலவரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு கூட்டத்தை லத்தியால் அடித்து விரட்டியும், தண்ணீர்ப் புகையைச் செலுத்தியும் கட்டுப்படுத்த முயல… இந்த நிமிடத்திற்காகவே காத்திருந்தவன் போன்று ஒருவன், அரிவாளுடன் மாறனை நோக்கி ஓடி வந்தான்.

வளர்த்த மகனை நோக்கி அரிவாளுடன் ஒருவன் ஓடி வருவதைக் கண்டு கொண்ட கார்மேகம், நொடியும் தாமதிக்காமல் மாறனைத் தள்ளி விட்டுக் காப்பாற்ற முயன்ற நேரத்தில், ஓடி வந்தவன் கார்மேகத்தின் வலது கையை அவரது உடம்பிலிருந்துத் துண்டித்துக் கீழே வீசியிருந்தான்.

வலி பொறுக்காது கார்மேகம் அலறிய அலறலில் உயிர் சிலிர்க்க விதிர்விதிர்த்துப் போய் “சித்தப்பு………..”என்று கத்திய மாறனின் குரல் அக்கூட்டத்தையே திரும்பிப் பார்க்கச் செய்தது.

ன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு தொடங்கியிருந்ததால், அன்று காலை பரீட்சையை முடித்து விட்டுப் பள்ளியிலிருந்து வெளி வந்தாள் கௌரி.

அவள் வருகைக்காகவேக் காத்திருந்தவன் போன்று வாசலிலேயேக் காத்திருந்த சென்றாயன் அவளருகே வந்து “என் கூட வா” என்றான்.

மாறனிடம் அடி வாங்கி மூக்கு உடைபட்டப் பிறகும் கூட இந்த நாய் அடங்கவில்லையே! என்று நினைத்த கௌரி “எங்க?” என்றாள்.

“ஊர்ப்பக்கம் பூராக் கலவரமா இருக்கு, பஸ்ஸெல்லாம் போகாதாம்!, அதனால என் கூட வா”

“பரவாயில்ல, பஸ் போகாதுன்னா, மேகம் மாமா வந்து என்னைக் கூட்டிப் போவாரு, நான் ஸ்கூலுக்குள்ளேயே போறேன்” – என்றவளிடம் “அட வா-ன்றேன்ல?” என்ற சென்றாயன் உரிமையாக அவளது கையைப் பற்றி இழுத்துக் கொண்டு நடந்தான்.

“ஏய், கைய விட்றா, கைய விட்றியா இல்ல, செவுல்லயே ரெண்டு விடவா?” என்று எகிறியவளிடம் நின்று திரும்பி நோக்கிச் சிரித்தவன் “வண்டில ஏறுடி” எனக் கூறி அம்பாசிடர் கார் ஒன்றில் அவளை உள்ளே தள்ளினான்.

காருக்குள் டிரைவர் சீட்டிலிருந்த சென்றாயன் அருகே அமர்ந்திருந்தத் தந்தையைக் கண்டுத் திகைத்து, ஜன்னலோடு ஒன்றியபடி அமைதியாக அமர்ந்து கொண்டாள் அவள்.

அருகே அமர்ந்திருந்த சுப்பு அவளை ஒரு மாதிரியாக நோக்குவதை உணர்ந்தாலும், கண்டு கொள்ளாமல் வெளியே பார்வையைப் பதித்து அமர்ந்திருந்தாள்.

ஒண்டிவீரனது குல தெய்வக் கோயில் வந்ததும், அனைவரும் இறங்க.. இங்கே எதற்காக அழைத்து வந்திருக்கிறார்கள் என்று யோசித்தபடி குழப்பத்துடன் நின்றவளிடம் ஒரு புடவையைக் கொடுத்து “இதைக் கட்டிட்டு வா” என்றாள் சுப்பு.

புருவம் நெறித்தபடி புடவையை நோக்கியவள் “எதுக்கு?” என்றாள்.

“எல்லாம் காரணமாத் தான் கட்டிட்டு வா, கூட்டிட்டு போ சுமதி” – என்று ஒருத்தியிடம் அவள் கட்டளையிட்டதும், கௌரியின் கையைக் கெட்டியாகப் பற்றிய சுமதி அவளை இழுக்காதக் குறையாக கூட்டிச் சென்றாள்.

சித்தி, ரெண்டாவது கல்யாணம் என்று பிதற்றிய மனிதன் இன்று நிஜமாகவே இந்த சுப்புவைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் போலும்!, ஆனால் தன்னை எதற்காக அழைத்து வந்திருக்கிறார், புடவையெல்லாம் கட்டச் சொல்லி ஏன் கேட்கிறார்கள் என்று யோசித்தவளுக்கு வழக்கம் போலப் பயம் வந்தது.

பேச்சியாத்தா,கார்மேகம்,மாறன் இவர்கள் மூவரில் ஒருவருக்குக் கூடவா ஒண்டிவீரனின் திருமணத்தைப் பற்றித் தெரியாது?, எந்நேரமும் அவள் மேல் ஒரு கண்ணை வைத்துக் கொண்டே சுற்றும் மாறன், எப்படி அவளை இந்தச் சென்றாயன் கை தொட்டுக் கூட்டி வருமளவிற்கு விட்டான் என்று யோசித்தவளுக்கு ஒன்றும் புரி படாமல் போக, ஒண்டிவீரனின் இறுகிய முகம் வேறு கண் முன்னே நின்று உடல் முழுதிலும் பய ஹார்மோன்களை உற்பத்தி செய்து கொண்டிருந்தது.

சற்று நேரத்தில் யாருமற்ற அந்தக் கோவில் சந்நிதியில் ஐவரும் வந்து நின்றனர். என்ன நடக்கிறதென்று புரியாமல் எதிரே நின்று கொண்டிருக்கும் தந்தையின் முகத்தைக் காணப் பயந்து அவள் தலை குனிந்து நின்றிருந்த சமயம், திடீரென அவள் கழுத்தில் மாலையொன்று விழுந்தது.

திடுக்கிட்டு நிமிர்ந்து நோக்கியவள் தன்னருகே நெருங்கி நின்றிருந்த சென்றாயன் கழுத்தில் மாலையையும்,அவனது கோணல் சிரிப்பையும் கண்டுத் திகைத்து சட்டெனத் தந்தையைத் திரும்பிப் பார்த்தாள்.

“எ..என்ன நடக்குது இங்க?” – நடப்பதை மூளையும்,மனதும் ஒரு சேர அறிந்து கொள்ளத் துடிக்க, அடுத்துத் தந்தை கூறப் போகும் வார்த்தைக்காக.. கண்ணீர் கோர்த்திருந்தத் தன் பெரிய விழிகளை அகல விரித்து அவரிடம் வினவினாள் கௌரி.

கைகளைப் பின்னே கட்டிக் கொண்டு எங்கோ நோக்கியவர் “உனக்கும்,சென்றாயனுக்கும் இப்ப கல்யாணம்” என்றார்.

கோர்த்திருந்தக் கண்ணீர் உருண்டோடி கன்னத்தில் வழிய, அவர் கூறிய வார்த்தைகளை மறுபடி எண்ணிப் பார்த்து மூளைக்குள் அவள் பதிய வைக்க முனைந்த நேரம், மாலையை இறுகப் பற்றியிருந்த அவளது மென் விரல்கள் நடுக்கத்தை வெளிப்படுத்தத் துவங்கியிருந்தது.

“எ…எனக்கு.. எனக்கு இஷ்டமில்ல, நான்.. நான் இவனைக் கட்டிக்க மாட்டேன்”

-வகையாகச் சிக்கிக் கொண்ட பின், அடுத்த நொடிப் புலியின் கோரப் பற்கள் தன் கழுத்தில் பதிந்து ரத்தத்தை உறிஞ்சப் போகிறதென்று தெரிந்தும், தப்பிக்க நினைக்கும் புள்ளி மானாக, மாலையைக் கழட்டி வீசியெறிந்துத் தன் மறுப்பினைக் காண்பித்தாள் கௌரி.

கூடாது! உயிரே போனாலும் இதற்கு ஒப்புக் கொள்ளக் கூடாது! பெற்ற தந்தை! கல்லைப் போல நிற்கின்றான்! ரத்த பாசத்தையெல்லாம் இந்த ஐந்தறிவு ஜந்துவிடம் அவள் எதிர்பார்க்க முடியாது! அவன் மனிதனே அல்ல!, சாக்கடையில் எலும்புத் துண்டு மிதந்தால், ஓடிச் சென்று பொறுக்கித் தின்னும் தெரு நாயை விடக் கேவலமானவன்! அருவெறுப்பின் உச்சகட்டம்! இவன் செத்து மண்ணில் புதைந்தால் கூட, அவனது உடம்பைத் தின்ன ஒரு புழு கூட முன் வராது!, அந்த அளவிற்கு உடல் முழுதும் கெட்ட எண்ணங்களைக் கொண்ட அர்ப்ப ஜீவன்! அயோக்கியன்!

கோபம்,ஆத்திரம்,ரௌத்திரமென அத்தனை உணர்வுகளையும் கண்ணில் தேக்கி அவள் பார்த்த பார்வையில் ஒண்டிவீரனின் முகம் இறுகி, பார்வையை வேறு புறம் திருப்பிக் கொள்ளச் செய்தது.

அவரிடமிருந்து பதில் வராது போனதும் தொண்டையைக் கனைத்த சுப்பு, “சுமதி மாலைய எடுத்து அவ கழுத்துல போட்டு விடு” என்றாள்.

“கிட்ட வந்தேனா, கொரவளையக் கடிச்சுத் துப்பிருவேன்” –ஆங்காரத்துடன் சுமதி என்பவளை நோக்கிக் கத்தியவள் சுப்புவிடம் திரும்பி..

“உன்ன மாறி ஊருக்கு ஒருத்தனோட வப்பாட்டியா வாழ்றதுக்காகவே, சோத்தைக் கொறச்சு உடம்ப சிக்குன்னு வச்சுக்கிற ஆளுன்னு நினைச்சியா என்னைய?, நான் ஒரு அறை விட்டா, உன் 10 பல்லும் கீழ விழுந்துரும், என் பக்கத்துல எவளாவது வந்தீங்க, உசுரோடப் போ மாட்டீங்க” – முழுக்குரலில் ஆத்திரம் மிக, வெறுப்போடு அவள் கூப்பாடு போட்டதற்கு நால்வரிடமிருந்தும் ஒரு பதிலுமில்லை.

கீழே கிடந்த மாலையை எடுத்துக் கொண்டு வந்து அவள் கழுத்தில் போட முயன்ற சுமதியைத் தள்ளி விட்டு நகத்தால் கீறி, கழுத்தை நெறித்து அவள் செய்த முயற்சிகள் அத்தனையையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சென்றாயன் கடுப்பாகி “மாலையே போட வேணாம், அக்கா,சுமதி ரெண்டு பேரும் அவ ரெண்டு கையையையும் புடிங்க, நான் தாலியக் கட்டுறேன்” என்றான்.

எதிரே தெரிந்த கோபுரக் கலசத்தை வெறித்துக் கொண்டிருந்த ஒண்டிவீரனிடமிருந்து எவ்வித வார்த்தையுமில்லை. வடித்து வைத்த சிலை போல உணர்வற்று நின்றிருந்தார்.

தம்பி கூறியதை செயல்படுத்தத் தொடங்கிய சுப்புவிற்கும்,சுமதிக்கும் கௌரியிடமிருந்து மேலும் சில,பல அடிகள் கிடைக்க, “டேய் சென்றாயா, சீக்கிரம் கட்டுடா” என்று விரட்டினர்.

“பக்கத்துல, பக்கத்துல வந்தேனா… உன்னைய வெட்டிப் பொலி போட்ருவேன், என் மாமன் கிட்ட வாங்குனதெல்லாம் மறந்து போச்சா, நீ பண்ணிக்கிட்டிருக்கிற விசயம் மட்டும் அவன் காதை எட்டுச்சு, உன் உடம்புல கையே இருக்காது தெரிஞ்சுக்க”

-அதுவரை ஈஈஈ என்ற வாயுடனே நின்றிருந்த சென்றாயனுக்கு, மாறனின் பெயரைக் கேட்டதும் கோபம் தலைக்கேற “என்னடி ரொம்பப் பேசுற?” எனக் கேட்டு அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான்.

அவன் அறைந்ததும் வெடுக்கெனத் திரும்பி நோக்கிய ஒண்டிவீரனிடம் “மன்னிச்சுடுங்க மாமா, அந்தப் பய மாறனைப் பத்திப் பேசுனதும் எனக்குக் கோவம் வந்திருச்சு!, இந்தக் கழுத அவனை மனசுல நினைச்சுக்கிட்டுத் தான் என்னையக் கட்டிக்க மாட்டேங்குது!, நான் வேணா தாலி கட்டாம, இந்தப் புள்ளைய வீட்டுக்கு அனுப்பிடட்டுமா?, ஆனா நாள பின்னாடி, ஒண்டிவீரன் கை காட்டுன மாப்பிள்ளைய உதறித் தள்ளிட்டு கௌரி வந்துட்டான்னு ஊர் பேசுச்சுன்னா அது உங்களுக்குத் தான் அவமானம்” என்றான் சென்றாயன்.

கையை இறுக மடித்துக் கொண்டு அவர் மீண்டும் கலசத்தை வெறிக்க “அப்ப நான் தாலியைக் கட்டுறேன் மாமா” என்றவன் கௌரியை நெருங்கினான்.

தன் இரண்டு கைகளையும் கெட்டியாகப் பற்றியிருந்த இரண்டு பிடாரிகளிடமிருந்து விடுபட விடாது போராடிக் கொண்டிருந்தவள், காலைத் தூக்கிக் குதித்து எதிரே வந்தவனை மிதித்தும் கூட நகராதவன் கடைசியில் அவளது கழுத்தில் தாலியைக் கட்டியிருந்தான்.

ஒரு ஆண் பரத்தைக்குப் பெண்ணாகப் பிறந்ததற்கு, நான்கு பேரை அடித்து நொறுக்கி விட்டுத் தப்பித்து ஓட உடல்வலிமையைக் கொடுக்காத கடவுளைச் சபித்து, நடந்து முடிந்த சம்பவத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல், தனது கையாலாகதத் தனத்தை எண்ணிக் கண்ணீர் பொலபொலவெனக் கொட்ட, தனக்குத் தைரியத்தைச் சொல்லிச் சொல்லி வளர்த்த மாறனை நினைத்து, அவன் வருகைக்காக ஏங்கி மனம் வெந்து துடிக்க, விழிகளில் சீற்றத்துடன் நிமிர்ந்து சென்றாயனை நோக்கியவள் அவன் முகத்தில் காறித் துப்பினாள்.

இதெல்லாம் எனக்குச் சாதாரணம் என்பது போல் துடைத்து எறிந்தவனைக் கண்டு வெறி எழ.. அவன் தலையைப் பற்றியிழுத்து அருகிலிருந்த சுவற்றில் ஓங்கி அடித்திருந்தாள் கௌரி.

அவளிடமிருந்து இதை எதிர்பார்க்காததால், அந்தத் திடீர் தாக்குதலில் தப்பிக்க முடியாது போன சென்றாயனின் நெற்றி பிளந்து பொலபொலவென ரத்தம் கொட்ட, ஆத்திரம் மிகுதியில் அவன் தன் ஒட்டு மொத்த பலத்தையும் கூட்டி அவளை மறுபடி ஓங்கி அறைந்தான்.

காதிலிருந்து ரத்தம் வடிய, கண்ணீர்க் கறையுடன் கீழே விழுந்த கௌரி, இனி கண்ணைத் திறக்க முடியாமலே போனாலும் கூடப் பரவாயில்லை என்கிற மனநிலையுடன் மயக்கத்திற்குச் சென்றிருந்தாள்.

லவர பூமி மொத்தமாகப் போலீசாரின் கட்டுப்பாட்டில் வந்திருக்க, உயிரிழந்தோரும்,காயம் பட்டவர்களும் டவுனிலிருந்த அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

சிறுசிறு காயங்களுடன் சண்டையில் மும்முரமாக ஈடுபட்டிருந்த அத்தனை பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட, கூட்டத்தைத் தலைமை தாங்கிய மாறனிடம் தனியாக விசாரணை நடந்து கொண்டிருந்தது.

செங்குளம்,மற்றும் அதன் சுற்றுப்பட்டிக் கிராமங்கள் அத்தனைக்கும் செய்தி எட்டியிருக்க, கார்மேகத்தின் நிலையைக் கேள்விப்பட்டு அடித்துப்பிடித்துக் கொண்டுப் புலம்பியபடி ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தார் பேச்சியாத்தா.

“எம் மவன் கைய வெட்டிப் போட்டானுங்களா?, அய்யா டாக்டரய்யா, எம் மவனை என் கண்ணுல காட்டுங்கய்யா!, பெத்த ரெண்டுல ஒன்னு அல்பாயுசுல போயிடுச்சு, இன்னொன்னு வாழ்க்கைல எந்த சுகத்தையும் காணாம ஒண்டியா வாழுதேன்னு நான் கலங்காத நாளில்ல, அய்யோ எம்பெருமானே!, சிவ பெருமானே!, தெனம் விளக்குப் போட்டு உன்னைய நான் வேண்டிக்கிறதெல்லாம் இந்த நிலைக்குத் தானா?, அய்யோ அய்யோ..” – பேச்சியாத்தா நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறி அழ.. அந்த அரசு ஆஸ்பத்திரி முழுதுமே மயானமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது.

போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக்கு அமர்ந்திருந்த நன்மாறனிடம் டப்பாவிலிருந்த பஞ்சை நீட்டினார் அதிகாரி.

“வாய்ல வழியுற ரத்தத்தைத் தொட”

ரௌத்திரத்தின் உச்சக்கட்டத்தில் கண்கள் சிவக்க, இறுகிப் போய் அமர்ந்திருந்தவன் முன்னேயிருந்தப் பஞ்சை எடுத்து இதழ் ஓரத்தைத் துடைத்து “உடம்புல வழியிற ரத்தத்துக்குப் பஞ்சைக் குடுத்துட்டீங்க, மனசு வடிக்கிற ரத்தத்தை எதைக் கொண்டு நான் துடைக்கிறது?” என்றான்.

“அடேங்கப்பா!, சினிமா வசனமெல்லாம் நல்லா பேசுறியேப்பா”

“………………..”

“நான் எச்சரிச்சப்பவே நீ ஒதுங்கிருக்கனும் மாறா!, ஒண்டிவீரன், அந்த ஃபேக்டரி ஓனர் இவனுங்கெல்லாம் எவ்ளோ பெரிய ஆளுங்கன்னு தெரியாம மோதக் கிளம்பிட்ட?, ஒரு தடவ ஒண்டிவீரனை உள்ள தள்ளுனா, நீ பெரியாள் ஆயிருவியா?, நாலையும் யோசிச்சுப் பார்க்க வேணாம், இன்னிக்கு எத்தனை உசுரு உன்னால பலி ஆயிடுச்சுப் பார்த்தியா?”

“என்னால?” – விழியை நிமிர்த்தி நக்கலுடன் வினவினான் மாறன்.

“ம்க்க்க்க்க்க்கும், ஊர் அப்டித் தான் பேசும்! இல்ல, நாங்க பேச வைப்போம்! பேப்பரு, டிவி நியூஸ்ன்னு அத்தனைலயும் கலவரத்தைத் தூண்டுன வில்லனாத் தான் உன்னையக் காட்டுவாய்ங்க. என்ன பண்ணப் போற?”

“அநியாயம் பண்ணுற உங்களை மாறி ஆளுங்களுக்கே நினைச்சது நடக்குறதுக்குக் கடவுள் வழி விடும் போது, நல்லது நினைக்கிற எங்களுக்கு வழி கிடைக்காதா என்ன?”

“மறுபடி மறுபடி நீ வெத்து வசனம் பேசிட்டிருக்கிற மாறா”

“விட மாட்டேன் சார், விட மாட்டேன்!, மாறனை சீண்டி விட்டா என்ன நடக்கும்ன்னு உங்க எல்லாருக்கும் காட்டுற வரைக்கும் இதை விட மாட்டேன்”

“ப்ச், அதுவரைக்கும் உன்னை வெளிய விட்டாத் தான?, யோவ் ஏட்டு, இவனைப் போய் 7-நம்பர் செல்-ல தள்ளு” என்றவர் அத்தோடு முடித்துக் கொண்டு எழுந்து சென்று விட்டார்.

கார்மேகத்திற்கு நினைவு திரும்ப மறுநாளாகி விடும் என மருத்துவர் கூறி விட்டதால் அழுது புலம்பியபடி ஆஸ்பத்திரியில் அமர்ந்திருந்த பேச்சிக்குப் பேத்தியைப் பற்றிய நினைவே இல்லை.

திடீரென அலையக் குலைய ஆஸ்பத்திரிக்கு வந்த முத்தரசி “அடியேய் பேச்சி, நாம மோசம் போயிட்டோம்டி, மோசம் போயிட்டோம், உம் மருமவன் சண்டாளப் பாவி, கௌரி புள்ளைய அந்தச் சிறுக்கிக் கூடப் பொறந்தவன் எவனுக்கோக் கட்டி வைச்சு, கல்யாணத்தை முடிச்சு வீட்டுக்குக் கூட்டி வந்திருக்கான்டி” என்று முழுக்குரலில் கத்த… “என்னடி சொல்ற??” என்று பதறிய பேச்சி அடித்துப் பிடித்துக் கொண்டு வீட்டுக்கு ஓடினாள்.

பெரிய வீட்டில், அவள் அறையில்.. கட்டிலில் கிடத்தப்பட்டிருந்த கௌரி இன்னமும் மயக்க நிலையிலேயே இருக்க.. அழுகையுடன் ஓடி வந்து அவளை உலுக்கிய பேச்சி “ஆத்தா… கௌரி…. கௌரி… என்னப் பெத்தவளே, கண்ணைத் தொறந்து ஆத்தாவைப் பாருடி, என்னடி ஆச்சு?, அந்த ****பய உன்னைய என்னடி செஞ்சான்?, எந்தக் காட்டு ஓநாயி அவன்னு சொல்றி, அவன் சங்க அறுத்து எறிஞ்சுட்றேன்!, கௌரி.. கௌரி…” எனப் புலம்ப… பேச்சியாத்தாவின் உலுக்கலில் கண் விழித்த கௌரி.. ஒரு நிமிடம் தான் இருக்குமிடம் உணர்ந்து.. ஆத்தாவின் அழுகைக்கான காரணத்தைப் புரிந்து கொண்டு.. அணிந்திருந்த சேலையையும்,கழுத்தில் தொங்கிய தாலியையும் குனிந்து பார்த்து… கண்களில் வழியும் கண்ணீருடன் அவரை நிமிர்ந்து நோக்கினாள்.

“அய்யோ,அய்யோ,அய்யோ!, எம் புள்ளைய நாசம் பண்ணிட்டானே கிராதகன்!, பெத்த மகளை இந்தச் சண்டாளனாலத் தூக்கிக் கொடுத்தது போதாதுன்னு, இத்தனை நாளா நான் பொத்திப் பொத்தி வளர்த்த என் தங்கத்தையும் அள்ளிக் கொடுத்துட்டேனே!, இறைவா…. எனக்கு ஏன் இந்தப் பிறவி, நான் பெத்ததும், நான் வளர்த்ததும் ஒவ்வொன்னா வாழ்க்கைய இழக்குறதைப் பார்க்கத் தான் நான் பிறப்பெடுத்தேனா?, அடுத்தடுத்து எத்தனைய தாங்குறது, கௌரி…. என் ஆத்தா.. என்னைப் பெத்தவளே….” என்று அவளைக் கட்டிக் கொண்டு கிழவி அழ…

கிழவி புலம்பத் தொடங்கியதிலிருந்து அவரிடம் நடந்ததைக் கூற முயற்சித்துக் கொண்டிருந்த கௌரிக்குத் தொண்டையிலிருந்து ஒரு வார்த்தைக் கூட வெளி வரவில்லை.

அவளிடமிருந்து வினோதமான ஒலி கிளம்புவதைக் கண்டு குனிந்து அவள் முகத்தை நிமிர்த்திய பேச்சி, வாயைத் திறந்து மேல் மூச்சு,கீழ் மூச்சு வாங்க, கண்கள் மேல் நோக்கி செருக.. அவரது கையிலிருந்து மெல்ல நழுவிக் கொண்டிருந்தவளைக் கண்டு “பொன்னம்ம்ம்ம்ம்ம்ம்” என்றுக் கத்தினார்.

திருமணம் முடிந்து கௌரியை வீட்டில் கொண்டு வந்து போட்ட பிறகு மாமனும், மருமகனும் ஊர் எல்லையிலிருக்கும் சாராயக் கடையில் ஒதுங்கி விட்டனர்.

கார்மேகம் மற்றும் மாறனின் நிலையைப் பற்றி அறிந்து விட்டதனால், வீட்டில் பேச்சியாத்தா கத்தப் போகும் வார்த்தைகளைக் கேட்க வேண்டாமென்றெண்ணி இங்கு வந்திருந்தனர்.

சாராயம் உள்ளே இறங்க இறங்க ஒண்டிவீரனுக்கு, விழி பிதுங்கிய நிலையில் தூக்கில் தொங்கியிருந்த மனைவியின் முகமும், இன்று கோவிலில் தன்னை நோக்கிய கௌரியின் முகமும் மாறி மாறி வந்து அவரது உயிரை உலுக்கிக் கொண்டிருந்தது.

ஆனால் ஒண்டிவீரனுக்கு மாறாக சென்றாயனின் மனது நினைத்ததைச் சாதித்து விட்டத் திருப்தியில்,மாறனை வென்று விட்டக் கொண்டாட்டத்தில் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தது. அந்த போதையில் அவன், சுப்புவுடனான தன் திட்டம் முழுதையும் ஒண்டிவீரனிடம் முழுவதுமாக உளறிக் கொண்டிருந்தான்.

“நான் இன்னைக்கு ரொம்பச் சந்தோசமா இருக்கேன் மாமா, அந்த மாறன் பயலுக்கே ஆப்படிச்சுட்டேன்ல?”எனத் துவங்கியவன் மாறன் அடித்ததிலிருந்துத் தொடங்கி தன் தமக்கைக்கும் தனக்கும் நடந்த அத்தனை உரையாடலையும் கூற, போதை இறங்கிப் போய் அவனை வெறித்து நோக்கினார் ஒண்டிவீரன்.

“என் சொத்தைச் சுருட்டிக்கிட்டு, என்னைத் தெருவுல தள்ள அக்காவும்,தம்பியும் திட்டம் போட்டீங்களாடா?” என்று அவர் சட்டையைப் பிடிக்கையில் சென்றாயனும் சற்றுத் தெளிந்திருந்தான்.

“ஆமாய்யா! என்னா செய்வ?, இப்போ உன் மக, உன் ஒட்டு மொத்த சொத்துக்கும் சொந்தக்காரி என் பொண்டாட்டியாய்ட்டா!, நீயே சோத்துக்கு என்ட்டத் தான் நிக்கனும்! நீ என் சட்டையைப் பிடிக்கிறியா?” என பதிலுக்குக் கத்த.. கொதித்துப் போன ஒண்டிவீரன் அவனை அடிக்கத் துவங்க.. அந்த நெடுஞ்சாலையில் உருண்டு பிரண்ட இருவரும் சற்றும் எதிர்பாரா விதமாக.. கட்டுப்பாடின்றி முழு வேகத்துடன் எதிரே வந்த லாரியொன்று இருவர் மீதும் அதிவேகத்துடன் மோதியது.

தலை நிமிர்ந்து கம்பீரமாக இத்தனை வருடம் செங்குளத்தில் வலம் வந்த ஒண்டிவீரனின் தலை துண்டாக வெட்டப்பட்டு அவர் ஒருபுறம் தூக்கியெறியப்பட, உடல் மொத்தமாக நசுங்கிப் போய் வெறும் ரத்தப் பிண்டமாகச் சாலையில் கிடந்தான் சென்றாயன்.

அடுத்த சில மணி நேரங்களில் இவர்களிருவரும் இறந்து விட்ட செய்தி ஊரை எட்ட “அய்யோ அய்யோவெனப் பதறிக் கொண்டு ஓடி வந்தாள் சுப்பு.

அடுத்தடுத்து நடந்த சம்பவங்களின் தொகுப்பால் திக்குமுக்காடிப் போன கிராம மக்கள், ஒண்டிவீரனின் சாவை நினைத்து வருந்துவதா,மகிழ்வதா என்று புரியாத நிலையில் அந்த இரவைக் கடத்திக் கொண்டிருந்தனர்.

பெரிய வீட்டின் வாசல் படியைக் கூட எட்ட முடிந்திராத நிலையிலிருந்த அவர்களது உடல் ஆஸ்பத்திரியிலிருந்து அந்த இரவிலேயேத் தகனம் செய்யப்பட்டது.

இருந்த ஆத்திரத்தில் பேச்சியாத்தா “நான் கும்பிட்ற சாமி தான்டா உனக்கு இந்தக் கதில சாவைக் கொடுத்திருக்கான்! சண்டாளப் பயலே! போய்ச் சேர்ற நேரத்துல கூட எம் புள்ளைய இந்தக் கதிக்கு ஆளாக்கிட்டுப் போய்ட்டியே!” என்று தலையில் அடித்துக் கொண்டு அழ.. மயக்கமும்,விழிப்புமாக இருந்த கௌரியிடம் விசயம் கூறப்பட்டு அடுத்தடுத்த சடங்குகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

“என்ன இருந்தாலும் சாமி சந்நிதில வைச்சுல்ல தாலி கட்டிருக்கியான்?, முறையா சடங்கு பண்ணித் தேன் தாலி அறுக்கனும்” என்ற முத்தரசியிடம் பதிலே பேசவில்லை பேச்சியாத்தா.

பேத்தியை இறுகக் கட்டிக் கொண்டு அவளுடனே அமர்ந்து விட்டவரைக் கண்டுப் பெருமூச்சு விட்டு முத்தரசி அடுத்தடுத்தச் சடங்குகளைச் செய்தார்.

விடிந்த பொழுது என்ன அதிர்ச்சியைக் கொடுக்கக் காத்திருக்கிறதோ என்ற பதைபதைப்பில் அனைவரும் அந்நாளை எதிர்கொள்ள, நினைவு திரும்பிய கார்மேகம் விசயத்தைக் கேள்விப்பட்டுக் கொதித்துப் போனார்.

இரண்டில் ஒரு கையை இழந்ததும், தனக்கு எப்போதும் மூன்றாம் கையாயிருக்கும் மாறனின் இருப்பு இல்லாமல் போனதும், தான் வாழ்வதே மருமகளுக்காகத் தான் என்று கூறித் திரிந்தவர், அந்த மருமகளின் வாழ்வே நாசமாகிப் போனதையும் உணர்ந்து, உயிரற்ற நிலைக்குச் சென்று கொண்டிருந்தார்.

அடுத்த ஒரு வாரம் முழுதும் இப்படியே கழிய.. ஜெயிலிலிருந்த மாறனுக்கு ஒண்டிவீரனின் இறப்பைத் தவிர எதுவுமே கூறப்படவில்லை.

கார்மேகம் எழுந்து வந்து.. பொட்டு,பூவற்று கூடவே பேச்சற்று.. மூலியாக நிற்கும் மருமகளின் நிலை கண்டு, மாறனை வெளியே எடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டு, ஒரு கையை இழந்துவிட்ட விசயத்தையே மறந்து, விடாது செயல்பட்டு, அவனை ஜாமீனில் கொண்டு வந்தார்.

ஜெயிலில் குடித்தக் கஞ்சியில் உதடு வெளுத்துப் போயிருக்க, அடர்ந்து படர்ந்திருந்த தாடியுடனும்,சிவந்த கண்களுடனும் வெளி வந்தவனிடம் அத்தனையையும் ஒப்பித்தார் கார்மேகம்.

“எம் மருமவளைக் கண் கொண்டு காண முடியலடா மாறா… ஒரு வார்த்தைப் பேசலடா அவ, உண்ணாம,உறங்காம உயிரில்லாமப் போய்க்கிடக்கா! என் நெஞ்சே பதறுதுடா!, நீ வாடா, நீ வந்தாத் தான் டா அவளைக் காப்பத்த முடியும்” – என்று கதறினார்.

ஒற்றைக் கையுடன் கண் முன்னே நிற்கும் சித்தப்பனின் நிலையைக் கண்டு கலங்கியபடி வெளியே வந்த மாறனுக்கு.. ஒண்டிவீரனின் இறப்பைப் பற்றியறியும் ஆவல் இருந்தது உண்மை தான்!

ஆனால்.. ஆனால் அவன் முற்றிலும் எதிர்பாராத விதமாக கௌரியைப் பற்றி அவர் சொன்ன செய்தி, அவனை மொத்தமாய் அடித்து வீழ்த்தியிருந்தது.

உள்ளேயிருந்த ஒரு வாரமும் அவன் மனதிலிருந்து ஒரே எண்ணம் மட்டும் தான்! தான் நினைத்தைதைச் சாதிக்க அத்தனை அப்பாவி உயிர்களைப் பலி கொடுத்த ஒண்டிவீரனுக்குச் சரியான தண்டனையைக் கடவுள் கொடுத்து விட்டார் என்றெண்ணியவன், அந்த ஈனப்பிறவியை அத்தோடு ஒதுக்கி வைத்து விட்டு, ஊர் மக்களின் அமைதியை எப்படி மீட்டெடுப்பது, நடந்து கொண்டிருக்கும் பிரச்சனைகள் அத்தனைக்கும் எந்த வகையில் முற்று புள்ளி வைப்பதென்பதைப் பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டிருந்தான்.

ஆனால்.. பெரும் அதிர்ச்சியாக கார்மேகம் கூறிய செய்தியைக் கேட்டவனுக்கு நெஞ்சு உலர.. தொண்டையை அடைத்துக் கொண்டு வார்த்தை வர மறுத்தது. போய்ச் சேர்ந்த பின்னும் கூட தலைவலியைக் கொடுக்கும் ஒண்டிவீரன் மீது ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது.

அவனைப் பொறுத்தவரை அந்தத் திருமணமோ, அதைத் திருமணம் என்று கூட சொல்ல விருப்பமில்லை அவனுக்கு!, அன்றைய சம்பவமோ, அதைத் தொடர்ந்து செத்து மடிந்த இரண்டு பிணங்களோப் பெரிய விசயமில்லை!

ஆனால் அந்தச் சம்பவம் கௌரியிடம் விட்டுச் சென்றத் தாக்கம்! இயல்பிலேயே பயம் நிறைந்த குணம் கொண்டவள் அவள்!, பயத்தைப் போக்கித் தைரியத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டிய அப்பன் காரனே, அவளைக் கை விட்டப் பின் அவளால் எப்படி தைரிய சுபாவத்தை வளர்த்துக் கொள்ள முடியும்?,

பேச்சற்றுப் போகும் நிலைக்குச் சென்றிருக்கிறாள் என்றால், எத்தனை பயந்திருப்பாள்?, அவனை எத்தனைத் தேடியிருப்பாள்!, அவளைத் தீண்டிச் செல்லும் காற்றில் கூடக் கல்மிஷமிருந்தால் விரட்டிச் சென்று நொறுக்கியள்ளும் அவனால், இத்தனை பெரிய நிகழ்விலிருந்து அவளைக் காப்பாற்ற முடியாமல் போனதே! ஊர்ப்பிரச்சனையைத் தீர்க்கும் மீசை வைத்த ஆண் மகனாக இத்தனை வருடமாக வலம் வந்து என்னப் பிரயோஜனம்?, ஆசைக் காதலியை, மனதால் மனைவியென முடிவு செய்தவளை இத்தனை பெரிய இக்கட்டிலிருந்து மீட்க முடியாமல் போனதே! கௌரி… கௌரியென மனம் அடித்துக் கொள்ள.. கார்மேகத்தை எதிர்பார்க்காமல்.. விறுவிறுவென பெரிய வீட்டை நோக்கி ஓடினான் அவன்.

பேச்சியாத்தாவின் குடிசை வாசலில் மூச்சு வாங்க நின்றவனை நோக்கிய ஆத்தா… “மாறா… மாறா… என் ராசா…. எம் பேத்தி நிலைமையைப் பார்த்தியாய்யா?” என்றுக் கண்ணீர் விட்டபடி கிழவி உள்ளே கைக்காட்ட… மாறன் என்ற பெயரை பேச்சி உச்சரித்ததும் உள்ளே விலுக்கென எழுந்த அமர்ந்த கௌரி.. வாசலை நோக்கித் திரும்பிய சமயம்.. வீட்டுக்குள் நுழைந்திருந்தான் மாறன்.

அதுநாள் வரை ஒரு சொட்டுக் கூட வெளி வந்திராதக் கண்ணீர் அவனைக் கண்டதும் அவளது அனுமதியின்றியேக் கண்ணில் திரண்டு கன்னத்தில் வழிய.. “மா………. மா…..” என்றாள்.

உயிர் வரைத் தீண்டிச் சென்ற அந்தக் குரலின் தாக்கம் மாறனின் நெஞ்சைப் பிசையச் செய்துக் கண்ணீரை உற்பத்தி செய்ய… “கௌரி………” என்றபடி முன்னே வந்தவனைக் கண்டு ஒரு அடி பின்னே சென்று அவனைத் தலை முதல் கால் வரை சின்னச் சிரிப்புடன் நோக்கியவள்.. ‘இது தான் நான் உன்னைப் பார்க்கும் கடைசி நிமிடம்” என்று நினைத்தாலோ என்னவோ.. அடுத்த நொடி விறுவிறுவென ஓடி.. வீட்டின் பின்னேயிருந்தக் கிணற்றில் குதித்திருந்தாள்.

நிமிடத்தில் தன் கண் முன்னே நடந்து முடிந்த சம்பவத்தைக் கண்டு கலங்கிப் போன மாறன் நொடியும் தாமதிக்காமல் “கௌரிரிரிரிரிரிரிரிரிரி” என்றபடி அவள் பின்னே குதித்திருந்தான்.

ரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த கௌரியை அன்று காலை சந்திக்க வந்திருந்தான் மாறன். நிச்சலனமற்று அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் தலை குனிந்தபடி படுக்கையில் அமர்ந்திருந்த கௌரியை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஊர்ப்பிரச்சனை என்கிற விசயம் மனதில் பின்னே சென்றிருக்க.. தன் கண் முன்னே தெரியும் காதலியை மட்டுமே மனம்,உடல் என அத்தனையிலும் நிரப்பிக் கொண்டிருந்தான் அவன். இனி ஒரு நொடி கூட உன்னை விட்டுப் பிரிய மாட்டேன் என்பது போல்!

நீண்ட மௌனத்திற்குப் பிறகு…. “கௌரி….” என்றழைத்தான்.

அவனது குரலுக்காகவேக் காத்திருந்தாள் போலும்! அவன் அழைத்ததும் சட்டெனப் பதில் கூறினாள்.

“நீ போயிடு மாமா.. என்ன விட்டுப் போயிடு”

மிகத் தெளிவாக,மெல்லிய குரலில் அவள் உச்சரித்த வார்த்தைகளைக் கேட்டவன், புருவத்தைச் சுருக்கிக் குழம்பிய முகத்துடன் அவளை நோக்கினான்.

“புரியல”

“நீ என் கண் முன்னாடி இனி வர வேண்டாம் மாமா!, போதும் எல்லாம்”

“என்ன போதும்?, கௌரி.. என் மேலக் கோபமா?, நீ என்னைத் தேடுன நேரத்துல.. நான் உன் பக்கத்துல இல்லாம போய்ட்டேனேன்னு?”

“விதிப்படி எல்லாம் நடந்துருக்கு. யாரைக் குற்றம் சொல்லி என்னாகப் போகுது?”

“அப்டி சொல்லாதடி, உன் சின்னச் சின்னப் பிரச்சனைகளைக் கூடக் கூர்ந்து கவனிச்சு உன் பின்னாடியே திரிஞ்சு விடை சொல்ற நான், இவ்ளோ பெரிய சம்பவம் நடக்குற நேரத்துல உன் கூட இருக்க முடியாம போனதை நினைச்சு நினைச்சு இப்ப வரை மருகிட்டிருக்கேன். ஆம்பளைன்னு பெருசா நெஞ்சை நிமித்திக்கிட்டு நடந்து என்னடி பிரயோஜனம்?, உன்னை இப்டி ஒரு நிலைமைக்குத் தள்ளிட்டுக் குத்துக்கல்லாட்டம் உட்கார்ந்திருக்கேனே!” – மிதமிஞ்சிய வேதனையில் உள்ளம் தள்ளாட, அவள் முகம் பார்க்கும் தைரியமற்று அடிக்குரலில் புலம்பியவனை உணர்ந்து.. கௌரியின் கண்களிலிருந்துக் கண்ணீர் வடிந்தது.

திருமணம் என்ற பெயரில் அன்று நடந்த சம்பவமோ,அந்த இரவே லாரி அடித்துச் செத்துப் போன அந்தச் சண்டாளனோ அவளுக்குப் பெரிய வருத்தத்தை கொடுக்கவில்லை. அன்று அவளது எதிர்பார்ப்பெல்லாம் எப்போது மாறனைக் காண்போம் என்பது மட்டும் தான்! காதலனாக அல்ல! துணைவனாக! நண்பனாக!

அவள் பிறந்ததிலிருந்து எப்போதும்,எல்லா விசயத்திற்கும் தைரியம் சொல்லித் தேற்றுபவன் அவனொருவன் மட்டும் தான்! அவனைக் கண்டு விட்டால் போதும்! இனி அனைத்தும் சரியாகி விடும் என்ற நோக்கத்துடன் அவனுக்காகக் காத்திருந்தாள்.

ஆனால் சம்பவ தினத்தன்று, சடங்கு முடிந்ததும் முத்தரசி கூறியதைக் கேட்டவளுக்கு, அதன் பின் மாமனின் முகத்தைப் பார்த்து விட்ட மறுநொடி உயிரை விட்டு விட வேண்டுமென்கிற எண்ணம் மட்டுமே வலுவாக மனதில் பதிந்தது.

தாலியறுக்கும் சடங்கு முடிந்ததும், ‘உன்னைப் புடிச்ச சனி இத்தோட ஒழிஞ்சதுன்னு நினை, உன் மாமன் வந்துட்டான்னா, எந்தக் கவலையையும் உன்ட்ட அண்ட விட மாட்டான்டி ஆத்தா! என்று பேச்சி அழுத படி கூற.. இறுகிய முகத்துடன் அமைதியாக அவர் கூறியதைக் கேட்ட முத்தரசி… பெரிய வீட்டில் கூடியிருந்தக் கூட்டம் ஓய்ந்ததும் மெல்ல பேச்சியிடம் பேச்செடுத்தார்.

“இந்தா பேச்சி, இனியும் அந்தப் புள்ளக்கிட்ட மாறனைப் பத்திப் பேசி ஆசைய வளர்த்து விடாத! காலை தாலி கட்டி ராவு செத்துப்போனாலும், நடந்த கல்யாணம் நடந்தது தான்! எம் பேரன் மாறி ஆளுக்கு, துளி கறை கூடப் படியாத பொண்ணு தான் ஒத்து வருவா!,”

-முத்தரசி கூறியதைக் கேட்டப் பேச்சிக்குக் கொதித்துக் கொண்டு வர.. கூந்தலை அள்ளி முடிந்து கொண்டு வாங்கு வாங்கென்று வாங்கி விட்டார். தானும் பதிலுக்குக் கோபப்பட்ட அரசி, கோபத்தில் வார்த்தைகளைச் சிதற விட்டார்.

“காலைல இவ கழுத்துல தாலி கட்டுன உடனேயே ராத்திரி செத்துப் போயிட்டானே அவ புருசன், இவல்லாம் எந்த நேரத்துல பொறந்தாலோ! ராசியில்லாதவ!, பெத்தவளைக் காவு வாங்குனது போதாதுன்னு, இப்ப கட்டுனவனையும் தூக்கிக் கொடுத்துட்டா! இதுல எம் பேரனை வேற இவ கைல கொடுக்கனுமா?, நான் உசுரோட இருக்குற வரைக்கும் அது நடக்காதுடி” – என்று கத்தி விட்டுச் சென்றார்.

அத்தோடும் அவர் நிற்காமல் ஊரார் அனைவரிடமும் அவள் ராசியில்லாதவள் என்ற பாட்டையே பாட, அந்த ஒரு வாரம் முழுதும் அவளைக் காண வந்து சென்ற அனைவரின் பார்வையும் கூட அவள் ராசியில்லாதவள் என்பது போன்றே படிந்தது.

ஏற்கனவே குன்றிப் போன மனநிலையிலிருந்தவள் இது அத்தனையையும் கண்டு இனி உயிர் வாழ்வதே வீண் என்கிற நிலைக்குச் சென்றிருந்தாள்.

அவன் முகத்தைக் கண்ட மறு நொடி, இந்த உலகத்தில் இருக்கக் கூடாது என்று தீர்மானித்து வைத்திருந்ததால் தான் அவனைக் கண்டதும் கிணற்றுக்குள் குதித்தாள்.

ஆனால் விதி மறுபடி சதி செய்து அவள் மீண்டும் உயிர் பெற்று எழுந்திருந்ததால், இனி மாறனை விட்டு எத்தனை தூரம் சென்று விட முடியுமோ, அவன் முகம் பாரா, மூச்சுப் படா தூரம் சென்று விட வேண்டுமென முடிவு செய்தாள்.

கண்ணீருடன் அமைதியாக அமர்ந்திருந்தவளின் கையைப் பற்ற அவன் முயற்சிக்க.. வெடுக்கென கையை உறுவிக்கொண்டு படுக்கையிலிருந்து எழுந்து சுவரோரம் நின்றாள் அவள்.

அவளைத் தொடர்ந்துத் தானும் எழுந்து அவளருகே வந்தவன்.. பின்னந்தலையைக் கோதியபடி “பாதுகாப்பு,பாதுகாப்புன்னு சொல்லி உனக்கும்,எனக்கும் சீக்கிரமே கல்யாணத்தை முடிக்கனும்னு சித்தப்பு சொன்னப்பல்லாம் எனக்குப் புரியலடி!, அப்பிடி என்ன உங்கப்பன் பண்ணிடுவான், என்னை மீறி கையக் காலைக் கட்டியா கல்யாணம் பண்ணி வைச்சிடுவான்னு நினைச்சேன்! ஆனா, இன்னிக்கு நிலைமையைப் பார்த்தப்புறம், சித்தப்பு சொன்ன மாதிரி முன்னாடியே செஞ்சுருக்கனுமோன்னு யோசிக்கத் தோணுது.. கௌரி… போதும்! நடந்த வரைக்கும் போதும்!, என்னோட வந்துடு.. 24 மணி நேரமும், உன்னை என் கூடவே வைச்சுக்கிட்டா மட்டும் தான், என் குற்ற உணர்வை என்னால போக்கிக்க முடியும்! நடந்த அத்தனையையும் மொத்தமாத் தலை முழுகிட்டு….” என்று அவன் பேசிக் கொண்டிருக்கையிலேயே…. பட்டென அவன் காலில் விழுந்திருந்தாள் அவள்.

“வே…வேண்டாம் மாமா.. நா….நான் உனக்கு வேண்டாம், உன் பக்கத்துல நிற்குற தகுதியைக் கூட இழந்துட்டு நிற்கிறேன் நான்!, என் விருப்பத்தை மீறி, எதுவும் செய்ய முடியாம, எவனோ ஒருத்தன் தாலியைக் கட்டும் போதே, உன் கூட வாழ்க்கை முழுசா வரப் போற தகுதியை நான் இழந்துட்டேன், வேண்டாம் மாமா.. நீ போயிடு.. என் வாழ்க்கையை விட்டுப் போயிடு.. கௌரின்னு ஒருத்தி வாழ்ந்ததையே மறந்துடு.. இப்டி ஒரு நிலைமைல நான் நிக்கக் கூடாதுன்னு தான் தற்கொலைக்கு முயற்சி பண்ணுனேன், கடைசில அதுவும் எனக்குக் கை கூடல!, இனியொரு முறை நீ என் முன்னாடி வந்தா… என் ஆத்தாளைப் போல நானும், தூக்குல தான் மாமா தொங்கனும்…. நீ போயிடு… போயிடு மாமா…”

-கண்ணீர் அவனது கால்களை நனைக்க.. அவள் கூறிய வார்த்தைகளைக் கேட்டவனுக்கு உடல் உறைந்து போனது. தன் கால்களை உதறி, அவள் கையை விலக்கிக் குனிந்து அவளைத் தூக்கி அவள் முகத்தை நோக்கியவனின் கண்களில் நீர் திரண்டிருந்தது.

“போயிடு, போயிடுன்னா எங்கடி போக?, செத்துத் தான் போகனும்!, கிணத்துல குதிப்பேன்,தூக்குல தொங்குவேன்னு இஷ்டத்துக்குப் பேசுற?, ஏன், சாவு உனக்கு மட்டும் தான் வருமா?,”

அவன் கைகளில் தேம்பித் தேம்பி அழுதபடி அவன் முகம் பாராமல் நின்றிருந்தவளின் கன்னத்தைப் பற்றி தன் கண்களை நோக்கச் செய்தவன்..

“எதுக்குமே என் வாழ்க்கைல நான் கலங்குனதில்லடி! தன் சுயநலத்துக்காக சாதிக் கலவரத்தைத் தூண்டி அப்பாவி மனுசங்கள உங்கப்பன் சாகடிச்சப்பக் கூட நான் கலங்கல!, எல்லாத்துக்கும் ஒரு நியாயம் கிடைக்கும்ன்னு திடமாத் தானிருந்தேன்! ஆனா… ஆனா… உன்னை.. உன்னை இப்டிப் பார்த்ததுல இருந்து உயிரில்லாம நடமாடிட்டிருக்கேன்!, என் கண் முன்னாடியே கிணத்துல குதிக்கப் பார்த்தியே! நீ செத்திருந்தா.. நான் உயிரோட இருந்திருப்பேன்னு நினைக்கிறியா?” என்றவனின் கண்களிலிருந்துக் கண்ணீர் வடிந்து அவன் தாடியை நனைக்க.. உதடு கோண, மூச்சு வாங்க… அவன் கைகளைப் பற்றியவள்…

“வே…வேண்டாம்… இ…இது.. இது… எதுவுமே வேண்டாம்… எ..ன்னை எ..ன்னை விட்டுடு மாமா…..” – என்றாள்.

அறியா வயதிலிருக்கும் சிறு பெண்ணின் வாழ்க்கையில் இத்தனை சதியையும் நடத்து முடித்து விட்டு, இனி அவள் உயிர் வாழ்வதற்கான எந்தப் பிடிப்பையும் கையில் கொடுக்காமல் விதி செய்த வேலையை எண்ணி ஆத்திரம் கொண்டு, சமயத்தில் தான் அவளுடன் இல்லாது போனதால் தான் அவளுக்கு இந்த நிலைமை ஏற்பட்டதென விடாது மருகும் மனம், இச்சூழ்நிலையை மாற்றி எழுத முடியாமல், கையாலாகாதத் தனத்துடன், யோசிக்கும் சக்தியை இழந்து நிற்கும் மூளை எனத் தன்னையே முழுவதுமாக வெறுக்கத் தொடங்கியவன், ஆத்திரத்துடன் பற்றியிருந்த அவள் கன்னத்தை அழுத்தித் தன்னருகேயிழுத்து அவள் முகம் முழுக்கக் கண்,மண் தெரியாமல் அழுந்தத் தன் இதழ்களைப் பதித்து “இப்பவும் சொல்றேன், என்னைத் தவிர உன் மேல எவனுக்குமே உரிமை இல்ல” எனச் சொல்லி அவளை விலக்கி விட்டு அந்த அறையை விட்டு வெளியேறினான்.